தீபாவளியன்று கங்கா ஸ்நானம் செய்வது ஏன்? உகந்த நேரம் என்ன?
தீபாவளி அன்று கங்கா ஸ்நானம் செய்வது பற்றி..

கங்கா ஸ்நானம் - file image
அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள்! நாம் பல பண்டிகைகளையும் விஷேச தினங்களையும் கொண்டாடியும் அனுசரித்தும் வருகிறோம். அதை எதற்காகச் செய்கிறோம் என பொருளுணர்ந்து செய்தால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.
அந்த வகையில் தீபாவளி எதற்காகக் கொண்டாடுகிறோம்? எனத் தெரிந்துகொள்வோம். மக்கள் அனைவரும் இன்பமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பண்டிகைகள் கொண்டாடுகிறோம்.
இப்பண்டிகை ஐப்பசி மாதத்தில் கிருஷ்ணபட்ச சதூர்த்தசியன்று கொண்டாடப்படுகிறது. இதை நரக சதுர்த்தசி என்றும் கூறப்படுகிறது. நரக சதுர்த்தசி அன்று, நரகத்திற்குச் செல்லாமல் இருக்கவும், ஏற்கெனவே நரகத்தில் துன்பப்படுபவர்கள் அங்கிருந்து விடுபடவும் கடவுளைப் பிரார்த்திக்க வேண்டும்.
அதற்காகத்தான் எண்ணெய், அரப்புத்தூள், சந்தனம், குங்குமம், மலர்கள், தண்ணீர், புத்தாடை, இனிப்புப் பண்டங்கள், தீபம், இனிப்பு, நெருப்புப்பொறி ஆகியவற்றிற்குப் பூஜை செய்ய வேண்டும். இந்த தீபத்திருநாளில் திருமகள் அனைத்து விதமான செல்வங்களையும் வளங்களையும் அளிப்பாள்.
தீபாவளி பெயர்க்காரணம்
'தீபம்' என்றால் ஒளி, விளக்கு 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளிதரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கனம் போன்ற எதையாவது ஒன்றை அகற்ற வேண்டும். இந்த நன்னாளில் ஏதேனும் ஒரு தீயகுணத்தையாவது எரித்துவிட வேண்டும்.
கிருஷ்ணர் நரகாசுரன் என்ற அசுரனின் கொடுமைகள் தாங்காது அவனைக் கொன்று அழிக்கின்றார். அத்தருணத்தில் நரகாசுரன் ஒரு வரம் கேட்கின்றான். பல கொடுமைகள் புரிந்த தீயவன் நான் இறந்துபோகும் இந்நாளை மக்கள் என்றென்றும் மகிழ்ச்சிகரமாக கொண்டாடவேண்டும் என்பதே அவ்வரம். தீயவன் ஒருவனின் அழிவில் மகிழ்வுற்ற மக்கள் அன்று கொண்டாடிய கொண்டாட்டமே இன்றும் தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது.
கங்கா ஸ்நானம் செய்ய நல்ல நேரம்
சூரிய உதயத்துக்கு முன்னதாக இரண்டு நாழிகை முன்னதாக (48 நிமிடம்) குளிப்பது மிகவும் சிறப்பானது. காலை 5.30க்குள் எண்ணெய் குளியலை முடித்து விட வேண்டும். ஆனால், நாலரை மணிக்கு முன்னதாக குளிக்கக்கூடாது. சூரிய உதயத்திற்குப் பிறகு வழக்கமான குளியலையும் குளிக்க வேண்டும் என்பதும் நியதி.
கங்கா ஸ்நானம் செய்யும் போது கங்கா தேவியின் இந்த மந்திரத்தைச் சொல்லலாம்.
"தைலே லக்ஷ்மீர் ஜலேகங்கா தீபாவளிதினே வஸேத்"
அன்றைய தினம் நீரில் கங்கையும், எண்ணெய்யில் மகாலட்சுமியே வாசம் செய்வதாகவும் நம்பப்படுகிறது. மேலும், அரப்பில் சரஸ்வதியும், குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில் பூமா தேவியும், புத்தாடைகளில் மகா விஷ்ணுவும் வசிப்பதாக ஐதீகம்.
கங்கா ஸ்நானம் செய்தவர்களுக்கு நரக பயமும், அபமிருத்யுவும் (அகால மரணம், கோர மரணம்) ரோகங்கள் ஏற்படாமல் இருக்கும். அன்றைய தினம் கார பட்சணங்கள், வெந்நீர் குளியல், பட்டாசு ஒலி அதிர்வேட்டு போன்றவை செவ்வாயின் காரகங்களாகும்.
நரக சதுர்த்தசி ஸ்நானம் செய்ய நல்ல நேரம் - மதியம் 11.30 மணி
முன்னோர் படையல் போட நல்ல நேரம் - இரவு 7 மணி
தீபாவளியன்று எண்ணெய் குளியல் ஏன்?
நரகாசுரனை சத்யபாமா வதம் செய்தபிறகு, தன் உடலில் படிந்திருந்த ரத்தக் கறைகள் நீங்கவும், போரினால் ஏற்பட்ட சோர்வு நீங்கவும் அதிகாலையில் கிருஷ்ண பகவான் எண்ணெய் குளியல் எடுத்தார் என்கிறது புராணம். உடலில் உள்ள அனைத்து அழுக்கு, தீய விஷயங்களை அகற்றுவதே உடலைத் தூய்மைப்படுத்துவதாகும். எனவே, எண்ணெய் குளியல் உடலில் சுத்தப்படுத்தி ஒரு புதிய தொடக்கமாக அமைகிறது.
தீபாவளியன்று அதிகாலையிலே எழுந்து நீராடுவது வழக்கம். வீடுகளில் குளியலறையில் குளிப்பதால், கங்கையில் குளித்ததுபோல ஆகிடுமா என்று கேட்டால்... உண்மையில் அந்த நாளில் எங்குக் குளித்தாலும் கங்கையில் குளித்ததுபோலத்தான்.
பொதுவாக சதுர்த்தசி, சஷ்டி, ஏகாதசி, துவாதசி, அஷ்டமி, பிரதமை, பௌர்ணமி, அமாவாசை ஆகிய திதிகளில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கக்கூடாது. கட்டாயம் அன்றைய தினம் குளிக்கவேண்டும் என்றால், எண்ணெய்யில் நெய் சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால், தீபாவளி சதுர்த்தசிக்கு இது பொருந்தாது.
இந்த தீபாவளி நன்னாளில் அனைவரின் மனமும், உடலும் குளிர்ந்து இனிப்புடன் சரவெடி வெடித்து மகிழ்ச்சியாகக் கொண்டாடுவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

