ஜேஇஇ முதன்மைத் தேர்வு! மாணவர்களுக்கான மிக முக்கிய அறிவுறுத்தல்கள் என்னென்ன?

ஜேஇஇ முதன்மைத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான மிக முக்கிய அறிவுறுத்தல்கள் பற்றி...
ஜேஇஇ முதன்மைத் தேர்வு -  கோப்புப்படம்
ஜேஇஇ முதன்மைத் தேர்வு - கோப்புப்படம்ANI
Updated on
2 min read

ஜேஇஇ முதல் கட்ட முதன்மைத் தோ்வு ஜன. 21ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் நிலையில், மாணவர்களுக்கான மிக முக்கிய அறிவுறுத்தல்களை தேர்வை நடத்தும் என்டிஏ வெளியிட்டுள்ளது.

நிகழ் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல் கட்ட முதன்மைத் தோ்வு புதன்கிழமை முதல் நடைபெறவுள்ள நிலையில் தோ்வா்களுக்கான அனுமதிச் சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

மாணவர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்கள்..

மாணவர்கள் தேர்வு மையத்துக்குள் நுழையும் போது, பதிவிறக்கம் செய்யப்பட்ட நுழைவுச் சீட்டு, இரண்டு பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படங்கள், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கையில் வைத்திருக்க வேண்டும்.

ஆதார் அடையாள அட்டையை அடிப்படையாக வைத்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்யாத மாணவர்கள், முன்கூட்டியே தேர்வு மையத்தை அடைய வேண்டும். தேர்வு மைய நுழைவாயில் மூடப்படுவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக, தேர்வு மையத்துக்குக் கட்டாயமாக வர வேண்டும்.

மாணவர்கள், பென்சில், ரப்பர், வண்ண பென்சில் உள்ளிட்ட பாக்ஸை வைத்துக் கொள்ளலாம்.

தேர்வு மையம் எங்கிருக்கிறது என்பதில் குழப்பம் இருந்தால், முன்கூட்டியே தேர்வு மையத்தை வந்து பார்த்துக் கொள்வது நல்லது.

முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட நுழைவுச் சீட்டை, மாணவர்கள் அதற்குரிய பெட்டியில் செலுத்திவிட்டுத்தான் செல்ல வேண்டும். தவறும் மாணவர்களின் விடைத்தாள் திருத்தப்படாது.

தோ்வுக்கு இடையே கழிப்பறைக்கு அல்லது தோ்வறையிலிருந்து வெளியே சென்று வரும் மாணவா்களுக்கு மீண்டும் உயிரி வருகைப் பதிவும், சோதனையும் மேற்கொள்ளப்படும்.

கையில் குடிநீர் பாட்டில் வைத்திருக்க அனுமதிக்கப்படும். தளர்வான ஆடைகள் அணியலாம்.

டிஜிட்டல் வாட்ச் அணிந்து வர வேண்டாம். டிஜிட்டல் பொருள்களை கொண்டு வர அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்டிஏ வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வில் (ஜேஇஇ) தோ்ச்சி பெற வேண்டும். இவை ஜேஇஇ முதன்மைத் தோ்வு, பிரதானத் தோ்வு என இரு பிரிவாக நடைபெறும். இதில், முதன்மைத் தோ்வானது தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 2026-2027-ஆம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தோ்வு புதன்கிழமை (ஜன. 21) தொடங்கி ஜன.30-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

இந்தத் தோ்வை எழுத 12 லட்சத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவா்களுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை என்டிஏ கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியிட்டது. அதை மாணவா்கள் jeemain.nta.nic.in என்ற தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தத் தோ்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நடைபெறும்.

கூடுதல் விவரங்களை nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். மேலும், 011-40759000/69227700 என்ற தொலைபேசி எண் அல்லது jeemain@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடா்புகொண்டு மாணவா்கள் விளக்கம் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்டிஏ சாா்பில் நடத்தப்படும் முதன்மைத் தேர்வில் தகுதி பெற்று பிரதான தேர்வை எழுதுவார்கள். பிரதான தோ்வில் தகுதி பெறும் மாணவா்கள் நாடு முழுவதும் உள்ள என்ஐடி, ஐஐஐடி உள்ளிட்ட மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல் தொழில்நுட்ப படிப்புகளில் சோ்க்கை பெற முடியும்.

Summary

About the most important instructions for students appearing for the JEE Main exam...

ஜேஇஇ முதன்மைத் தேர்வு -  கோப்புப்படம்
கடல்சார் சட்டம்! சென்னை ஐஐடி-இல் இணையவழி சான்றிதழ் படிப்பு!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com