சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புவங்கக் கடலில் இன்று உருவாகிறது ‘அக்வான்’ புயல்!அரிசி விலை ஜனவரியில் குறையும்: வியாபாரிகள்மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி விவகாரம்: தேசிய மகளிா் ஆணையம் விசாரணை

நல்லிணக்க ஒப்படைப்பு

சுதந்திரத்துக்கு முன்பு நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருடப்பட்ட அல்லது கொள்ளையடிக்கப்பட்ட விலை உயர்ந்த சிலைகள், மரபுச் சின்னங்கள் போன்றவை அண்மைக்காலமாக வெளிநாட்டு அருங்காட்சியகங்களில் இருந்து அந்தந்த நாட்டின் அரசுகளால் திருப்பி அளிக்கப்பட்டு வருகின்றன.

The Naga delegation members at the Pitt Rivers Museum, University of Oxford, on November 9

பிட் ரிவர்ஸ் அருங்காட்சியகத்தில் நாகா தூதுக்குழு உறுப்பினர்கள் - ENS

Updated On :

சுதந்திரத்துக்கு முன்பு நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருடப்பட்ட அல்லது கொள்ளையடிக்கப்பட்ட விலை உயர்ந்த சிலைகள், மரபுச் சின்னங்கள் போன்றவை அண்மைக்காலமாக வெளிநாட்டு அருங்காட்சியகங்களில் இருந்து அந்தந்த நாட்டின் அரசுகளால் திருப்பி அளிக்கப்பட்டு வருகின்றன.

பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், கடந்த நவம்பர் 9-ஆம் தேதி நாகா சமூகத்தைச் சேர்ந்த 39 பேரின் எச்சங்களைத் திருப்பி அளித்துள்ளது. இவை 1884-இல் நிறுவப்பட்ட அதன் பிட் ரிவர்ஸ் அருங்காட்சியகத்தில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வைக்கப்பட்டிருந்தன. இந்த எச்சங்கள் நாகா நல்லிணக்க மன்றம் மற்றும் நாகா பழங்குடியினர் பேரவையிடம் அதிகாரபூர்வமாக தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளன. நாகாலாந்தின் கோஹிமா நகரில் உள்ள நாகா ஒற்றுமைப் பூங்காவில் உடல் எச்சங்களை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன.

உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாசாரங்கள் குறித்த, மோசமான காலனித்துவக் கருத்துருக்கள் தங்களது சேகரிப்பில் உள்ளன என்பதை பிட் ரிவர்ஸ் அருங்காட்சியகம் உணர்ந்தது. அருங்காட்சியகத்தில் உள்ள காலனித்துவச் சிந்தனைகள் சார்ந்த பொருள்களை அதில் இருந்து நீக்கி, அந்தப் பொருள்கள் சார்ந்த சமூகங்களுடன் நல்லிணக்கத்துடன் புதிய காட்சியமைப்புகளைஅருங்காட்சியகத்தில் உருவாக்குவது அவசரத் தேவை என பிட் ரிவர்ஸ் அருங்காட்சியகம் திட்டமிட்டது.

தங்களது மூதாதையர்களின் மனித எச்சங்கள் உள்பட, உலகிலேயே மிகப் பெரிய நாகா பண்பாட்டுப் பொருள்களின் சேகரிப்புகள் (சுமார் 6,466 பொருள்கள்) அருங்காட்சியகங்களில் உள்ளதை நாகா மானுடவியலாளர்கள் உணர்ந்தனர். அவற்றை மீட்க 2020-இல், நாகர் தாயகங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கொண்ட ஒரு குழுவை உருவாக்கினர்.

தற்போது பிட் ரிவர்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள சுமார் 213 மூதாதையர்களின் எச்சங்களைத் திருப்பி ஒப்படைப்பது தொடர்பான பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது அவர்களது நோக்கம். காலனித்துவப் படையெடுப்புகளின்போது நினைவுப் பொருள்களாகவும், நிர்ப்பந்தத்தின் பேரிலும் எடுத்துச் செல்லப்பட்ட நாகா பொருள்கள், கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக, ஐரோப்பா முழுவதிலும் உள்ள அருங்காட்சியகங்களில் அந்நியமானவை மற்றும் பழைமையானவை எனக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பிட் ரிவர்ஸ் அருங்காட்சியகத்தில் உள்ள நாகா மூதாதையர் எச்சங்களின் சேகரிப்பில் மனித மண்டையோடுகள் மற்றும் எலும்புகள், அத்துடன் கூடைகள், ஈட்டிகள், கேடயங்கள் மற்றும் அணிகலன்கள் உள்ளிட்ட பல்வேறு கலாசாரப் பொருள்களுடன் மனித முடிகளும் அடங்கியுள்ளன. சில எச்சங்கள் நாகா கிராமங்களில் இருந்து பிரிட்டிஷ் நிர்வாகிகளால் பறிமுதல் செய்யப்பட்டவை. மற்றவை அதைத் தொடர்ந்து நிகழ்ந்த வன்முறைகளின்போது கொள்ளையடிக்கப்பட்டவை.

அஸ்ஸாமில் வளர்ந்து வந்த தேயிலை வணிகத்தைப் பாதுகாப்பதற்காக, நாகா மலைகள் என்று அழைக்கப்பட்ட பகுதியை 1832 முதல் பிரிட்டிஷார் நிர்வகிக்கத் தொடங்கினர். பிரிட்டனிலும் அவர்களது பரந்த பேரரசு முழுவதிலும் லட்சக்கணக்கான மக்களால் நுகரப்பட்ட ஒரு பொருளாகத் தேயிலை இருந்தது. 1865-இல் தேயிலை வணிகத்தின் நலனுக்கு ஆபத்தாக இருந்ததால், நாகா பழங்குடியினர் மீது பிரிட்டிஷ் ஆட்சி செலுத்தத் தொடங்கியது. லாபம் கொழிக்கும் தேயிலை வணிகம் எந்த விலையைக் கொடுத்தாவது பாதுகாக்கப்பட வேண்டியிருந்தது.

பிரிட்டிஷ் காலனித்துவத்தின் இந்தக் காலகட்டம் வன்முறை நிறைந்ததாக இருந்தது. அடங்க மறுத்த நாகர்களை ஒடுக்குவதற்காகப் பல ராணுவத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அவற்றில் கூட்டுத் தண்டனையாகக் கிராமங்களை எரிப்பதும், பலரைக் கொன்றதும் அடங்கும். வரலாற்றின் சாம்பலில் எரிந்து அழிந்துபோன பொருள்சார் பண்பாட்டின் அளப்பரிய செல்வங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. பிட் ரிவர்ஸ் அருங்காட்சியகத்தில் உள்ள நாகர் சேகரிப்பு, நாகர் சமூகத்தினருக்கு பெரும்பாலும் அணுக முடியாததாகவே இருந்துவந்த நிலையில், இந்த காலனித்துவ அனுபவங்கள் பெரும்பாலும் ஆவணக் காப்பகத் தரவுகளாகவே கருதப்பட்டன.

பூர்வகுடி ஹவாய் செயற்பாட்டாளரான எட்வர்ட் ஹலேலோஹா அயா, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல்வேறு அருங்காட்சியகங்கள் மற்றும் நிறுவனங்களுடன் இணைந்து, இவிகூபுனா (மூதாதையர்களின் ஹவாய் எலும்புக்கூட்டு எச்சங்கள்), மோஎபூ (இறுதிச் சடங்குகளுடன் தொடர்புடைய உடைமைகள்) மற்றும் மேஅகபு (புனிதப் பொருள்கள்) ஆகியவற்றை அருங்காட்சியகங்கள் திருப்பி ஒப்படைப்பதற்காகப் பணியாற்றி வருகிறார்.

பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின்போது உலகம் முழுவதும் உள்ள பல சமூகங்களுக்குச் சொந்தமான கலாசாரப் பொருள்கள் திருடப்பட்டது அண்மைக்காலங்களில் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றுள்ள நிலையில், நாகா மூதாதையரின் மண்டையோடுகள், எலும்புகள், முடிகளைக்கூட அவர்கள் கவர்ந்து எடுத்துச் சென்றுள்ளது உலகளாவிய அளவில் கவனம் பெற்றது.

தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ள 39 எச்சங்கள் என்பவை அவர்களது சேகரிப்பில் உள்ள சுமார் 6,466 பொருள்களில் மிகச் சிறிய ஒருபகுதிதான் என்றாலும், நல்லிணக்கம் மற்றும் அமைதியை நோக்கிய இந்த முன்னெடுப்பு வரவேற்புக்குரியது.

ஆக்கம் இழந்தேம்என்று அல்லாவார் ஊக்கம்

ஒருவந்தம் கைத்துஉடை யார்.

ஊக்கத்தை உறுதியாகத் தம் கைப்பொருளாக உடையவர், ஆக்கம் (இழந்துவிட்ட காலத்திலும்) இழந்துவிட்டோம் என்று கலங்கமாட்டார்.

திருக்குறள் (எண் 593) அதிகாரம்: ஊக்கம் உடைமை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.