
ஒடிஸா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள ரணகந்தா பகுதியில் அமைந்திருக்கிறது அடர்ந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி. இந்த வனப்பகுதியில் வாழும் கிராமவாசிகள் சிலரின் கண்களில், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஐந்து குரங்குக் குட்டிகள் தென்பட்டதை அதிருஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். அவை சாதாரண இந்தியக் குரங்குகள் அல்ல என்பது அப்போது அவர்களுக்குத் தெரியவில்லை.
அவற்றை பாதுகாப்பாகக் காப்பாற்றி, விலங்கியல் மருத்துவர்களிடம் சிகிச்சைக்குக் கொண்டுபோனபோதுதான், அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. செப்டம்பர் 8-ஆம் தேதி ரணகந்தா வனப்பகுதியில் காப்பாற்றப்பட்ட அந்த ஐந்து குட்டிகளும் 'உராங்குட்டான்' என்கிற வகையைச் சேர்ந்த மனிதக் குரங்குகள் என்று தெரிய வந்திருக்கிறது. தாயிடம் இருந்து பிரிக்கப்பட்ட அந்தக் குட்டிகள் இப்போது ஒடிஸா தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள நந்தன்கானன் உயிரியல் பூங்காவில், சிகிச்சை அளிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன.
அந்த அடர்ந்த வனப்பகுதியில் தன்னந்தனியாகத் தவித்துக் கொண்டிருந்த மூன்று முதல் எட்டு மாதத்துக்கு உள்பட்ட வயதுடைய அந்த 'உராங்குட்டான்' மனிதக் குரங்குக் குட்டிகள், தங்கள் தாயிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்கின்றன என்பது தெளிவு. 'உராங்குட்டான்' இனத்தைச் சேர்ந்த மனிதக் குரங்குகள் பெரும்பாலும் மலேசியா, இந்தோனேசியா நாடுகளின் அடர்த்தியான மரங்களுடன், அதிக அளவில் மழைப்பொழிவு காணப்படும் மழைக் காடுகளில் மட்டுமே வாழும் அரிய வகையைச் சேர்ந்தவை.
அந்த 'உராங்குட்டான்' குட்டிகள், இந்தோனேசியக் காடுகளில் இருந்து கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. அவற்றை மீண்டும் அந்த நாட்டின் வனப்பகுதிக்கே திருப்பி அனுப்பிப் பாதுகாக்க, உரிய நடவடிக்கைகள் ஆராயப்படுகின்றன. கொண்டுவரப்பட்ட இடத்துக்கே அவற்றைக் கொண்டு போய்ச் சேர்ப்பதுதான் சரியான முடிவாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
வனவிலங்குகள் குற்றத் தடுப்பு ஆணையம் (வைல்ட் லைஃப் க்ரைம் கன்ட்ரோல் பீரோ) இதுகுறித்த தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. அந்த மனிதக் குரங்குக் குட்டிகள் எப்படி பாலசோர் காடுகளை வந்தடைந்தன என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறது. வனவிலங்குகள் சட்டவிரோத வர்த்தக வழித்தடத்தில் ஒடிஸா இதுவரையில் இல்லாத நிலையில், இப்போது இந்தக் குட்டிகள் கண்டறியப்பட்டது அவர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
ஐ.நா.சபையின் சுற்றுச்சூழல் அறிக்கை பல திடுக்கிடும் தகவல்களைத் தருகிறது. 2011-2020 பத்தாண்டுகளில் 70,000-க்கும் அதிகமான அரிய இனங்களைச் சேர்ந்த விலங்கினங்களின் வர்த்தகம் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அவை 18 இந்திய விமான நிலையங்கள் மூலம் நடந்திருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. அவற்றில் 46% பாம்பு, ஆமை, முதலை, பச்சோந்தி உள்ளிட்ட 'ஊர்வன' என்கிறது அந்த அறிக்கை.
இந்திய சட்டவிரோத வனவிலங்குகள் வர்த்தகத்தில், 'உராங்குட்டான்' உள்ளிட்ட அரிய வகைக் குரங்குகள் இடம்பெறுவது புதிதொன்றுமல்ல. அரிய வகைப் பறவைகளும், பாம்பு, ஆமை உள்ளிட்ட ஊர்வனவும் அதிக அளவில் கடத்தப்பட்டு வர்த்தகம் செய்யப்படுகின்றன என்றாலும் உராங்குட்டான், கிட்டான், தேவாங்கு உள்ளிட்டவையும் அவ்வப்போது தொடர்ந்து பிடிபடுகின்றன.
சட்டவிரோத வனவிலங்குகள் வர்த்தகம் என்பது, இந்தியாவில் பல பில்லியன் டாலர் வர்த்தகமாக உயர்ந்திருக்கிறது. இது குறித்து கண்காணிக்கும் அமைப்புகளிடம் இருந்து பெறப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால், இந்தியாவில் சட்டவிரோத வனவிலங்குக் கடத்தல் மையமாக சென்னை மாறியிருப்பது தெரிகிறது. இந்தியாவில் கைப்பற்றப்படும் 30% வனவிலங்குகளும் சென்னை விமான நிலையத்தில் பிடிபடுபவை.
தென்கிழக்கு ஆசியாவுக்குக் கடத்தப்படும் நட்சத்திர ஆமைகள், தேவாங்கு உள்ளிட்டவையும், தாய்லாந்து, மலேசியாவில் இருந்து கடத்தி வரப்படும் மலைப் பாம்புகள், 'இகுவானா' எனப்படும் உடும்புகள், அரிய வகைப் பறவைகள் என்று சென்னை சர்வதேச விமான நிலையத்தின் மூலம் கடத்தப்படுகின்றன என்று அந்த அறிக்கை தெளிவாகக் குறிப்பிடுகிறது. சென்னை விமான நிலையம், துறைமுக வசதிகள் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்துக்கும், போலிப் பொருள் கடத்தலுக்கும் வசதியாக இருப்பதாகத் தெரிகிறது.
'சைட்ஸ்' என்கிற அமைப்பு சர்வதேச சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்துக்கு எதிராகப் பல முன்னெடுப்புகளைச் செய்கிறது. கடத்தப்படும் வனவிலங்குகள், அவற்றின் உறைவிடங்களுக்கு அனுப்பப்படுவதை அந்த அமைப்பு உறுதிப்படுத்துகிறது. 'சைட்ஸ்' விதிமுறைப்படி சுங்க இலாகா அதிகாரிகள் எல்லைப்புறங்களிலும், விமான நிலையங்களிலும், துறைமுகங்களிலும் சரக்குகளை சோதனையிட்டு வனவிலங்குகள், அரிய வகைத் தாவரங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க வேண்டும் என்கிறது.
சுங்க அதிகாரிகள் மட்டுமல்ல, காவல் துறை, வனத் துறை அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட எல்லோருக்குமே இதுபோன்ற சட்டவிரோத வனவிலங்குகள் வர்த்தகத்தைக் கண்காணிக்கும் பொறுப்பு உண்டு. மனிதர்களைப் போலவே, இந்தப் பூமியில் வாழும் எல்லா உயிரினங்களுக்கும் தங்களது உறைவிடத்தில் தன்மானத்துடனும், சுதந்திரமாகவும் வாழ உரிமை உண்டு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
சில பணக்காரர்களின் தற்பெருமைக்காக வனவிலங்குகளும், உயிரினங்களும் வர்த்தகம் செய்யப்படும் அவலத்துக்கு முற்றுப்புள்ளி விழவேண்டும். அதுவும் நிரந்தரமாக!
பகுத்துஉண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.
கிடைத்ததைப் பகுத்துக் கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல், அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.
திருக்குறள் (எண் 322) அதிகாரம்: கொல்லாமை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







