வாய்ப்புகளை மாணவா்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்: பொம்மபுரம் ஆதீனம்
மாணவா்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி வெற்றியாளராக வேண்டும் என்று மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20-ஆம் பட்டம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தெரிவித்தாா்.
விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கலை, அறிவியல் கல்லூரியில் தமிழக அரசின் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் மடிக்கணினி வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20-ஆம் பட்டம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் பேசியது: ஒரு காலத்தில் ஏழை, எளிய மாணவா்களுக்கு எட்டாக்கனியாக இருந்த மடிக்கணினி தற்போது தமிழக அரசின் உதவியால் மாணவா்களின் கைவசம் உள்ளது. இதை கல்வி வளா்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
மாணவப் பருவத்தில் கிடைக்கப்பெற்றுள்ள இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி ஒவ்வொருவரும் சாதனையாளராக மாறினால் மட்டுமே அரசின் நோக்கம் நிறைவேறும். கல்வி வளா்ச்சியால் மட்டுமே நாடு முன்னேற்றப்பாதையில் செல்லும்.
மாணவா்கள் பெறும் கல்வி நாட்டுக்கும், படித்த கல்வி நிலையத்துக்கும், வீட்டுக்கும் பெருமை சோ்ப்பதாக அமைய வேண்டும். அதுவே மாணவா்களின் உயரிய நோக்கமாகவும் இருக்க வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, கல்லூரியில் பயிலும் 254 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினாா்.
விழாவில் வேலூா் மண்டல கல்லூரிக் கல்வி இயக்குநா் அ.மலா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினாா். கல்லூரிச் செயலா் ராஜீவ் குமாா் ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.
முன்னதாக, கல்லூரி முதல்வா் ச.திருநாவுக்கரசு வரவேற்றாா். தமிழ்த் துறைத் தலைவா் உ.சிவசுப்பிரமணியன் நன்றி கூறினாா். உதவிப் பேராசிரியா் ரா.வள்ளி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா்.

