
தில்லியில் தேசிய ஆசிரியர்கள் தினத்தை (செப்.5) முன்னிட்டு, மத்திய அரசு 82 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கி கெüரவித்தது.
தனது அதிகாரபூர்வ இல்லத்தில் விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடிய போது, விருதாளர்களிடம் இரண்டு விஷயங்களை வலியுறுத்தினார்.
போதைப் பொருள் பயன்பாடு, அதிக நேர கைப்பேசி பயன்பாடு ஆகிய இரண்டும் மாணவர்களின் நலனுக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதால், ஆசிரியர்கள் விழிப்புடன் செயல்பட்டு, இத்தகைய பழக்கங்களில் இருந்து அவர்கள் விடுபட உதவ வேண்டும் என ஆசிரியர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
கைப்பேசியை அதிக அளவில் பயன்படுத்துவதால் உடல்நலன், மன நலன், ஒட்டுமொத்த வாழ்க்கை முறை ஆகியவற்றில் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்ற எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு பிரசாரம் அண்மைக்காலமாகவே முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, கண் மற்றும் தூக்கம் சார்ந்த பிரச்னைகள், கழுத்து எலும்பு, முதுகுத்தண்டு, கட்டைவிரல் மூட்டுகள் பாதிப்பு, உடல் பருமன், இதய நோய் பாதிப்பு, மன அழுத்தம், ஞாபக மறதி என இந்தப் பட்டியல் நீள்கிறது. இவற்றைவிட மோசமான நீண்டகால பாதிப்புகளையும் கூறி, எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள்.
அவற்றில் முக்கியமானது தகவமைப்பு மாற்றங்களால் ஏற்படும் பரிணாம ஆபத்து. தொடர்ந்து பயன்படுத்தப்படும் உறுப்புகள் வளர்ந்து தகவமைப்பு மாற்றம் பெறுவதும், பயன்படுத்தப்படாத உறுப்புகள் தேய்ந்து நாளடைவில் மறைந்து போவதும்தான் பரிணாமத்தின் முக்கியக் கூறு.
கைப்பேசியின் அதிகப்படியான பயன்பாடு மனித உடலில் குறுகியகால பாதிப்புகளைத் தாண்டி, பல தலைமுறைகளுக்குப் பிறகு மனித உடலமைப்பையே மாற்றக்கூடிய சில பரிணாம ஆபத்துகளை ஏற்படுத்தலாம் என்பதுதான் அறிவியலாளர்களின் அண்மைக்கால எச்சரிக்கை.
எப்போதும் குனிந்தபடி திரையைப் பார்ப்பதால், கழுத்துஎலும்பில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இதனால், எதிர்காலத் தலைமுறையினருக்கு கழுத்து எலும்பின் வளைவு இயற்கையிலேயே மாறக்கூடும் என்பதுடன், கைப்பேசியைத் தாங்குவதற்காகக் கழுத்து தசைகள் கடுமையாக உழைப்பதால், மண்டை ஓட்டின் பின்பகுதியில் சிறிய எலும்பு வளர்ச்சி ஏற்படுவதாகவும் சில ஆய்வுகள் கூறுகின்றன.
மேலும், கைப்பேசியைத் தாங்கிப்பிடிக்கும் சுண்டுவிரல் மற்றும் கட்டைவிரல்களின் எலும்புகள் மற்றும் மூட்டுகளின் வடிவம் மாறவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேபோல, மனித கண்கள் தொலைவில் உள்ள பொருள்களைப் பார்ப்பதற்கு ஏற்றவாறு பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளன. ஆனால், எப்போதும் அருகில் இருக்கும் திரையையே பார்ப்பதால், எதிர்கால மனிதர்களுக்கு கிட்டப்பார்வை என்பது ஒரு பொதுவான மரபணு பண்பாக மாறக்கூடும்.
எதற்கும் மூளையைப் பயன்படுத்தாமல், கூகுள் அல்லது செயலிகளைச் சார்ந்திருப்பதால், மூளையின் நினைவாற்றலைச் சேமிக்கும் பகுதி சுருங்கவும் வாய்ப்புள்ளது. இது மனிதரின் இயல்பான சிந்தனைத் திறனைக் குறைக்கலாம்.
அதேபோல, கைப்பேசி திரையில் இருந்து வரும் நீல ஒளி, தூக்கத்தைத் தரும் மெலடோனின் ஹார்மோனைப் பாதிக்கிறது. தொடர்ச்சியான தூக்கமின்மை மனிதனின் உயிரியல் கடிகாரத்தை மாற்றி, டிஎன்ஏ அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் இரண்டு அறிஞர்கள் சேர்ந்து மேற்கொண்ட ஆய்வின் அறிக்கை கடந்த ஆண்டு மே மாதம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி, மனிதனுக்கும் அறிதிறன்பேசிக்கும் இடையேயான உறவு ஒட்டுண்ணி உறவாக மாறிவருகிறது. அறிதிறன்பேசியில் உள்ள செயலிகள் நாம் இடைவிடாத சீற்றத்தில் கொதித்துக்கொண்டிருக்கவும், நமது நடத்தையைத் தூண்டும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன என்கிறது அந்த ஆய்வு.
கைப்பேசி விஷயத்தில் சுரண்டலை நாம் எளிதில் கண்டறிய முடியாது என்பதால் அதை முறியடிக்க வேண்டும் என அவர்கள் கூறுகிறார்கள். தங்கள் சேவையை கைப்பேசி செயலிகள் மூலம் இணையவழியில் வழங்கும் நமது அரசுகளும், கைப்பேசி மீதான நமது சார்பை மேலும் உறுதிசெய்துள்ளன.
நமது வங்கிக் கணக்குகளை அணுகவோ, அரசு சேவைகளைப் பெறவோ கைப்பேசியைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் காரணமாக, தனிநபர் தேர்வு மட்டுமே பயனர்களின் ஒட்டுண்ணி உறவை நம்பகமான நிலைக்குக் கொண்டுசெல்ல முடியாது என்றும் அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
கைப்பேசியால் ஏற்படும் இத்தனை பாதிப்புகளை உணர்ந்த நிலையில், உலக அளவில் 100-க்கும் அதிகமான நாடுகள் (சுமார் 58% நாடுகள்) பள்ளிகளிலோ அல்லது பொதுவாகவோ சிறுவர்கள் கைப்பேசி பயன்படுத்துவதைத் தடைசெய்துள்ளன அல்லது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
யுனெஸ்கோ அமைப்பின் உலகளாவிய கல்விக் கண்காணிப்பு அறிக்கையின்படி, உலகெங்கிலும் உள்ள 114-க்கும் அதிகமான கல்வி அமைப்புகள் இந்தத் தடையை தீவிரமாகப் பின்பற்றி வருகின்றன.
கடந்த ஜூன் 2023-இல் வெளியான ஓர் அறிக்கையின்படி, 24 சதவீத நாடுகளில் மட்டும் தடைகள் இருந்தன. கடந்த 2025 தொடக்கத்தில் இது 40 சதவீதமாகவும், மார்ச் 2026-இல் 58 சதவீதமாகவும் தடை உயர்ந்துள்ளது.
பிரச்னைகள் நிறைந்த இந்த பின்புலத்தின் அடிப்படையில்தான் பிரதமர் நரேந்திர மோடி, மாணவர்கள் கைப்பேசியைத் தவிர்க்க உதவ வேண்டும் என தேசிய நல்லாசிரியர்களிடம் வைத்த வேண்டுகோள் முக்கியத்துவம் பெறுகிறது.
எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
எப்பொருள் எத்தன்மையதாய்த் தோன்றினாலும் (அத் தோற்றத்தை மட்டும் கண்டு மயங்காமல்) அப்பொருளின் உண்மையான இயல்பை அறிவதே மெய்யுணர்வாகும்.
திருக்குறள் (எண் 355) அதிகாரம்: மெய் உணர்தல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






