முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை முறைக்கான எலும்பியல் முழங்கால் உள்வைப்புகளுக்கு (இம்பிளான்ட்) விதித்த உச்சவரம்பு விலை நிர்ணய காலத்தை தேசிய மருந்துப் பொருள்கள் விலை நிர்ணய ஆணையம் மேலும் 2 மாதங்களுக்கு (ஜனவரி 15, 2027 வரை) நீட்டித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 14-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட விலைக் கட்டுப்பாடு, நிகழாண்டு நவம்பர் 15-ஆம் தேதி வரை அமலில் இருந்தது. உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில் துறையிடமிருந்து மருந்துகளின் விலைகளை மாற்றி அமைக்குமாறு பெறப்பட்ட கோரிக்கைகளைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
எலும்பியல் முழங்கால் உள்வைப்புகளுக்கான உச்சவரம்பு விலைகள் பொதுநலன் கருதி 2017, ஆகஸ்ட் 16 முதல் நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன. 2024, செப்டம்பர் 10 அன்று வெளியான அறிவிப்பு, முழங்கால் மாற்று அமைப்புகளுக்கான உச்சவரம்பு விலையை நிர்ணயித்துள்ளது. இதன்படி, ஓர் அலகுக்கு ரூ. 5,443 முதல் ரூ. 83,546 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் 2005, அக்டோபர் 6-ஆம் தேதி எலும்பியல் உள்வைப்புகளை "மருந்துகள்' என அறிவித்தது. மேலும், நோயாளிகளின் செலவில் எந்தவொரு மருந்திலும், அதாவது அறிவிக்கப்பட்ட மருத்துவச் சாதனங்களிலும் நெறிமுறையற்ற லாபம் ஈட்டப்படாமல் இருப்பதையும், அத்தகைய மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்யவும் இந்த மருந்துகளின் விலைகளைக் கண்காணிக்கும் பொறுப்பை தேசிய மருந்துப் பொருள்கள் விலை நிர்ணய ஆணையத்துக்கு வழங்கியது. மருந்துகள் (விலைக் கட்டுப்பாடு) ஆணை 2013-ன்படி அனைத்து மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைகளைக் கண்காணிப்பதுடன், ஒரு மருந்தின் அதிகபட்ச சில்லறை விலை பத்து சதவீதத்துக்கும் அதிகமாக உயராமல் இருப்பதையும் அரசு உறுதிசெய்ய வேண்டும்.
2017, ஆகஸ்ட் 16-ஆம் தேதி தேசிய மருந்துப் பொருள்கள் விலை நிர்ணய ஆணையம் பிறப்பித்த ஓர் உத்தரவில், எலும்பியல்- முழங்கால் உள்வைப்புகளுக்கு நியாயமற்ற, அளவுக்கு மீறிய அதிக வர்த்தக லாப வரம்புகள் இருப்பதைத் தாங்கள் கவனித்துள்ளதாகவும், இதனால், லட்சக்கணக்கான நோயாளிகள் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளாமல் வலியால் தொடர்ந்து அவதிப்படுவதாகவும் தெரிவித்தது.
நாட்டில் சுமார் 15 கோடிக்கும் அதிகமான மக்கள் மூட்டுவலி பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 4 கோடி பேருக்கு முழுமையான முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுவதாக மருத்துவ மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. அறுவைச் சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கையைவிட மிகக் குறைவான அளவிலேயே, அதாவது, ஆண்டுக்கு சுமார் 2 லட்சம் முதல் 2.5 லட்சம் வரை மட்டுமே முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.
இந்தியாவில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு நாம் வாழும் நகரம், சிகிச்சை பெறும் மருத்துவமனையைப் பொருத்து ரூ. 1.17 லட்சத்தில் தொடங்கி, ரூ. 6 லட்சம் வரை செலவாகும் எனவும், இறக்குமதி செய்யப்பட்ட முழங்கால் உள்வைப்புகள், ரோபோட்டிக் அறுவை சிசிக்சை என்றால் ரூ. 10 லட்சம் வரை செலவாகும் எனவும் தெரியவருகிறது.
இறக்குமதியாளர்கள் மற்றும் பன்னாட்டு உற்பத்தியாளர்கள் முழங்கால் உள்வைப்புகளுக்கான தற்போதைய விலை வரம்பை நீக்க வேண்டும் அல்லது தளர்த்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
உற்பத்தி மற்றும் விநியோகச் செலவு உயர்வு, அந்நியச் செலாவணி மதிப்பு மாற்றங்கள், அதிகரித்து வரும் மனிதவளச் செலவுகள், சரக்குக் கட்டண உயர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு விலையை உயர்த்த அனுமதிக்க வேண்டும். குறைந்தபட்சம் 10% விலை உயர்வு அளிக்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்களுக்கான தனிப் பிரிவு, புதுமையான மற்றும் சிமென்ட் இல்லாத முழங்கால் உள்வைப்புகளுக்குத் தற்போதைய உச்சவரம்பு விலையிலிருந்து விலக்கு அளித்து, தனியான விலை நிர்ணயப் பிரிவை உருவாக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
அதேநேரத்தில், இந்திய மருத்துவச் சாதனத் தொழில் துறை கூட்டமைப்பு போன்ற உள்நாட்டு அமைப்புகள் இதற்கு நேர்மாறான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன. கொள்கை ரீதியான நிலைத்தன்மைக்காகவும், உள்வைப்புகளின் விலை திடீரென உயர்வதைத் தடுக்கவும், தற்போதைய உச்சவரம்பு விலையே தொடர வேண்டும். உள்நாட்டிலேயே குறைந்த விலையில் மேம்பட்ட தொழில்நுட்ப உள்வைப்புகள் தயாரிக்கப்படுவதால், உள்நாட்டு உற்பத்தியைப் பலப்படுத்தும் வகையில் விலை நிர்ணயக் கொள்கை அமைய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த இருதரப்பு கோரிக்கைகளையும் ஆராய்ந்து முடிவெடுக்கவே, தேசிய மருந்துப் பொருள்கள் விலை நிர்ணய ஆணையம் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை முறைக்கான எலும்பியல் முழங்கால் உள்வைப்புகளுக்கு விதித்த உச்சவரம்பு விலை நிர்ணய காலத்தை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. முழங்கால் உள்வைப்புகளுக்கான விலை நிர்ணய அறிவிப்பு, பன்னாட்டு நிறுவனங்களின் எந்தவித நிர்ப்பந்தங்களுக்கும் அடிபணியாமல், ஏழை, எளிய மக்களின் முழங்கால் மூட்டுவலிக்கான நிவாரணியாக அமையவேண்டும்.
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்.
அரசன் எல்லோரையும் பொதுவகையாக நோக்காமல்,
அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால், அதை விரும்பிச் சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர்.
திருக்குறள் (எண் 528) அதிகாரம்: சுற்றம் தழால்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


