தலைநகர் தில்லியை ஒட்டிய உத்தர பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இளம் தம்பதி, 11, 7, 3 வயதுக் குழந்தைகள் என ஐந்து பேர் கடந்த சனிக்கிழமை உயிரிழந்துள்ளனர். அவர்கள் முந்தைய நாள் இரவு சாப்பிட்ட நூடுல்ஸில் நச்சுத்தன்மை கலந்திருக்கலாம் என்று காவல் துறையினர் சந்தேகிக்கிறார்கள்.
உணவுப் பொருள்களில் கலப்படம் செய்வதாகத் தொடர்ச்சியாகப் புகார்கள் வந்ததால் மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக அதிகாரிகள் கடந்த மே மாதம் கடைசி வாரத்தில் மூன்று நாள்கள் தொடர்ந்து சோதனை நடத்தினர். பாலில் சமையல் எண்ணெய் கலந்தது, மாம்பழங்களை ரசாயனக் கல் கொண்டு செயற்கையாகப் பழுக்க வைத்தது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளுக்காக 33 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரூ.20.67 லட்சம் மதிப்பிலான உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன; 27 நிறுவனங்களுக்கு "சீல்' வைக்கப்பட்டது.
மீண்டும் மகாராஷ்டிரத்தில் கடந்த அக். 14 மற்றும் 15-ஆம் தேதிகளில் சோதனை நடத்தி ரூ. 48 லட்சம் மதிப்பிலான காலாவதியான உணவுப் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதில் அதிர்ச்சி தரக்கூடிய தகவல் என்னவென்றால், காலாவதி பொருள்களை அழித்துவிட்டதாக ஆவணங்கள் அளித்துவிட்டு அதை மீண்டும் விற்பனைக்கு அனுப்பியதாக ரிலையன்ஸ், பிளிங்கிட், ஸொமேட்டோ அலுவலர்கள் 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் செயல்படும் சூர்யா அக்ரோ ஃபுட் நிறுவனத் தயாரிப்பான "பிரியா கோல்டு' பிஸ்கெட்டுகளை இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணைய (எஃப்எஸ்எஸ்ஏஐ) அதிகாரிகள் அண்மையில் ஆய்வு செய்தபோது, அதில் நார்ச்சத்துக்கான மூலப்பொருளாக மனிதர்கள் உண்பதற்குத் தகுதியற்ற கால்நடைத் தீவனமான தவிடு சேர்க்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்நிறுவனத்தின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த பிஸ்கெட்டுகள் நம் நாட்டின் பல பகுதிகளுக்கு அனுப்பப்படுவது மட்டுமல்லாமல் 20 நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாதை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் "டோட்லா டைரி' பாலில் சோப்புத் தூள் கலந்திருப்பது எஃப்எஸ்எஸ்ஏஐ அதிகாரிகளின் சோதனையில் தெரியவந்துள்ளது. நாம் காலையில் எழுந்தவுடன் அன்றாடம் பயன்படுத்தும் தேயிலைத் தூளில் மரத் தூள் கலக்கப்படுகிறது. தேநீருக்குப் பயன்படுத்தப்படும் சர்க்கரையில் சுண்ணாம்புத் தூள், வாஷிங் சோடா போன்றவை கலக்கப்படுகின்றன.
"10 மிளகு கையில் இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம்' என்று கூறுவார்கள். அந்த மிளகிலும் உலர்ந்த பப்பாளி விதையைக் கலக்கின்றனர். சுத்தமான தேன் மருத்துவ குணங்கள் நிறைந்தது; அதில் வெல்லப்பாகு, சர்க்கரைப் பாகு போன்றவை கலக்கப்படுகின்றன.
குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் ஐஸ்கிரீமில் விலங்கு கொழுப்புகள், சமையல் எண்ணெய்களில் ஆமணக்கு எண்ணெய், வெல்லம் வெளிர்நிறமாகத் தெரிய மைதா, மிளகாய்த்தூளில் செங்கல் பொடி, மரத்தூள், நெய்- வெண்ணெய்யில் டால்டா போன்றவையும் நுகர்வோர் நலனைப் பற்றி சற்றும் கவலை இல்லாமல் சேர்க்கப்படுகின்றன.
நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் கறிவேப்பிலை, கொத்தமல்லி உள்ளிட்ட அனைத்தும் பளபளப்பாகத் தெரியவும், வாடாமல் இருக்கவும் அதன் மேல் ரசாயனங்கள் தெளிக்கப்படுகின்றன. கடைகளில் விற்கப்படும் பொருள்களில் கலப்படம் உள்ளதா என்பதை சாதாரண மக்கள் கண்டறிவது அவ்வளவு சுலபமானதல்ல. இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் அது சாத்தியமானதும் அல்ல.
கலப்படம் குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர்கள்தான் சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், அந்தத் துறையில் போதிய அளவில் அலுவலர்கள் இல்லை. இருப்பவர்களில் சிலர் அவ்வப்போது சோதனை செய்யும்போது கையூட்டு கொடுத்து தப்பிப்பதை சில வர்த்தகர்கள் வாடிக்கையாக்கி இருக்கிறார்கள். லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு எதற்கும் அஞ்சாமல் தொடர்ந்து இத்தகைய செயல்களில் வர்த்தகர்கள் ஈடுபடுகின்றனர். அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்படுவது, சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது என்பது இந்தப் பிரச்னைக்கான தீர்வாகத் தெரியவில்லை.
உணவில் கலப்படத்தால் ஏதோ ஓரிருவர் மட்டும் தற்காலிகமாக பாதிக்கப்படுவதில்லை. இது ஒரு சங்கிலி போன்றது.
ஒட்டுமொத்த சமுதாயத்தின் எதிர்காலத்தையும் பாதிக்கக்கூடியது. இதனால் அனைவரின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகி வீட்டுக்கும் நாட்டுக்கும் பெரும் சுமையாக மாறுகிறது.
தேவையான எண்ணிக்கையில் அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். அவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து சோதனை நடத்துவதை உறுதிப்படுத்த வேண்டும். கலப்படத்தில் ஈடுபடுபவர்கள் பிணையில் வெளியே வரமுடியாத கிரிமினல் குற்றவாளிகளாக்கப்படாமல் இருக்கும் வரை இந்தப் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படாது.
சொல்லப் பயன்படுவர் சான்றோர்; கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்.
அணுகிக் குறை சொல்லிய அளவிலேயே சான்றோர் பயன்
படுவர்; கரும்புபோல் அழித்துப் பிழிந்தால்தான் கீழ்மக்கள் பயன்படுவர்.
திருக்குறள் (எண் 1078) அதிகாரம்: கயமை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


