துருக்கியில் நடைபெற்ற காலநிலை மாநாடு (சிஓபி31) எந்த முடிவும் காணாமல், எந்தவித உடன்படிக்கையும் இல்லாமல் முடிந்துள்ளது. இது பல நாடுகளுக்கும், இயற்கை ஆர்வலர்கள் பலருக்கும் பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. பேச்சுவார்த்தையில், ஏதாவது ஓர் உடன்பாடு ஏற்பட வேண்டும் என்ற முனைப்புடன் மேலும் இரண்டு நாள்கள் நீட்டிக்கப்பட்டது. இதன்மூலம் அதிக நாள்கள் நடைபெற்ற காலநிலை மாநாடு என்பதாக முடிந்ததே தவிர, உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை.
கடந்த சிஓபி30 போலவே, இந்த முறையும் தோல்விக்கு அடிப்படைக் காரணங்கள் - புவிவெப்பம் குறைப்பதற்கான நடவடிக்கையில் புதை படிம எரிபொருள்கள் (நிலக்கரி, பெட்ரோல், எரிவாயு) குறித்து எந்தக் குறிப்பும் இறுதி உடன்படிக்கையில் இடம்பெறவில்லை என்பதும், புதைபடிம எரிபொருள்களைக் கைவிட்டு புதிய தொழில்நுட்பத்துக்கு மாறும் ஏழை நாடுகளுக்கு வளரும் நாடுகள் தர வேண்டிய தகவமைப்பு நிதி (அடாப்டேஷன் ஃபைனான்ஸ்) அளவைத் தீர்மானிப்பதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளும்தான்.
புவிவெப்பம் உயர்வதைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக கடந்த 20 ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் எதுவும் முழுமைபெறாமல் பாதியில் நிற்பதே வழக்கமாகிவிட்டது. காலநிலை மாநாடுகளில் உடன்பாடு ஏற்பட்ட விவகாரங்களிலும்கூட ஏதோ ஒரு காரணத்தால் அமல்படுத்தாமல் தேக்கநிலை ஏற்படுவதைக் காண்கிறோம். அந்த வரிசையில் மற்றுமொரு மாநாடு இது.
புவி வெப்பம் அதிகரிப்பதற்கான காரணங்களில் மிக முக்கியமானது கரியமில வாயு. நிலக்கரி, கச்சா எண்ணெய், எரிவாயு ஆகிய படிம எரிபொருள்களால் வெளிப்படும் கரியமில வாயுவில் 90 சதவீதம் அனல் மின்நிலையங்கள் மற்றும் பெட்ரோல் பயன்படுத்தும் வாகனங்கள் மூலம் உருவாகின்றன. அனல் மின்நிலையங்களை மூடுவது, அல்லது தொடங்காமல் இருப்பது நிலக்கரி பயன்பாட்டைக் குறைப்பது, பெட்ரோலுக்கு பதிலாக மின்வாகனங்களை அதிகரிப்பது ஆகிய நடவடிக்கைள் மூலம் கரியமில வாயு வெளிப்பாட்டின் அளவைக் குறைக்கும் நடவடிக்கையில் ஒவ்வொரு நாடும் அதனதன் வாய்ப்புகளுக்கு ஏற்ப செயல்படுகின்றன.
ஆனால் அரபு நாடுகளும், ரஷியா போன்ற எண்ணெய் வள நாடுகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. கரியமில வாயுவைக் குறைக்க வேண்டும் என்பதை அறிவியல்பூர்வமாக செய்ய வேண்டும் என்கின்றன. கச்சா எண்ணெய் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருவாயை இழப்பதற்கு அவர்கள் தயார் இல்லை.
மாநாட்டின் முதல் வரைவு அறிக்கையில் புதை படிம எரிபொருள் என்ற வார்த்தை 6 முறை இடம்பெற்றிருந்தது. ஆனால், கடைசி வரைவு அறிக்கையில் ஓரிடத்தில்கூட புதை படிம எரிபொருள் என்ற சொல் இல்லை. இதை இந்த மாநாட்டின் விவாதத்தையே கேலிக்குரியதாக மாற்றிவிடுகிறது என்று மாநாட்டில் பங்கேற்ற பல நாடுகள் வருத்தம் தெரிவிக்கின்றன.
எண்ணெய் நாடுகளான அரபு நாடுகள் மற்றும் ரஷியா அளித்த அழுத்தம் காரணமாக இறுதி வரைவு அறிக்கையில் புதை படிம எரிபொருள் என்ற சொல் நீக்கப்பட்டுள்ளது. புதை படிம எரிபொருள்களை முற்றிலுமாக நீக்க வேண்டும் என்ற திட்டத்துக்கு பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துவந்தன. உலக எரிசக்தி தேவையில் புதை படிம எரிபொருள்களும் ஒன்றாக இருக்க வேண்டும்; இதன் பாதிப்புகளுக்கு தொழில்நுட்பத்தின் உதவியால் தீர்வு காண வேண்டும் என்பதுதான் அவர்களது வாதம்.
புதிய தொழில்நுட்பத்துக்கு மாறுவதற்கு வளரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகளுக்கு 2030 வரை 6.8 டிரில்லியன் டாலர் அல்லது ஆண்டுதோறும் 58.40 கோடி டாலர் தேவைப்படுகிறது. இதை வழங்க வேண்டிய வளர்ந்த நாடுகள் நிதி ஒதுக்கீடு செய்யத் தயங்குகின்றன. இந்த நிலையில், 2035-ஆம் ஆண்டுக்குள் இந்த தகவமைப்பு நிதி அளவை இப்போது இருப்பதைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகரிக்க வேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்தியது நகைப்புக்குரியது.
அனல் மின்நிலைய எண்ணிக்கையைக் குறைப்பதுடன், பெட்ரோல் பயன்படுத்தும் வாகனங்களின் புகையால் ஏற்படும் கரியமில வாயு அளவைக் குறைக்க மின்வாகனங்களாக மாற்ற வேண்டும் என்ற ஆலோசனைப்படி, இந்திய அரசு இதற்கு அதிக கவனம் செலுத்துகிறது. இந்திய அரசின் இந்த நடவடிக்கையால் நிகழாண்டில் மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான 6 மாதங்களில் 20 கோடி பேரல்கள் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்துள்ளது. இது அந்நிய செலாவணி அளவை கணிசமாக குறைத்துள்ளது.
அத்துடன் பெட்ரோலில் எத்தனால் கலப்பதன் மூலம் பெட்ரோல் பயன்பாட்டை மேலும் குறைக்க முயலும் அரசின் நடவடிக்கைக்கு உள்நாட்டில் எதிர்ப்பு, வழக்குகள் உள்ளிட்டவை அவற்றின் பின்னணியை வெளிச்சம் போடுகின்றன.
2009-ஆம் ஆண்டில் நடந்த ஐந்தாவது மாநாட்டைப்போல இப்போது மீண்டும் கூடிக் கலைந்திருக்கிறது 31-ஆவது காலநிலை மாநாடு. காலநிலை மாநாடு என்பதும் சரியான முடிவெடுக்காமல் கூடிக் கலைந்தால், ஐ.நா. போல உறுப்பு நாடுகள் ஆண்டுதோறும் சந்தித்துக் கலையும் சம்பிரதாயச் சடங்காக மாறக்கூடும்.
காலநிலை மாநாட்டில் பேசிய ஐ.நா. பொதுச்செயலர் அன்டோனியோ குட்டெரஸ், 'பூமியில் டயனோசர் இனம் அழிந்ததுபோல, புதை படிம எரிபொருள் பயன்பாடும் ஒழிய வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், அதற்கான வாய்ப்பு தென்படவில்லை.
குடிசெய்வார்க்கு இல்லை பருவம்; மடிசெய்து
மானம் கருதக் கெடும்.
குடி உயர்வதற்கான செயல் செய்கின்றவர்க்கு உரிய காலம் என்று ஒன்று இல்லை. சோம்பல் கொண்டு தம் மானத்தைக் கருதுவாரானால் குடிப்பெருமை கெடும்.
திருக்குறள் (எண் 1028) அதிகாரம்: குடிசெயல் வகை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


