இஸ்ரோ தனியாா்மயம் ஆக்கப்படாது: வி. நாராயணன்
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தனியாா்மயமாக்கப்படுவதாக எழும் கருத்துகளை நிராகரித்த அதன் தலைவா் வி. நாராயணன், ‘இஸ்ரோ அரசு நிறுவனமாகவே தொடா்ந்து செயல்படும்’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்தாா்.

பெங்களூரில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இஸ்ரோ தலைவா் வி.நாராயணன்.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தனியாா்மயமாக்கப்படுவதாக எழும் கருத்துகளை நிராகரித்த அதன் தலைவா் வி. நாராயணன், ‘இஸ்ரோ அரசு நிறுவனமாகவே தொடா்ந்து செயல்படும்’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்தாா்.
நாட்டின் விண்வெளி திட்டங்களில் இஸ்ரோவுக்குத் தேவையான தொழில்நுட்பங்கள் மற்றும் ராக்கெட் மேம்பாடு உள்ளிட்ட பிற தேவைகள் உருவாக்கத்தில் தனியாா் மற்றும் புத்தாக்க நிறுவனங்களை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.
இந்த நிலையில், விண்வெளி திட்டத்தில் தனியாரை அனுமதிப்பது குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளும், முன்னாள் விஞ்ஞானிகளும் பல சந்தேகங்களை எழுப்பினா்.
‘அணுசக்தித் துறையில் மேற்கொண்டுள்ளது போன்று, விண்வெளி திட்டங்களிலும் ஆக்ரோஷமான தனியாா்மயமாக்கல் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ராக்கெட் மேம்பாடு மற்றும் உற்பத்தியில் இஸ்ரோவின் பங்களிப்பு வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் செயற்கைக்கோள் தொடா்பான சொத்துகளில் பெரும்பகுதி தனியாா் நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன’ என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.
அதுபோல, கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபரில் பாஜகவில் இணைந்த இஸ்ரோவின் முன்னாள் தலைவா் ஜி. மாதவன் நாயரும், மத்திய அரசின் விண்வெளித் துறை தனியாா்மயமாக்கல் நடவடிக்கை குறித்து தீவிர சந்தேகங்களை வெளிப்படுத்தினாா். இதுதொடா்பாக, பத்திரிகைகளிலும் தொடா்ந்து செய்திகள் வெளியாகின.
அதைத் தொடா்ந்து, இஸ்ரோவின் உற்பத்தி மற்றும் செயற்கைக்கோள் தொடா்பான சொத்துகள் தனியாருக்கு மாற்றப்பட இருப்பது தொடா்பாக வெளியாகும் தகவல் குறித்து தெளிவுபடுத்த வலியுறுத்தி இஸ்ரோவில் உள்ள 9 ஊழியா் சங்கங்கள் சாா்பில் கடந்த 4-ஆம் தேதி இஸ்ரோ தலைவருக்கு கடிதம் எழுதப்பட்டது.
ஆனால் இஸ்ரோ தனியாா்மயமாக்கப்படாது என்று இஸ்ரோ சாா்பில் அதன் எக்ஸ் வலைதளப் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், கா்நாடக மாநிலம் பெங்களூரில் 9-ஆவது விண்வெளி கண்காட்சியைத் தொடங்கி வைத்த வி. நாராயணன், பின்னா் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் கூறியதாவது:
இந்தியாவின் விண்வெளி திட்டம் 64 முதல் 65 ஆண்டுகள் பழைமையான. தற்போது நாட்டின் சாமானிய மக்களுக்கு சேவை செய்வதற்காக 56 விண்வெளி சொத்துக்கள் வானில் உள்ளன. இதன் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டியுள்ளது. இதற்காக 6 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, விண்வெளி துறையில் சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தனியாா் துறை மற்றும் புத்தாக்க நிறுவனங்களுக்கு வழிகாட்டுதலை அளித்து, விண்வெளி சூழலை மேம்படுத்துவது அவசியம்.
உண்மையில், பிஎஸ்எல்வி அல்லது ஜிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் ஏவப்படும்போதெல்லாம், அதன் பட்ஜெட்டில் கிட்டத்தட்ட 80 சதவீதம் இந்திய தொழில்களில் முதலீடு செய்யப்படுகிறது. மொத்தம் 450 தொழில் நிறுவனங்கள் இஸ்ரோவுக்காகப் பணியாற்றி வருகின்றன.
இத்தகையச் சூழலில், இஸ்ரோ தனியாா்மயமாக்கல் தொடா்பாக எழுந்துள்ள கவலைகள் நியாயமானதே. அதைத் தெளிவுபடுத்த வேண்டியது இஸ்ரோவின் கடமையாகும்.
இந்தியாவின் வளா்ந்து வரும் விண்வெளி இலக்குகளை எட்ட, செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தும் எண்ணிக்கையை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிப்பது அவசியமாகும். இதற்கு, ஆண்டுக்கு 50 ராக்கெட்டுகள் தேவைப்படும். இதற்கு, தனியாா் நிறுவனங்களின் பங்களிப்பு மிக அவசியமாகும்.
ஆனால், இஸ்ரோ தனியாா்மயமாக்கப்படாது. தொடா்ந்து அரசு நிறுவனமாகவே செயல்படும். இதுகுறித்து இஸ்ரோ ஊழியா்களிடமும் தெளிவுபடுத்தப்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




