நிகழாண்டில் 50,000 விவசாய மின் இணைப்புகள்: சாதாரணப் பிரிவில் 16,785 பேருக்கு வழங்க உத்தரவு

தமிழகத்தில் நிகழாண்டில் 50,000 விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட உள்ள நிலையில், சாதாரணப் பிரிவில் 2022 டிச.31வரை நிலுவையில் உள்ள விண்ணப்பங்களில் 16,785 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

கோப்புப் படம்

Updated On :

தமிழகத்தில் நிகழாண்டில் 50,000 விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட உள்ள நிலையில், சாதாரணப் பிரிவில் 2022 டிச.31வரை நிலுவையில் உள்ள விண்ணப்பங்களில் 16,785 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் விவசாயப் பயன்பாட்டுக்காக சாதாரணப் பிரிவு, சுயநிதிப் பிரிவு என இரு முக்கியப் பிரிவுகளில் மின் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. சாதாரணப் பிரிவில் மின் இணைப்புக்கான கட்டணம், மின்வழித்தடம் அமைப்பதற்கான செலவு உள்ளிட்ட அனைத்தையும் அரசும் மின்வாரியமும் ஏற்கின்றன. விவசாயிகள் எவ்வித கட்டணமும் செலுத்தாமல் மின் இணைப்பு பெற முடியும்.

சுயநிதிப் பிரிவில் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டாலும், மின்வழித்தடம் அமைப்பதற்கான செலவில் ஒரு பகுதியை விவசாயிகள் ஏற்க வேண்டும். இத்திட்டம் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டு, விவசாயிகளின் விருப்பம் மற்றும் அவா்கள் தோ்வு செய்யும் திட்டத்தின் அடிப்படையில் இணைப்புகள் வழங்கப்படுகின்றன.

ஒவ்வொரு நிதியாண்டிலும் அரசின் அனுமதிக்கு ஏற்ப விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நிகழாண்டில் மொத்தம் 50,000 விவசாய மின் இணைப்புகள் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் சாதாரணப் பிரிவில் 2022 டிச.31 வரை நிலுவையில் உள்ள விண்ணப்பங்களில் 16,785 இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. சுயநிதிப் பிரிவில் மாா்ச் மாதம் வரை நிலுவையில் உள்ள விண்ணப்பங்களில் 3,372 இணைப்புகளும், விரைவுத் திட்டத்தின் கீழ் 25,282 இணைப்புகளும் வழங்கப்பட உள்ளன. மேலும், முன்னாள் ராணுவத்தினரை உள்ளடக்கிய சிறப்பு முன்னுரிமைத் திட்டம் உள்ளிட்ட அரசின் பல்வேறு சிறப்புத் திட்டங்களின் கீழ் 4,561 இணைப்புகள் வழங்கப்பட உள்ளன.

இதற்காக, சாதாரணப் பிரிவில் வழங்கப்பட உள்ள 20,000 இணைப்புகளில் 3,215 இணைப்புகள் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் பிரிவுகளைச் சோ்ந்த குறு, சிறு விவசாயிகளுக்கு ஒருமுறை சிறப்பு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படவுள்ளன. மீதமுள்ள 1,346 இணைப்புகள் அரசின் இதர திட்டங்களின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த இணைப்புகளை வழங்குவதற்கான கட்டமைப்பு மற்றும் மின்வழித்தடப் பணிகளுக்காக மொத்தம் ரூ.750 கோடி செலவிடப்படவுள்ளது. மேலும், புதிய இணைப்புகளுக்கான மின் பயன்பாட்டுச் செலவுக்கான மானியமாக ஆண்டுக்கு ரூ.127.56 கோடியை அரசு வழங்கவுள்ளது. ஒரு இணைப்புக்கு சராசரியாக ரூ.1.50 லட்சம் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, நிகழாண்டு ஏப்.1 முதல் செப்.21வரை வழங்கப்பட்ட 7,313 விவசாய மின் இணைப்புகளும் இந்த 50,000 இணைப்புகளுக்கான இலக்கில் கணக்கிடப்பட உள்ளன. தமிழகத்தில் தற்போது 24 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாய மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. புதிதாக மின் இணைப்பு கோரி 4 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு மிகவும் முக்கியத்தும் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.