இன்று 6 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் தூணில் இன்று தீபம் ஏற்ற உத்தரவு: உச்சநீதிமன்றம்இன்று 4-ஆவது சுற்று: முதல் வெற்றி முனைப்பில் குகேஷ் - சிண்டாரோவ்‘காசி தமிழ் சங்கமம்-5’ இன்று தொடக்கம்: வாரணாசி வந்தது தமிழகத்தின் முதல் குழு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு தொகுதி மறுசீரமைப்பு மசோதா: எதிா்க்கட்சிகள் இன்று ஆலோசனை: திமுகவுக்கும் அழைப்புநோய் எதிா்ப்பு மருந்துகள், கருக்கலைப்பு மாத்திரைகளை சட்டவிரோதமாக விற்ற 43 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

தவிர்க்க முடியாத உறவு!

சீனாவுடனான உறவு தொடர்ந்தாலும், இந்தியாவுடனான தொடர்பை நேபாளத்தால் தவிர்க்க முடியாது என்பதுடன், துண்டித்துக் கொள்ளவும் முடியாது!

இரு நாட்டு பிரதமர்கள் - எக்ஸ்

Updated On :

நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷாவின் இந்தியாவுக்கான அரசுமுறைப் பயணம் சாதாரணமாகக் கடந்து போகக் கூடியதல்ல. அவரது இரண்டு நாள் அரசுமுறைப் பயணத்துக்குப் பின்னால் ஏராளமான அரசியல் சமிக்ஞைகள் தரப்படுகின்றன. கருத்து வேறுபாடுகளுடன் பிளவுபட்டிருந்த இரு நாடுகளுக்கிடையேயான உறவு மீட்டெடுக்கப்பட்டிருக்கிறது.

காத்மாண்டு மேயராக இருந்த "ராப்' பாடகர் "பாலன்' பிரதமரான பிறகு, அவர் வெளிநாட்டுக்கு மேற்கொள்ளும் முதல் அரசுமுறைப் பயணம் இது. மார்ச் மாதம் ராஷ்ட்ரீய சுதந்திரா கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு, ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்ற கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா சென்றார் என்றாலும், வேறு எந்தவொரு நாட்டுக்கும் அவர் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவில்லை.

பொதுவாகவே நேபாளத்தில் பதவியேற்கும் ஒவ்வொரு பிரதமரும் அவர்களது முதலாவது அரசுமுறைப் பயணத்துக்குப் புது தில்லியைத் தேர்ந்தெடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். 2008-இல் புஷ்ப கமல் தாஹல் பிரசண்டாவும், 2014-இல் கே.பி. சர்மா ஓலியும் இதற்கு விதிவிலக்கு. அவர்கள் முதல் அரசுமுறைப் பயணத்துக்குத் தேர்ந்தெடுத்த நாடு சீனா.

இப்போது பாலேந்திர ஷா, முந்தைய வழக்கத்தைப் பின்பற்றியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.இந்திய எல்லையை ஒட்டிய நேபாளப் பகுதியில் வசிக்கும் "மாதேசிகள்' எல்லா விதத்திலும் இந்தியக் கலாசாரத்துடன் இணைந்தவர்கள். உத்தர பிரதேசம், பிகார் மாநிலங்களுடன் நெருங்கிய தொடர்பும், திருமண உறவும் வைத்திருப்பவர்கள். அவர்களில் ஒருவரான பாலேந்திர ஷா பிரதமரானபோது, இந்தியாவுக்கு மிகவும் நெருக்கமானவராக அவர் இருப்பார் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், எந்தவித ஆதிக்கத்துக்கும், அதிகாரத்துக்கும் பணியாதவராகத் தன்னைக் காட்டிக்கொள்ள விரும்பிய பிரதமர் பாலன், இந்தியாவுடனான நெருக்கத்தை வெளிப்படுத்த விரும்பவில்லை.

பாலேந்திர ஷா பிரதமராக இருந்தாலும், ஆட்சியும், கட்சியும் ராஷ்ட்ரீய சுதந்திரா கட்சியின் தலைவரான ரவி லாமிச்சானேயின் வழிகாட்டுதலுடன்தான் நடப்பதாகக் கூறப்படுகிறது. ஜூன் மாத ரவி லாமிச்சானேயின் இந்திய விஜயத்தின் பின்னணி இரு நாட்டு உறவை சீர்திருத்துவதுதான். அதைத் தொடர்ந்து, நேபாள வெளியுறவு அமைச்சரும், நிதியமைச்சரும் தில்லிக்கு விஜயம் மேற்கொண்டனர். நேபாள வெளியுறவுச் செயலர் அம்ரித் பகதூர் ராயின் அழைப்பை ஏற்று, இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி இந்த மாதத்தின் முதல் வாரத்தில் நேபாள விஜயம் மேற்கொண்டார். அவர் மட்டுமல்ல, இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதி தீரஜ் சேத் ஆகஸ்ட் மாதம் காத்மாண்டு சென்றது மட்டுமல்ல, பிரதமர் பாலேந்திர ஷாவை நேரில் சந்தித்து உரையாடினார்.

ஜெனரல் சேத்தின் விஜயத்துக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. கொவைட் 19 பெருந்தொற்றைத் தொடர்ந்து, இந்திய ராணுவத்துக்கு நேபாளத்தில் இருந்து கூர்க்காக்களை சேர்த்துக்கொள்வது தடைபட்டது. அந்தத் தடை விலக்கப்பட்டாலும், இந்திய அரசு அறிமுகப்படுத்தி இருக்கும் "அக்னி வீர்' திட்டத்தை, நேபாள அரசு ஏற்காததால், கூர்க்காக்கள் இந்திய ராணுவத்தில் இணைவது தடைபட்டிருக்கிறது. ஜெனரல் சேத்தின் நேபாள விஜயமும், நேபாளப் பிரதமரின் இந்திய விஜயமும் அந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பதவி ஏற்ற முதல் ஓராண்டு காலம், எந்தவொரு நாட்டுக்கும் தான் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளப் போவதில்லை என்று அறிவித்திருந்த பிரதமர் பாலேந்திர ஷா, இப்போது தனது வைராக்கியத்தைத் தவிர்த்துக் கொண்டு, இந்திய விஜயம் மேற்கொண்டதன் பின்னால், அரசியல் அழுத்தம் மட்டுமல்லாமல், நேபாளத்தின் பொருளாதார பிரச்னைகளும் இருக்கின்றன.

நேபாளம் சந்தித்த மிகவும் இக்கட்டான இயற்கை இடர்களில் இந்தியா எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நேசக் கரம் நீட்டி உதவியதை, அந்த நாட்டு மக்கள் நன்றியுடன் நினைவுகூர்கிறார்கள். நேபாளத்தில் ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட எதிர்பாராத வெள்ளப்பெருக்கின்போது மட்டுமல்ல, 2015 பூகம்பத்தின்போதும், மேற்காசியப் போர் காரணமாக ஏற்பட்ட பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டின்போதும் இந்தியாவின் உதவியால்தான் நேபாளத்தால் ஓரளவுக்கு சமாளிக்க முடிந்திருக்கிறது. சீனா உடனடியாக உதவிக் கரம் நீட்டவில்லை என்பதை நேபாள அரசு உணராமல் இல்லை. பிரதமரின் விஜயத்துக்கு அதுதான் அடிப்படைக் காரணம்.

சீதா தேவி பிறந்த நேபாளத்தின் ஜனக்பூர் தாமிற்கு அயோத்தியிலிருந்து சரயு-கமலா விரைவு ரயில் போக்குவரத்து தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, கெளதம புத்தர் ஞானம் பெற்ற புத்த கயாவுக்கும், அவர் பிறந்த நேபாளத்தில் உள்ள லும்பினிக்கும் இடையே சுற்றுலா வழித்தடங்கள் மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. நேபாளத்தில் பல புனல் மின் நிலையங்கள் இந்திய நிறுவனங்களால் அமைக்கப்பட்டிருக்கின்றன; அமைக்கப்படுகின்றன.நேபாளப் பிரதமரின் இந்திய விஜயம், இரு நாட்டு உறவில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி இருக்கிறது. சீனாவுடனான உறவு தொடர்ந்தாலும், இந்தியாவுடனான தொடர்பை நேபாளத்தால் தவிர்க்க முடியாது என்பதுடன், துண்டித்துக் கொள்ளவும் முடியாது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.