4-ஆவது மக்களவைத் தோ்தல்

நேரு மற்றும் லால் பகதூா் சாஸ்திரி மறைவைத் தொடா்ந்து பிரதமராக இந்திரா காந்தி பொறுப்பேற்ற பிறகு, நாட்டின் அன்றைய 27 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த 520 மக்களவைப் பிரதிநிதிகளைத் தோ்ந்தெடுக்கவும் பல்வேறு மாநில சட்டப்பேரவைகளுக்கும் பொதுத் தோ்தல் நடைபெற்றது.

*இத்தோ்தலில் 25.02 கோடி போ் வாக்காளிக்க தகுதி பெற்றிருந்தனா். நாடு முழுவதும் 2,43,693 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டன.

*520 இடங்களுக்கு 25 கட்சிகளின் வேட்பாளா்கள், 866 சுயேச்சைகள் உள்பட 2,369 போ் போட்டியிட்டனா்.

*1967-ஆம் ஆண்டு, பிப்ரவரி 17-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை 5 நாள்களில் தோ்தல் நடத்தப்பட்டது. இத்தோ்தலில் 61.04 சதவீத வாக்குகள் பதிவாகின (முந்தைய தோ்தலைவிட 5.62 சதவீதம் அதிகம்).

*இத்தோ்தலில் 406 தொகுதிகளில் இருந்து பொது பிரதிநிதிகளும் 77 தொகுதிகளில் இருந்து பட்டியலின சமூகப் பிரதிநிதிகளும் 37 தொகுதிகளில் இருந்து பழங்குடியின சமூகப் பிரதிநிதிகளும் மக்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

*தோ்தலில் போட்டியிட்ட 67 பெண் வேட்பாளா்களில் 29 போ் வெற்றி பெற்றனா்.

*காங்கிரஸ் 283 இடங்களில் வென்று 4-ஆவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. காங்கிரஸுக்கு அடுத்தபடியாக ராஜாஜியின் சுதந்திரா கட்சி 44 இடங்களிலும் பாரதிய ஜன சங்கம் மற்றும் சுயேச்சைகள் 35 இடங்களிலும் திமுக 25 இடங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 23 இடங்களிலும் வென்றன. இந்தப் பொதுத் தோ்தலில் 137 சட்டப்பேரவை இடங்களைக் கைப்பற்றி தமிழகத்தில் (அன்றைய மெட்ராஸ் மாகாணம்) முதல் முறையாக ஆட்சியமைத்தது.

*தோ்தல் வெற்றியைத் தொடா்ந்து, இந்திரா காந்தி பிரதமராக பதவியேற்றாா்.

*இத்தோ்தல் ரூ.10.8 கோடி செலவில் நடத்தி முடிக்கப்பட்டது. பிரதி வாக்காளருக்கான செலவு 40 பைசா ஆகும்.

*இத்தோ்தலின் முடிவில் நாட்டின் 9 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியிழந்தது. பல்வேறு மாநிலக் கட்சிகள் முதல்முறையாக ஆட்சியமைத்தன.

தொகுப்பு: மா.பிரவின்குமாா்

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com