நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இணைய வழியில் தமிழ் பயிலும் தில்லிவாழ் மாணவர்கள்!

தில்லிவாழ் தமிழர்களின் குழந்தைகள் ஆங்கில வழி, ஹிந்தி மொழி வழி சார்ந்த பள்ளிகளில் படித்தாலும்

News image
Updated On :19 ஆகஸ்ட் 2014, 6:13 am

வே.சுந்தரேஸ்வரன்

தில்லிவாழ் தமிழர்களின் குழந்தைகள் ஆங்கில வழி, ஹிந்தி மொழி வழி சார்ந்த பள்ளிகளில் படித்தாலும் தாய்மொழியான தமிழை இணையவழி மூலம் கற்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த முறையில், பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் தமிழ்ப் பயின்று வருகின்றனர்.

 தமிழகத்தில் உள்ள தமிழ் இணையக் கல்விக் கழகம் (ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ற்ஹம்ண்ப்ஸ்ன்.ர்ழ்ஞ்) மூலம் இணையதளம் வழியாக நடத்தப்படும் தமிழ் சான்றிதழ் வகுப்புகளில் சேர்ந்து தேர்வில் பங்கேற்று அதிக மதிப்பெண்களைப் பெற்று வருகின்றனர்.

சான்றிதழ் முதல் பட்டப் படிப்பு வரை: தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் மூலம் சான்றிதழ் முதல் பட்டப் படிப்பு வரை பயிற்றுவிக்கப்படுகிறது என்று அதன் இயக்குநர் முனைவர் ப.அர. நக்கீரன் கூறினார்.

 அவர் மேலும் கூறியதாவது: தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் மூலமாக 1 முதல் 6-ஆம் வகுப்பு வரையிலான சான்றிதழ், 7-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மேற்சான்றிதழ், பட்டயச் சான்றிதழ், மேற்பட்டயச் சான்றிதழ், பி.ஏ. (தமிழ்) பட்டப் படிப்பு ஆகியவை அளிக்கப்பட்டு வருகின்றன.

 வெளிநாடு, வெளிமாநிலங்களில் உள்ள தமிழர்கள், தமிழ் ஆர்வலர்கள் பயன் பெறும்  நோக்கத்தில் இந்தப் படிப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. சான்றிதழ் படிப்பில் சேர்வதற்கு முன்கல்வித் தகுதியோ, வயது வரம்போ கிடையாது. அவரவர் தகுதி நிலைக்கேற்பச் சான்றிதழ், மேற்சான்றிதழ் கல்வியில் எந்த நிலையில் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம்.

  சான்றிதழ், மேற்சான்றிதழ் நிலை ஒவ்வொன்றையும் இரு பருவங்களில் (ஓர் ஆண்டில்) முடிக்கும் வகையில், பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

 பட்டய, மேற்பட்டய பாடங்களை ஒருங்கிணைத்துப் பட்டப் படிப்பின் பாடத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. பட்டயப் படிப்பில் சேர்வதற்கு 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டயம், சான்றிதழ் படிப்புகளில் சேர்வதற்கு வயது வரம்பு கிடையாது.

 இந்திய பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட தஞ்சை, தமிழ்ப் பல்கலைக்கழகம் இந்தப் பட்டத்தை வழங்குவதால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு இந்தியப் பல்கலைக்கழகத்தின் பட்டத்திற்கும் இது நிகரானதாகும். தமிழகத்தில் இளநிலைப் பட்டம் பெறுவதற்கு 6-ஆம் வகுப்பு வரை தமிழ்ப் படித்திருக்க வேண்டும். இந்த நிலையில், தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் வழி நடத்தப்படும் 6-ஆம் வகுப்புக்கான சான்றிதழ் படிப்பை முடித்திருந்தால், அது ஒரு தகுதியாக கல்வி நிறுவனங்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்றார் நக்கீரன்.

தில்லி ராமகிருஷ்ணாபுரம் 9-ஆவது செக்டாரை சேர்ந்த கணேஷ்-கஸ்தூரி தம்பதியின் மகள்கள் க.ரெங்கநாயகி (17), க.மதுரவள்ளி (14). இதில் ரெங்கநாயகி பிளஸ்-2 முடித்து இந்தரபிரஸ்தா பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பில் சேர்ந்துள்ளார். மதுரவள்ளி 10-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இருவரும் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் தமிழ்ச் சான்றிதழ் படிப்பிலும் சேர்ந்து படித்து வருகின்றனர். 

 தமிழ் இணையக் கல்விக் கழகம் 2014 ஆண்டில் நடத்திய தமிழ்ச் சான்றிதழுக்கான மேல்நிலைத் தேர்வில் (6-ஆம் வகுப்புக்கு இணையானது) மதுரவள்ளி 88 சதவீத மதிப்பெண், ரெங்கநாயகி இடைநிலைத் தேர்வில் (4-ஆம் வகுப்புக்கு இணையானது) 99 சதவீதம் மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 இது குறித்து மாணவி க.ரெங்கநாயகி கூறியது: எனது பெற்றோர் சிறுவயதில் இருந்தே தமிழ்ப் படிக்க என்னை ஊக்குவித்தனர். குறிப்பாக எனது தாய் கஸ்தூரி, திருப்புகழ் அன்பர்கள் அமைப்பில் உள்ளார். அவர் மலைமந்திர் முருகன் கோயிலில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் திருப்புகழ் வகுப்புக்கு இருவரையும் அழைத்துச் செல்வார். அப்போது, எனக்கும் தமிழ்ப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.

 எங்கள் வீட்டில் "தினமணி' உள்ளிட்ட தமிழ் இதழ்கள் வருவதால் அவற்றை அவ்வப்போது வாசிக்குமாறு தந்தையும் ஊக்கப்படுத்துவார்.  நான் சிபிஎஸ்சி பாடமுறை பள்ளியில் படித்து வந்த நிலையில், இணையதளம் மூலம் தமிழ்ப் படிக்கலாம் என்ற தகவல் தெரியவந்தது.

 இதையடுத்து, இரு ஆண்டுகளுக்கு முன்பு அதற்கான வகுப்பில் சேர்ந்து, தமிழ்ச் சான்றிதழுக்கான இடைநிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன். தங்கை மதுரவள்ளி, தமிழில் 6-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கிறார். நாங்கள் இருவரும் தொடர்ந்து தமிழ்ப் படிக்க உள்ளோம் என்றார் ரெங்கநாயகி.

பிற மாணவர்களும் ஆர்வம்: தில்லியில் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் அங்கீகாரம் பெற்ற கல்வி மையத்தின் ஆலோசகர் ஜி.விஜி கூறுகையில், "கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கல்வி மையத்தைத் தொடங்கிய போது 5 பேர் மட்டுமே சேர்ந்தனர்.

  இப்போது, தில்லி ஆர்.கே. புரம், மயூர்விஹார் ஃபேஸ் 1, ஃபேஸ் 3 மற்றும் வசுந்தரா என்கிளேவ் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 5 வயது முதல் 15 வயது வரையுள்ள 45 குழந்தைகள் படித்து வருகின்றனர்.

 தமிழ்க் குழந்தைகள் தவிர, பிற மாநிலத்தவரின் குழந்தைகள் சிலரும் தமிழ்ப் படிக்க ஆர்வம் காட்டுகின்றனர்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.