ஆண்டுக்கு ரூ.1.5 கோடி சம்பளம் பெற்று வந்த இந்தியாவின் மிகப் பெரிய குறு நிதி நிறுவனமான எஸ்.கே.எஸ். அமைப்பின் தலைவர் சுரேஷ் குர்மானி அண்மையில் பதவிநீக்கம் செய்யப்பட்டார். இதர சலுகைகள் மற்றும் படிகளைச் சேர்த்து கடந்த நிதியாண்டில் மட்டும் அவருக்குக் கிடைத்த தொகை ரூ. 2.5 கோடி.
இன்னொருபக்கம், இந்த நிறுவனத்தில் கடன் வாங்கியவர்களில் பலர் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
குர்மானியின் சம்பளத்தை ஒப்பிடுகையில் இந்தியாவின் மற்ற நிதி நிறுவனங்களின் தலைவர்களது சம்பளம் மிக மிகக் குறைவுதான். இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்.பி.ஐ.யின் தலைவர் பெறும் ஊதியம் ஆண்டுக்கு |ரூ.26.5 லட்சம் மட்டுமே. ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சுப்பாராவ் பெறும் ஊதியம் ரூ. 15 லட்சம்தான். அந்த வங்கியின் துணைநிலை ஆளுநர்களுக்கு ரூ. 13 லட்சத்துக்கும் குறைவான ஊதியமே கிடைக்கிறது. இவர்களது ஊதிய விகிதம் மிகக் குறைவாக இருக்கிறது என்று கூறவரவில்லை. இது ஓர் ஒப்பீடு மட்டுமே.
2010-ம் ஆண்டு மார்ச் மாத மதிப்பீட்டின்படி எஸ்.கே.எஸ். ரூ. 4,321 கோடி கடன் வழங்கியிருக்கிறது. வரிகள் போக ரூ. 173.95 கோடி லாபம் ஈட்டியிருக்கிறது. அந்த அடிப்படையில் இந்த அமைப்புதான் இந்தியாவின் மிகப்பெரிய குறு நிதி நிறுவனமாகும்.
பாரத ஸ்டேட் வங்கியைப் பொறுத்தவரை, மார்ச் 2010 மதிப்பீட்டின்படி சுமார் ரூ. 8.04 லட்சம் கோடி டெபாசிட்டுகளைச் சேகரித்திருக்கிறது. ரூ. 6.31 லட்சம் கோடி கடன் நிலுவை இருக்கிறது. இதை ஒப்பிட்டால் எஸ்.கே.எஸ். அமைப்பின் வர்த்தகம் வெறும் 0.68 சதவீதம்தான். ஒட்டுமொத்தமாக எஸ்.பி.ஐ. குழுமத்தின் ரூ.19.86 லட்சம் கோடி வர்த்தகத்தைக் கணக்கில் கொண்டால், எஸ்.கே.எஸ். அமைப்பு 0.21 சதவீத அளவுக்குச் சிறு துரும்புதான். எஸ்.பி.ஐ.யுடன் ஒப்பிட்டால் எஸ்.கே.எஸ்.சின் லாபம் வெறும் 0.88 சதவீதம்தான்.
ஆனால், எஸ்.கே.எஸ். தலைவர் குர்மானியின் சம்பளம் மட்டும் ஸ்டேட் வங்கித் தலைவரின் சம்பளத்தைக் காட்டிலும் 9 மடங்கு அதிகம். அதுவும் நடப்பு நிதியாண்டில் | ரூ. 2 கோடியாக உயர்த்தப்பட்டது. சம்பளத்தைத் தவிர, சிறப்பாகப் பணியாற்றுவதற்காக ஆண்டுக்கு | 15 லட்சம் ஊக்கத்தொகையும், ஒரு முறை போனஸாக ரூ. 1 கோடியும் வழங்கப்பட்டிருக்கிறது. இதுபோக ரூ. 4 கோடிக்கு காப்பீடும் உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக | 300 கோடி மதிப்பிலான நிறுவனப் பங்கும் அவருக்குக் கிடைத்திருக்கிறது.
குர்மானி மட்டுமல்ல, அவரைப்போலவே நிறுவனத்தின் பிற ஊழியர்களுக்கும் எஸ்.கே.எஸ். பங்குகள் ரூ. 38 என்ற சலுகை விலையில் விற்கப்பட்டன. பின்னர் பங்குச் சந்தையில் அந்த நிறுவனம் பட்டியலிடப்பட்டபோது ரூ. 1,100-க்கு பங்குகளை விற்று அவர்கள் பெரும் லாபம் அடைந்தனர். அனைவருக்கும் சராசரியாக ரூ. 10 லட்சம் வரை கிடைத்தது.
அவ்வளவு ஏன்? எஸ்.கே.எஸ். நிறுவனர் விக்ரம் அகுலாவும் குறுங்கடன் வர்த்தகத் தில் பெரும் லாபம் அடைந்திருக்கிறார். கடந்த ஆண்டு அவருக்கு மட்டும் நிறுவனத்தின் 9.45 லட்சம் பங்குகள் ரூ.49.77 விலையில் ஒதுக்கப்பட்டன. இரண்டே மாதத்தில் அதை அவர் வேறொரு சிங்கப்பூர் நிறுவனத்துக்கு ரூ. 564 விலையில் விற்று ரூ. 53 கோடி சம்பாதித்தார். இப்படி உயர் அதிகாரி முதல் கடைநிலை ஊழியர்வரை அனைவருக்கும் இந்த நிறுவனம் ஒரு பணம் காய்க்கும் மரமாகத்தான் இருந்திருக்கிறது.
நாட்டின் ஏழை மக்களுக்கு சிறிய அளவில் கடன்களை வழங்கும் தொழிலைச் செய்து வரும் ஒரு நிறுவனத்தில் இது எப்படிச் சாத்தியம்? ஏழைகளை மேலும் ஏழ்மையில் தள்ளி, அவர்களது தேவைகளையும் நெருக்கடியையும் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டால் மட்டும் இதுபோன்று பணம் திரட்ட முடியும்.
பொதுவாக ஏழை மக்களுக்குச் சேவை செய்வதாகக் கூறிக் கொள்ளும் குறு நிதி நிறுவனங்கள் தாங்கள் வழங்கும் கடன்களுக்கு 60 சதவீதத்துக்கும் கூடுதலாக வட்டி விதிக்கின்றன. ஏழைகளைக் கடன்பெறவைத்து, அசல், வட்டி, பிற கட்டணங்கள் என திருப்பிக் கட்டவேண்டிய தொகையை உயர்த்திவிடுகின்றன. இதுதான் குறு நிதி வழங்கும் நிறுவனங்களின் லாபம் ஈட்டும் தந்திரம்.
குறு நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அரசுத்துறை மற்றும் வங்கிகள் கூறிக் கொள்கின்றன. ஆனால், குறுநிதி நிறுவனங்களிடம் கடன் பெறும் நிலையை மக்களுக்கு ஏற்படுத்தியதற்கு அரசுத் துறையும், வங்கிகளுமே ஒருவகையில் காரணமாகும்.
மக்களின் கடன் தேவையை வங்கிகள் பூர்த்தி செய்யாததால்தான் குறுங்கடன் நிறுவனங்களை மக்கள் நாட வேண்டியிருக்கிறது. இது வங்கிகளின் மிகப்பெரிய தோல்வியாகும். வங்கிகள் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்றிருக்கின்றன. கிட்டத்தட்ட 72 ஆயிரம் வங்கிக் கிளைகள் நாட்டில் இருக்கின்றன. அவற்றில் 14,500 கிளைகள் கிராமிய வங்கிகளைச் சேர்ந்தவை. இதுதவிர ஒரு லட்சத்துக்கும் கூடுதலான முதன்மை வேளாண் கூட்டுறவு சங்கங்களும், 12 ஆயிரம் மாவட்ட கூட்டுறவு வங்கிகளும் உள்ளன. இந்த நிதிச் சேவையில் தபால் நிலையங்களை இணைக்கும் யோசனையும் இருக்கிறது. அப்படியிருக்கும்போது ஏழைகளுக்குக் கடன்களை வழங்குவதற்கு மேலும் நிதி அமைப்புகள் தேவையா?
பல்வேறு தொழில் நிறுவனங்களின் கடன் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பணி தங்களுக்கு இருப்பதால் ஏழைகளுக்குக் கடன் வழங்க முடிவதில்லை என்று வங்கிகள் கூறுவதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாதது. உண்மையைக் கூறினால் இந்த வங்கிகள்தான் மிக்க குறைந்தவட்டிக்கு குறுங்கடன் நிறுவனங்களுக்குக் கடன்களை வழங்குகின்றன. அந்தப் பணத்தைத்தான் குறுங்கடன் நிறுவனங்கள் அநியாய வட்டிக்கு ஏழைகள் மீது திணிக்கின்றன.
நபார்டு அறிக்கைப்படி கடந்த மார்ச் மாதம் வரை இந்தியாவிலுள்ள சுமார் 1,407 குறுங்கடன் நிறுவனங்களுக்கு ரூ. 10 ஆயிரம் கோடி வங்கிகள் கடன் வழங்கியிருக்கின்றன. இது தவிர, 146 குறுங்கடன் நிறுவனங்களுக்கு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம்(சிட்பி) ரூ. 3,808 கோடி கடன் வழங்கியிருக்கிறது. வேதனையளிக்கும் விதமாக, கிராமப்புற ஏழைகளுக்குக் கடன்களை வழங்குவதற்காகவே அமைக்கப்பட்ட கிராமிய வங்கிகள்கூட, 103 குறுங்கடன் நிறுவனங்களுக்கு ரூ.52.22 கோடி கடனாக வழங்கியிருக்கின்றன. கிராமப்புற சுயஉதவிக் குழுக்களுக்கும் ஏழைகளுக்கும் வழங்கப்படவேண்டிய நிதி எங்கே போயிருக்கிறது பாருங்கள்.
அரசு வங்கிகள் மட்டுமல்லாமல் தனியார் வங்கிகளும் ஏதோ குறு நிதி நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்காகத் தாங்கள் செயல்படுவதுபோல கடன்களை வாரி வழங்கி வருகின்றன. பொதுமக்களின் டெபாசிட்டுகளுக்கு 3.5 சதவீதம் மட்டுமே வட்டி தரும் வங்கிகள், குறு நிதி நிறுவனங்கள் பெறும் கடன்களுக்கு 10 சதவீதம்வரை வட்டி வசூலிக்கின்றன. இதனால் 24 முதல் 60 சதவீதம்வரை வட்டி வசூலிப்பதை குறுங்கடன் நிறுவனங்கள் நியாயப்படுத்துகின்றன.
வங்கிகளின் பணம் குறு நிதி நிறுவனங்களுக்கு எப்படிச் செல்கிறது என்பதைப் புரிந்துகொள்ள, இந்தியாவில் குறுநிதி அமைப்புகள் எப்படி உருவாகின என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம்.
தனிநபர்களுக்குக் கடன் வழங்குவதைவிட குழுக்களுக்குக் கடன் வழங்குவது சிறந்தது என நபார்டு வங்கி கருதியது. இதையடுத்து, 1987-ம் ஆண்டில் சோதனை முயற்சியாக சில அரசு சாரா அமைப்புகளுக்குக் கடன்கள் வழங்கப்பட்டன. அதன் பிறகு 1992-ம் ஆண்டில் சுயஉதவிக் குழுக்கள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. சுயஉதவிக் குழுக்களின் சேமிப்பை வங்கிகளில் செலுத்துவதும், வங்கிகள் கடன்கள் வழங்குவதும் நடைமுறைக்கு வந்தன. கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு குழுக்களின் உறுப்பினர்களே ஒருவருக்கொருவர் அழுத்தம் தருவதால், கடன்கள் எளிதாக வசூலாகிவிடும் என்பதே அடிப்படைத் தத்துவம்.
இந்தத் திட்டம் பலத்த வரவேற்பைப் பெற்றது. அடமானம் ஏதும் இல்லாமல் கடன்கள் வழங்கப்பட்டாலும், கிட்டத்தட்ட 100 சதவீத கடன்கள் வசூலாகின. இதற்கு முன்பாக வேறு எந்தத் திட்டத்திலும் இந்த அளவுக்குக் கடன்கள் வசூலாகவில்லை. வாங்கும் கடனை இப்படித்தான் பயன்படுத்த வேண்டும் என்கிற எந்தக் கட்டுப்பாடும் இல்லாததால், சுயஉதவிக் குழுக்களின் உறுப்பினர்களும் தங்களது முக்கியமான தேவைகளை நிறைவேற்றிக் கொண்டனர். பெண்கள் ஒரே இடத்தில் கூடுவதால், அவர்களது பிரச்னைகளைப் பேசித் தீர்வுகாண முடிந்தது. கடன்கள் வசூலாவதில் ஏற்பட்ட நம்பிக்கை காரணமாக அதிக அளவில் சுயஉதவிக் குழுக்களை வங்கிகள் உருவாக்கின.
உண்மையில், சுயஉதவிக் குழுக்கள்தான் முறையான குறு நிதி அமைப்புகளாகும். பெரும்பாலும் இவை கடன் பரிவர்த்தனையில் மட்டுமே ஈடுபடுவதால் இவற்றைப் பொதுவாக குறுங்கடன் அமைப்புகள் என்கின்றனர். வங்கிகள் - சுயஉதவிக் குழுக்கள் இடையேயான உறவின் வெற்றி காரணமாக தனியார் குறுங்கடன் நிறுவனங்கள் முளைத்தன.
இந்தத் தனியார் குறுங்கடன்கள் மூலம் கடன்பெறும் சுயஉதவிக் குழுக்கள் முறைசாரா குறுங்கடன் அமைப்புகளாகக் கருதப்படுகின்றன. லாபம் ஒன்றையே நோக்கமாகக் கொண்ட தனியார் குறுநிதி நிறுவனங்கள் சுயஉதவிக் குழுக்களின் சுதந்திரத்தைப் பறித்தன. வாங்கும் கடனை இன்னின்ன வகைக்குத்தான் பயன்படுத்த வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
குறு நிதி நிறுவனங்கள் திடீர் திடீரென சுயஉதவிக் குழுக்களை அமைத்து அவற்றுக்கு உடனடியாக கடன்களை வழங்கின. இதனால், முறையான குறு நிதித் துறையைக் காட்டிலும் முறைசாரா குறு நிதித் துறை மிக வேகமாக வளர்ந்தது. 2009-ம் ஆண்டில் வெளியான ஓர் ஆய்வு முடிவில் முறைசாரா குறு நிதித் துறை 4 ஆண்டுகளில் 13 மடங்கு வளர்ச்சி அடைந்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
குறு நிதி நிறுவனங்கள் ஏழைகளைக் குறிவைத்து கடன்களை வாரி வழங்கின. ஒருவரே பல நிறுவனங்களில் கடன்களைப் பெற்றார். இதனால்தான் நெருக்கடி ஏற்பட்டது. லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட குறு நிதி நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக கடனைத் திருப்பிக் கேட்டன. கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் நூற்றுக்கணக்கானோர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த ஆந்திரப் பிரதேச அரசு தனியார் குறு நிதி நிறுவனங்களைப் பதிவு செய்வதைக் கட்டாயமாக்கியிருப்பதுடன், வலுக்கட்டாயமாகக் கடன் வசூல் செய்வதற்குத் தடையும் விதித்திருக்கிறது. இதற்காக அவசரச் சட்டம் ஒன்றையும் பிறப்பித்திருக்கிறது.
குறு நிதி நிறுவனங்களுக்கு எதிரான கலகம் கடந்த ஆண்டிலேயே தொடங்கிவிட்டது. கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் குறு நிதி நிறுவனங்களிடம் வட்டிக்குக் கடன் பெறுவதற்கு எதிராக உள்ளூர் முஸ்லிம் அமைப்பு ஃபட்வா தடை உத்தரவைப் பிறப்பித்தது. கடன் வசூலிக்கச் சென்ற குறுநிதி நிறுவன ஆள்களுக்கு அடி விழுந்தது. இப்படி ஆங்காங்கே தனியார் குறு நிதி நிறுவனங்களுக்கு எதிரான சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் ஒரே காரணம் ஏழ்மைதான். ஏழ்மையில் வாடும் மக்கள் எப்படியாவது கடன்பெற்றுவிட வேண்டும் என விரும்புகின்றனர். கடுமையான விதிமுறைகள், அதிகமான வட்டி பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை. அதன் பிறகு திருப்பிச் செலுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். ஏழ்மையை ஒழிப்பது ஒன்றே இந்தப் பிரச்னையை முழுமையாகத் தீர்க்கச் சரியான வழியாகும். ஃபட்வாக்களாலும், அவசரச் சட்டங்களாலும் நாம் எதிர்பார்க்கும் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய இலக்கியச் சிற்பிகள்

மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பிரதமர் மோடி

பெர்லின் உயிரியல் பூங்காவில் ஃபட்டோ கொரில்லாவுக்குப் பிறந்தநாள்!

வரப்பெற்றோம் (13-04-2026)
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

