விலங்குகளிலிருந்து பரவும் ‘ஷமோண்டா’ தீநுண்மி: பிரான்ஸில் முதல் மனித பாதிப்புவார இறுதி, முகூா்த்த தினம்: 2,725 சிறப்பு பேருந்துகள் இயக்கம்சென்னையில் ஆவின் பால் விநியோகத்தில் பாதிப்பில்லை: ஆவின் நிா்வாகம்தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான எந்தவொரு பதவிநீக்க தீா்மானமும் விதிகளின்படி பரிசீலிக்கப்படும்: ஓம் பிா்லாஇன்று சென்னைக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

அதிர்ச்சியளிக்கவில்லை!

மனிதர்களைப் போலவே, நிர்வாகமும் தவறுகளில் இருந்து பாடம் படிக்க வேண்டும்.

நெரிசல் ஏற்பட்ட இடத்திலிருந்து...

Updated On :

மனிதர்களைப் போலவே, நிர்வாகமும் தவறுகளில் இருந்து பாடம் படிக்க வேண்டும். இந்தியாவில் மீண்டும், மீண்டும் முன்பு போலவே தவறுகள் தொடர்வதுதான் வேதனையளிப்பதாக இருக்கிறது. கடந்த வாரம், மேற்குவங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட நெரிசலில் 19 பேர் உயிரிழந்திருப்பது, அதற்கு இன்னுமொரு எடுத்துக்காட்டு.

நவராத்திரிப் பண்டிகையையொட்டி, கொல்கத்தாவின் பல பகுதிகளில் துர்கா பூஜை பந்தல் அமைக்கப்படுவது வழக்கம். பக்தர்கள் பல்வேறு பந்தல்களில் அமைக்கப்பட்டிருக்கும் துர்கையம்மனை வழிபடுவார்கள். கொல்கத்தாவின் சோர்பகன் பகுதியின் துர்கா பூஜை பந்தல் மிகப் பழைமையான ஒன்று. அந்தப் பந்தலைப் பார்வையிட ஏராளமானோர் காத்திருந்த வேளையில், சற்றும் எதிர்பாராமல் கனமழை பெய்யத் தொடங்கியது.

பலர் முண்டியடித்துக்கொண்டு பந்தலில் ஒதுங்க முற்பட்டபோது, பந்தலுக்குள் இருந்தவர்கள் வெளியேற முடியாமல் நெரிசல் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் மோதி விழுந்தனர். துர்கா தேவியின் சிலைக்குக் கீழே இரும்பால் அமைக்கப்பட்டிருந்த அடிப்பகுதி சரிந்ததில், மொத்தப் பந்தலும் சரிந்துவிட்டது. அதில் சிக்கி 19 பேர் அங்கேயே உயிரிழந்தனர் என்றால், 25 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

முந்தைய ஆண்டுகளைவிட இந்த ஆண்டு கொல்கத்தாவில் துர்கா பூஜை மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

முதன்முறையாக பாரதிய ஜனதா கட்சியின் அரசு அமைந்திருக்கும் நிலையில், ஹிந்து மதப் பண்டிகைக்கு முன்னுரிமை அளிப்பதை வெளிப்படுத்தும் வகையில் துர்கா பூஜை கொண்டாடப்பட வேண்டும் என்று முதல்வர் சுவேந்து அதிகாரி அறிவித்திருந்தார்.

இந்த ஆண்டு, கடந்த ஆண்டைவிட 25% கூடுதலாகப் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. சுமார் 57,000 துர்கா பூஜை பந்தல்கள் அமைக்கப்பட்டு, அங்கே கலை நிகழ்ச்சிகள், அன்னதானம் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டன. மும்பையிலும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் விநாயகர் சதுர்த்தியையொட்டி நடைபெறும் கணபதி பூஜையைப்போல, கொல்கத்தாவில் வழக்கமாகக் கொண்டாடப்படும் துர்கா பூஜை இந்த ஆண்டு வழக்கத்தைவிட அதிகமான பக்தர்களை ஈர்த்தது எனலாம்.

இந்த விபத்து ஏற்படுவற்கு மூன்று காரணங்கள் கூறப்படுகின்றன. முதலாவது காரணம், வெளியில் இருந்தவர்கள் திடீர் மழை காரணமாகப் பந்தலுக்குள் ஓடிப் பாதுகாப்புத் தேட முற்பட்டது; இரண்டாவது காரணம், அந்தப் பந்தலுக்கு நுழைவதற்கும் வெளியேறுவதற்குமான பாதை மிகவும் குறுகலாக இருந்தது; போதுமான காவல் துறையினர் பாதுகாப்புக்கும், கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும் இல்லாமல் இருந்தது மூன்றாவது காரணம்.

அக்டோபர் மாதத்தில் இதுபோல திடீர் திடீரென மழை வருவது கொல்கத்தாவுக்குப் புதிதல்ல. முன்கூட்டியே உணர்ந்து, பந்தலுக்குள் பக்தர்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாகாமல் தடுத்திருக்க வேண்டும். அவசரகால வெளியேற்றத்துக்கு வழிகோலாமல் இருந்தது இன்னொரு தவறு. நெரிசல் ஏற்படும்போது வெளியேற வழி இல்லாமல் போனதால்தான், 2024 ஹாத்ரஸ் நெரிசலில் 121 பேர் உயிரிழந்தனர் என்பதை மறந்துவிடக் கூடாது.

2005 மகாராஷ்டிர மாநிலம் சதாரா; 2008 ஹிமாசல பிரதேசம் பிலாஸ்பூர்; ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர்; 2010 உத்தர பிரதேசம் பிரதாப்கர்; 2011 சபரிமலை, ஹரித்வார்; 2012 பிகார் மாநிலம் பாட்னா; 2013 மத்திய பிரதேசம் தாதியா; 2014 பாட்னாவின் காந்தி மைதானம்; 2015 ஆந்திர பிரதேசம் ராஜமுந்திரி; 2022 ஜம்மு-காஷ்மீர் வைஷ்ணவி தேவி; 2023 மத்திய பிரதேசம் இந்தூர்; 2025 பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவைத் தொடர்ந்து அரங்கேறி இருக்கிறது பக்தர்கள் உயிரிழந்திருக்கும் இப்போதைய கொல்கத்தா பந்தல் விபத்து.

மக்கள் அதிக அளவில் கூடும்போது நெரிசல் ஏற்படுவது இயல்பு என்பதை உணர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதுதான் நல்ல நிர்வாகத்துக்கான அடையாளம்.

குறிப்பிட்ட கொள்ளளவு உள்ள இடங்களில் அதிக அளவில் மக்கள் கூடினால் நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. அதை முறைப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸில் 1985-இல் இத்தாலிய கால்பந்தாட்ட ரசிகர்கள் ஹெய்ஸல் மைதானத்தில் தாக்கப்பட்டபோது 39 பேர் நெரிசலில் உயிரிழந்தனர்; 2003 -இல் அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள இரவு விடுதியில் 21 பேர் நெரிசலில் சிக்குண்டு இறந்தனர்; ஜெர்மனி டூயிஸ்பர்க்கில் 2010-இல் இசை நிகழ்ச்சியின்போது 21 பேர் நெரிசலில் இறந்தனர்-அந்த

நிகழ்வைத் தொடர்ந்து கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த அந்த நாடுகளில் கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.அதற்கு நேர்மாறாக, இந்தியாவில் ஒவ்வொரு நெரிசல் நிகழ்வுக்குப் பிறகு இழப்பீடு அறிவிப்புகள் வருவதும், ஒரு சில அதிகாரிகளும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடுப்பதும் நடக்கிறதே தவிர, முறையான வழிமுறைகள் பின்பற்றப்படுவது உறுதி செய்யப்படுவதில்லை. கூட்டம் குறித்த முறையாக கணிப்பு இல்லாமல் இருப்பது; போதுமான முன்னேற்பாடுகள் செய்யப்படாமல் போவது; போதிய அளவு காவல் துறையினர் கூட்டத்தை முறைப்படுத்த இல்லாமல் இருப்பது- இந்த மூன்று காரணங்கள் தெரிந்தும்கூட, நாம் விபத்துகளைச் சந்திக்கிறோம் என்றால், அதை என்னவென்று சொல்வது?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.