நீட் தேர்வில் வரம்பு மீறிய கட்டுப்பாடுகள்: மாணவர்கள், பெற்றோர்கள் கண்டனம்
நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தேர்வில் விதிக்கப்பட்ட வரம்பு மீறிய கட்டுப்பாடுகளுக்கு மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் கண்டனம் தெரிவித்தனர்.


நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தேர்வில் விதிக்கப்பட்ட வரம்பு மீறிய கட்டுப்பாடுகளுக்கு மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் கண்டனம் தெரிவித்தனர்.
மாணவிகளுக்கான கட்டுப்பாடுகளில் சேலை கட்டி வரக் கூடாது. வளையல் போடக் கூடாது. சிகை அலங்காரப் பொருள்களை உபயோகிக்கக் கூடாது. சாதாரண செருப்பு தவிர ஷூ, உயரம் அதிகமான காலணி உள்ளிட்ட எதையும் உபயோகிக்கக் கூடாது. கூந்தலைச் சீவி கொண்டையிடக்கூடாது. ரப்பர் வளையத்தைப் பயன்படுத்தக் கூடாது. பெல்ட் அணியக் கூடாது. அரைக்கையுடன் கூடிய மேலாடைதான் அணிந்திருக்க வேண்டும். துப்பட்டா போட்டுவரக் கூடாது. இவ்வாறான கட்டுப்பாடுகள் மாணவிகளுக்கு விதிக்கப்பட்டபோதும் அரைக்கால் டிரவுசர், லெக்கின்ஸ் அணிந்துவரலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது பெற்றோர்களை வெறுப்படையச் செய்தது.
இதனை வெறும் அறிவிப்பாக மட்டுமல்லாமல் கண்டிப்பாகக் கடைப்பிடித்த நடைமுறையில்தான் மாணவ, மாணவியர் மிகுந்த இன்னலுக்கு ஆளாயினர் என அனைத்து தரப்பினரும் புகார் தெரிவிக்கின்றனர்.
இடுப்புப் பட்டை அவிழ்ப்பு: கொரட்டூர் மையத்தில் மாணவி அணிந்திருந்த இடுப்புப் பட்டையை அவிழ்த்தால்தான் தேர்வெழுத அனுமதிக்க முடியும் எனக் கூறியதையடுத்து அம்மாணவி அழுதுகொண்டே பட்டையை கழட்டினார். கூந்தலைப் பின்னல் போட்டிருந்த மாணவியை கட்டாயப்படுத்தி கூந்தலைக் கலைத்துள்ளனர். கிளிப் போட அந்த மாணவியை அனுமதிக்கவில்லை. முழுக்கைச் சட்டை அணிந்து வந்த மாணவியை அனுமதிக்க மறுத்ததால் பிளேடு மூலம் அரைக்கையாகக் கிழித்த பிறகே தேர்வு அறைக்குள் செல்ல முடிந்தது.
பர்தாவை நீக்கிய தேர்வர்கள்: நீட் தேர்வுக்கு வந்த முஸ்லிம் பெண்களின் பர்தாவை நீக்கிய பிறகே தேர்வு அறைக்குள் அனுமதித்தனர். தேர்வு அறைக்கு வந்த மாணவியிடம் கைகடிகாரத்தை அகற்றும்படி கூறியதால் கோபமடைந்த மாணவி அங்கிருந்தபடியே கடிகாரத்தை வெளியே வீசியதாகத் தெரிவித்தார். சிலரது புகைப்படங்கள் விதிகளின்படி இல்லையெனக் கூறி அதற்கு மாற்றாக தேர்வு மையத்திலேயே உடனடியாக எடுத்துத் தர ஆட்களை நியமித்திருந்தனர். இவ்வாறு எடுக்கப்படும் புகைப்படத்துக்கு ரூ.50 வீதம் வசூலித்துள்ளனர்.
சிவகங்கை மாணவருக்கு சென்னையில் தேர்வு மையம்: தமிழகத்தில் 8 மையங்களில் தேர்வுகள் நடைபெற்றாலும் அருகே அமைந்துள்ள மாவட்ட மாணவர்களுக்கு முற்றிலுமாக வாய்ப்பு அளிக்கப்படவில்லை. சிவகங்கை மாவட்டம் காளையார்கோயிலைச் சேர்ந்த சிவசங்கரன் என்ற மாணவருக்கு சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை சென்னை வந்த அவர் மையத்தைத் தேடிக் கண்டுபிடித்து வருவதற்குள் சோர்ந்துவிட்டதாக வேதனை தெரிவித்தார்.
எல்லை மீறிய கட்டுப்பாடுகள்: தேர்வுக் கட்டுப்பாடுகள் குறித்து கல்வித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அலுவலர் எம்.சந்திரசேகரன் கூறியது:
இந்க அவலங்களுக்கு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தெரிவிக்கும் ஒற்றை வரி பதில் முறைகேடுகள் இன்றி தேர்வு நடத்துவதுதான் நோக்கம் எனத் தெரிவிக்கின்றன.
தேர்வுகளில் முறைகேடுகளைக் கட்டுப்படுத்த கண்காணிப்பு முறைகளைத்தான் கடைப்பிடிக்க வேண்டுமே தவிர மாணவர்களை அதுவும் தேர்வு நேரத்தில் இன்னலுக்கு ஆளாக்குவது மன்னிக்க முடியாதது.
இயற்பியல் கேள்விகள் கடினம்: மாணவர்கள் கருத்து
நீட் தேர்வில் இயற்பியல் கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
நீட் தேர்வில் இயற்பியல், வேதியல், தாவரவியல், விலங்கியல் என 4 பாடங்களுக்கு 45 கேள்விகள் வீதம் மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் வீதம் 720 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடந்தது. தவறான ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும்.
மாநிலப் பாடத்திட்டதில் படித்த மயிலாடுதுறை மாணவர் பார்த்தசாரதி, 'இயற்பியல் பாடத்தில் சமன்பாடுகளுடனான கணக்குகள் சிரமமாக இருந்தன. வேதியியலில் ஒருசில கேள்விகள் கடினமாக இருந்தன' என்றார்.
11-ஆம் வகுப்பு கேள்விகள்: தாம்பரத்தைச் சேர்ந்த சிபிஎஸ்இ பள்ளி மாணவி ஹசீனா கூறுகையில், '11-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. 11-ஆம் வகுப்பு பாடத்தையும் நான் படித்திருந்ததால், தேர்வு எளிதாக இருந்தது. 500-க்கும் அதிகமாக மதிப்பெண் பெற வாய்ப்பு உள்ளது' என்றார்.
உயிரியல் எளிது: இரு பாடத்திட்டத்திலும் படித்த மாணவர்களும் தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடத்தில் கேள்விகள் அனைத்தும் எளிதாக இருந்ததாகத் தெரிவித்தனர்.
இது குறித்து நீட் பயிற்சி மையான டைம் மையத்தின் பள்ளி பிரிவு தலைவர் ஆனந்த் நாகராஜன் கூறுகையில், 'இயற்பியலைக் காட்டிலும் பிற பாடங்களில் எளிதான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன என்றார்.
பயிற்சி மையங்களுக்கு சென்ற மாணவர்களுக்கு தேர்வு எவ்வாறு எழுத வேண்டும் என்ற நுணுக்கங்கள், நேரம் மேலாண்மை ஆகியவை கற்றுக் கொடுக்கப்பட்டிருந்தன. பயிற்சி மைங்களுக்கு செல்லாத மாணவர்களுக்கு நீட் தேர்வு கடினமாக இருந்ததாகத் தெரிவித்தனர்.

சென்னை அண்ணாநகர் எஸ்.பி.ஓ.ஏ மேல்நிலைப்பள்ளியில் நீட் தேர்வு எழுத மாணவிகளை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனையிடும் பெண் காவலர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...