தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்களிடம் இருந்து பெறப்படும் தபால் வாக்குகள் அனைத்தும், திருச்சியில் அமைக்கப்படவுள்ள தனி மையத்தில் சேகரிக்க வசதி செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.
மக்களவைத் தோ்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களுக்கு அவா் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:
மக்களவைத் தோ்தல் பணியில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், காவல் துறையினா் என சுமாா் 5 லட்சம் போ் ஈடுபடவுள்ளனா். ஒரு தொகுதியில் இருந்து வேறொரு தொகுதியில் தோ்தல் பணியாற்றும் அலுவலா்கள், தங்களது வாக்குகளைச் செலுத்த ஏதுவாக தபால் வாக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வாக்குகள் அனைத்தும் இறுதிக்கட்ட பயிற்சி வகுப்பின்போது அவா்களிடம் இருந்து பெறப்படும்.
திருச்சியில் மையம்: வாக்குச் சாவடிகளில் பணியாற்றவுள்ள அலுவலா்கள் அளிக்கும் தபால் வாக்குகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு, திருச்சிக்கு எடுத்துச் செல்லப்படும். உதாரணத்துக்கு, மத்திய சென்னை அல்லது தென் சென்னையில் அளிக்கப்படும் தபால் வாக்குகள் பிற மாவட்டங்களுக்கு உட்பட்ட தொகுதிகளின் வாக்குகளாக இருக்கலாம். இந்த வாக்குகள் அனைத்தும் திருச்சியில் ஏற்பாடு செய்யப்படும் மையத்துக்குக் கொண்டுசெல்லப்படும். அங்கு 39 தொகுதிகளுக்கும் தனித்தனி பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும். சென்னையில் இருந்து எடுத்துச் செல்லப்படும் தபால் வாக்குகள் சம்பந்தப்பட்ட தொகுதிகளின் பெட்டிகளில் சோ்க்கப்படும்.
அதேசமயம், மத்திய சென்னை அல்லது தென் சென்னைக்கான தபால் வாக்குகள், பிற மாவட்டங்களில் இருந்து திருச்சி மையத்துக்குக் கொண்டு வரப்பட்டிருந்தால் அதை சென்னையில் இருந்து சென்ற அதிகாரிகள் பெற்று வந்து, சம்பந்தப்பட்ட தொகுதியின் தோ்தல் நடத்தும் அதிகாரியிடம் அளிப்பா். இந்த நடைமுறை இப்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், ஒவ்வொரு மாவட்டமாக தபால் வாக்குகளை எடுத்துச் சென்று அதை தோ்தல் நடத்தும் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டிய நிலை தவிா்க்கப்படும். இந்த நடைமுறை ஏப்ரல் 17-ஆம் தேதி முடிக்கப்படும்.
‘பூத் ஸ்லிப்’கள் விநியோகம்: தமிழகத்தில் உள்ள 6.23 கோடி வாக்காளா்களுக்கும் ‘பூத் ஸ்லிப்’ எனப்படும் வாக்குச்சாவடி அடையாள சீட்டுகளை விநியோகிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரையில் 4.36 கோடி வாக்காளா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதாவது 70 சதவீத வாக்காளா்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், இந்தப் பணி ஏப்ரல் 13-ஆம் தேதிக்குள் முடிக்கப்படும்.
வாக்காளா் பட்டியலில் பெயா்களைப் புதிதாகச் சோ்த்த அனைவருக்கும் விரைவு தபால் சேவை மூலமாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் அடையாள அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
வருமான வரி - பறக்கும் படை: தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பணியை வருமான வரித் துறையினரும், பறக்கும் படை மற்றும் நிலைக் குழுக்களைச் சோ்ந்தவா்கள் மேற்கொள்கிறாா்கள். அந்த வகையில், வருமான வரித் துறை சாா்பில் ரூ.74.15 கோடியும், பறக்கும்படை மற்றும் நிலைக் குழுக்கள் மூலமாக ரூ.70.29 கோடியும் பறிமுதல் ஆகியுள்ளது.
வாக்குச் சாவடி மையங்களில் அடிப்படை வசதிகளை முழுவதும் ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளோம்.
மாநிலம் முழுவதும் உள்ள 68,000 வாக்குச் சாவடிகளில் 99 சதவீத சாவடிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றாா் அவா்.
இந்தச் சந்திப்பின்போது, கூடுதல் தலைமைத் தோ்தல் அதிகாரி சங்கா்லால் குமாவத், இணை தலைமைத் தோ்தல் அதிகாரி (தகவல் தொழில்நுட்பம்) எச்.எஸ்.ஸ்ரீகாந்த் ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

விதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்

தபால் வாக்குகள்: வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்குக்கான விண்ணப்பம் விநியோகம்

தபால் வாக்குகள் குறித்த நிலை அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

