திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

மருத்துவக் கல்வியில் வணிகமயமாக்கலை ஒழிக்க வேண்டும்

மருத்துவக் கல்விக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள வணிகமயமாக்கலை ஒழிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். அதே போன்று தரமற்ற மருத்துவக் கல்லூரிகளின் வளர்ச்சியையும் தடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2013, 5:19 am

மருத்துவக் கல்விக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள வணிகமயமாக்கலை ஒழிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். அதே போன்று தரமற்ற மருத்துவக் கல்லூரிகளின் வளர்ச்சியையும் தடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா ஆண்டு பட்டமளிப்பு விழா ஆளுநர் கே.ரோசய்யா தலைமையில் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளில் 11,864 பேருக்கு இந்த விழாவில் பட்டங்கள் வழங்கப்பட்டன.

விழாவில் பங்கேற்று முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய பட்டமளிப்பு விழா உரை:

மருத்துவக் கல்வியில் உலகத் தரத்தை எட்டுவதில் இந்தப் பல்கலைக்கழகம் முன்னோடியாகச் செயல்படுகிறது. இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான விடைத்தாள்களைத் திருத்துவதில் வெளிப்படையான முறையை இந்தப் பல்கலைக்கழகம் கொண்டுவர உள்ளது. பொதுச்சேவையில் அக்கறையும், அர்ப்பணிப்பும் உள்ள சிறந்த மருத்துவர்களை உருவாக்குவதே இந்தப் பல்கலைக்கழகத்தின் முதல் பணியாக இருக்க வேண்டும்.

எதிர்கால மருத்துவ சேவைக்கும், நாளைய மருத்துவர்களை உருவாக்கவும், கற்பதற்கான சிறந்த சூழலை ஏற்படுத்தவும், உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்தவும் நீங்கள் உறுதியேற்க வேண்டும்.

தேசிய அளவிலான சுகாதாரத் திட்டங்களில் தமிழ்நாடு மிகச் சிறப்பாகச் செயல்பட்டுவருவதை பல்வேறு புள்ளி விவரங்கள் உறுதிசெய்கின்றன. கடந்த 2011 ஆம் ஆண்டில் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீடு 67 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. இந்த நிதியாண்டில் ரூ.6,551 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

410 கூடுதல் இடங்கள்: தமிழக அரசின் தொடர் நடவடிக்கைகள் காரணமாக, அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டில் மட்டும் 410 கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்த எம்.பி.பி.எஸ். இடங்களின் எண்ணிக்கை 2145-லிருந்து 2,555 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், தமிழக மாணவர்களின் நலன்களைப் பாதுகாக்க, மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய பொது நுழைவுத் தேர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தேன். இந்த விஷயத்தில் தமிழக அரசின் நிலைக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தேசிய ஊரக சுகாதார திட்டத்தின் கீழ், அதன் நோக்கம் தமிழகத்தில் ஏற்கெனவே எட்டப்பட்டு விட்டது. இந்தியாவிலேயே மிக அதிகளவாக 99 சதவீத குழந்தைகள் மருத்துவமனைகளில் பிறக்கின்றன. மகப்பேறு காலங்களில் தாய் மற்றும் சிசு இறப்பு போன்றவை தமிழகத்தில்தான் மிகக் குறைந்த அளவில் உள்ளன.

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் சிறப்பு மருத்துவமனை: ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கட்டடத்தில் சாதாரண மக்கள் பலனடையும் வகையில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை தொடங்கப்படும். அதேபோல், அந்த வளாகத்தில் அதிக மருத்துவப் பட்டதாரிகளை உருவாக்குவதற்காக மருத்துவக் கல்லூரியும் தொடங்கப்படும். அங்கு உயர் சிறப்புப் படிப்புகளும் தொடங்கப்படும். இந்தியாவின் சுகாதாரத் தலைநகராக சென்னை மாறிவருகிறது என்றார் அவர்.

இந்த விழாவில் 3,441 பேர் நேரில் பட்டம் பெற்றனர். மூன்று தங்கப் பதக்கங்கள் உள்பட 5 பதக்கங்களைப் பெற்ற சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த எம்.எஸ். (பொது அறுவைச் சிகிச்சை) மாணவர் எஸ்.பி.சுதர்சனம் உள்பட 23 மாணவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா பதக்கங்களை வழங்கினார்.

காது-மூக்கு-தொண்டை அறுவைச் சிகிச்சை நிபுணர் டி.ராமதாஸ், மூட்டு-தசை-திசு இணைப்பு சிகிச்சை நிபுணர் ஏ.என். சந்திரசேகரன், கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை நிபுணர் முகமது ரேலா ஆகியோருக்கு கௌரவ டாக்டர் பட்டங்கள் (டி.எஸ்சி.) வழங்கப்பட்டன. சுகாதாரத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் டி.சாந்தாராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.