

இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல், வங்காள விரிகுடா என பரந்த கடல் பரப்பைக் கொண்டது இந்திய துணை கண்டம். சதுப்பு நிலக் காடுகள், பவளப் பாறைகள், கடற்பாசிகள், கழிமுகங்கள் போன்றவற்றில் வாழும் உயிரினங்கள், கடல் வளத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. மேலும், உள்ளூர் பொருளாதார உயர்வுக்கும், மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கும் இவை பெரும் பங்காற்றுகின்றன.
அந்த வகையில், கடல் சுற்றுச் சூழல் அமைப்புகள் குறித்த ஆராய்ச்சி, பாதுகாப்பு உள்ளிட்ட தொழில் துறைகளில் இளைஞர்களுக்கு அற்புதமான தொழில் வாய்ப்புகளை வழங்கக் கூடியதாக உள்ளது கடல்சார் அறிவியல் படிப்புகள். இந்தப் படிப்பு, தொழில் வாய்ப்புகளை அடிப்படையாகக் கொண்டது என்பது சிறப்புக்குரியது.
இது தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக கடல் மற்றும் கடலோர ஆய்வுத் துறைத் தலைவரும் இணைப் பேராசிரியருமான எம். ஆனந்த் தெரிவித்ததாவது :
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கடல் மற்றும் கடலோர ஆய்வுகள் துறை சார்பில் கடல் உயிரியல் தொழில் துறையில் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் வகையில், எம்.எஸ்.சி கடல் உயிரியல் (M.Sc. Marine Biology), கடல் அறிவியல் முனைவர் பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
முதுகலை அறிவியல் கடல் உயிரியல்
எம்.எஸ்.சி கடல் உயிரியல் இரண்டாண்டு கால முழு நேர கல்வியாக வழங்கப்படுகிறது. கடல் சுற்றுச்சூழல் அமைப்புகள் குறித்து மாணவர்களுக்கு கற்பிப்பதை நோக்கமாகக் கொண்டது இந்தப் பட்டப்படிப்பு. கடல் உயிரி தொழில்நுட்பம் உள்ளிட்ட அடிப்படை ஆராய்ச்சிகள் குறித்து பயிற்சி அளிப்பது இந்தப் படிப்பின் தனித்துவங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.
இளங்கலை அறிவியலில் கடல் உயிரியல், உயிர் வேதியியல், தாவரவியல், விலங்கியல், நுண்ணுயிரியல், உயிரி தொழில்நுட்பம், மீன்வளர்ப்பு மற்றும் பி.வோக் மீன் வளம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக பட்டப்படிப்புக்கு இணையான படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப் பெற்றவர்கள் இந்தப் பட்டப்படிப்பை மேற்கொள்ளலாம். பட்டியலின மணவர்கள் 50 சதவீத மதிப்பெண்களை பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.
கடல் உயிரினங்களின் மரபணுக்கள் குறித்த ஆய்வுக்கு தனித்துவமான வாய்ப்பை அளிக்கிறது இந்தக் கல்வி. முழுநேர ஆய்வகப் பணிகளை உள்ளடக்கிய பிற அறிவியல் துறைகளைப் போன்று இல்லாமல், கடல் அறிவியலைப் படித்து, இயற்கையுடன் இணைந்து பணியாற்றும் திறன்களை நிரூபிக்க இளைய சமுதாயத்தினருக்கு சிறந்த வாய்பை வழங்குகிறது.
கடல் சுற்றுச்சூழல், கடலோர அமைப்புகள், கடல் உயிரினங்கள் குறித்தும் மிகச் சிறந்த அறிவை வழங்குகிறது கடல் உயிரியல் கல்வி. பவளப்பாறை அமைப்புகள், கடற்பாசி, சதுப்பு நிலங்கள், கடல் புற்கள் ஆகியன குறித்து அறிந்து, ஆராய்ச்சி நுட்பங்களைச் செயல்படுத்த இந்தக் கல்வி பெரிதும் உதவுகிறது. இவை தொடர்பாக மாணவர்களுக்குப் பல்வேறு பயிற்சிகளும் அளிக்கப்படும். மேலும், இந்தியாவில் உள்ள முன்னணி கடல் ஆராய்ச்சி நிறுவனங்களில் மாணவர்கள் கல்வியிடைப் பயிற்சி பெற வாய்ப்புகளும் ஏற்படுத்தித் தரப்படுகின்றன.
வேலைவாய்ப்புகள்
கடல் உயிரியலில் பட்டம் பெறும் மாணவர்களுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையப் போட்டித் தேர்வுகள் மூலம் மீன்வளம், கடல்சார் கல்வி, சுற்றுச்சூழல் தொடர்பான பணி வாய்ப்புகள் கிடைக்கின்றன. மேலும், அரசின் மீன்வளத் துறையில் கடல் வள மேலாண்மை, மீன் வளர்ப்பு மேம்பாடு, கடலோர மேலாண்மை, கடல் மாசு கட்டுப்பாடு, கடல் பல்லுயிர் பாதுகாப்பு, கடல் நிர்வாகம் போன்ற துறைகளிலும் பணி வாய்ப்புகள் கிடைக்கின்றன. இவைத் தவிர, மீன் வளர்ப்பு, கடல் உணவு ஏற்றுமதி நிறுவனங்களில் விற்பனை மேலாளர், மீன் வளர்ப்பு நுட்பவியலாளர் உள்பட பல்வேறு தனியார் வேலைவாய்ப்புகளும் மாணவர்களுக்கு உள்ளன. அரசு சாரா நிறுவனங்கள், தனியார் ஆராய்ச்சி நிறுவனங்கள், பவளப் பாறைகள், கடல் புற்கள், சதுப்பு நிலங்கள் பாதுகாப்பு, பல்லுயிர் மேலாண்மையில் அதிக கவனம் செலுத்துவதால், இந்தப் பணிகள் சார்ந்தும் ஏராளமான வேலைவாய்ப்புகள் கடல் உயிரியல் மாணவர்களுக்கு உள்ளன.
கடல் அறிவியல் முனைவர் பட்டம் (பி. எச் டி.) அடிப்படை கடல் அறிவியல், உயிரியல், அறிவியல் அல்லது கடல் சார் துறை பின்னணிக் கொண்ட பட்டப்படிப்பை நிறைவு செய்த மாணவர்கள், கடல் அறிவியல் ஆராய்ச்சிக் கல்வியில் முனைவர் பட்டத்துக்கு பயிலலாம். இந்தப் படிப்பை மேற்கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு துறை சார்ந்த பல்வேறு திட்டங்களின் மூலம் நிதி ஆதரவு அளிக்கப்படும் என்றார் அவர்.
-எம். சங்கர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.