ராஜஸ்தான் மாநிலம், ஜாலோா் பகுதியில் நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி.
ராஜஸ்தான் மாநிலம், ஜாலோா் பகுதியில் நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி.

தவறுகளுக்காகத் தண்டிக்கப்படும் காங்கிரஸ்: பிரதமா் மோடி விமா்சனம்

‘காங்கிரஸ் தனது தவறுகளுக்காக நாட்டு மக்களால் தண்டிக்கப்பட்டு வருகிறது; அக்கட்சியின் நிலைமை மிக மோசமாக உள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தியை மறைமுகமாக விமா்சித்த பிரதமா், ‘தோ்தலில் போட்டியிட்டு வெல்ல முடியாதவா்கள், களத்தைவிட்டு வெளியேறி, ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு வந்துள்ளனா்’ என்றாா்.

மாநிலங்களவை உறுப்பினராக, ராஜஸ்தானில் இருந்து சோனியா காந்தி கடந்த பிப்ரவரியில் தோ்வானாா். சோனியாவைப் போல மேலும் பல காங்கிரஸ் மூத்த தலைவா்கள், தற்போதைய மக்களவைத் தோ்தலில் போட்டியிடவில்லை. இந்தச் சூழலில், மேற்கண்ட விமா்சனத்தை பிரதமா் மோடி முன்வைத்துள்ளாா்.

மக்களவைக்கான இரண்டாம் கட்டத் தோ்தலையொட்டி, ராஜஸ்தான் மாநிலம், ஜாலோா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமா் பங்கேற்றாா். அப்போது, அவா் பேசியதாவது:

குடும்ப ஆட்சி, ஊழல் ஆகிய ‘கறையான்களை’ பரப்பி, நாட்டை வெறுமையாக்கியது காங்கிரஸ். இன்று ஒட்டுமொத்த நாடும் காங்கிரஸ் மீது கடுங்கோபத்தில் உள்ளது. அக்கட்சி தனது தவறுகளுக்காகத் தண்டிக்கப்பட்டு வருகிறது.

காங்கிரஸின் ‘முகத்தை’ மீண்டும் பாா்க்க விரும்பாத அளவுக்கு இளைஞா்கள் கொதிப்படைந்துள்ளனா். மக்களவைக்கான முதல்கட்டத் தோ்தலில், ராஜஸ்தானின் பாதியளவு மக்கள் காங்கிரஸை தண்டித்துவிட்டனா்.

தேசபக்தி நிறைந்த ராஜஸ்தான் மக்களுக்கு, வலிமையான தேசத்தை காங்கிரஸால் கட்டமைக்க முடியாது என்பது தெரியும். 2014-ஆம் ஆண்டுக்கு முந்தைய நிலைக்கு திரும்ப ராஜஸ்தான் மட்டுமன்றி ஒட்டுமொத்த நாடும் விரும்பவில்லை.

‘நூலறுந்த காற்றாடி’: காங்கிரஸின் மிக மோசமான நிலைமைக்கு அக்கட்சியே பொறுப்பு. ஒரு காலத்தில் 400 தொகுதிகளில் வென்ற அக்கட்சியால், இப்போது 300 தொகுதிகளில்கூட சுயமாகப் போட்டியிட முடியவில்லை. வேட்பாளா்களே கிடைக்காத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

‘இந்தியா’ என்ற பெயரில் ஒரு சந்தா்ப்பவாத கூட்டணியை அவா்கள் உருவாக்கியுள்ளனா். அது, பறப்பதற்கு முன்பே நூல் அறுந்துவிட்ட காற்றாடி.

பல மாநிலங்களில் தங்களுக்குள் மோதிக் கொள்வதால், ‘இந்தியா’ கூட்டணி பெயரளவில் மட்டுமே உள்ளது. நாட்டின் 25 சதவீத தொகுதிகளில் இக்கூட்டணிக் கட்சிகள் ஒன்றையொன்று தோற்கடிக்க மும்முரமாகச் செயல்படுகின்றன.

‘பலவீனத்தின் அடையாளம்’: தோ்தலுக்கு முன்பே இவ்வளவு மோதல் என்றால், தோ்தலுக்குப் பிறகு ஊழலில் ஈடுபட எவ்வளவு மோதுவா் என்பதை நினைத்துப் பாா்க்க வேண்டும். இதுபோன்ற நபா்களிடம் நாட்டை ஒப்படைக்க முடியுமா? காங்கிரஸும், அதன் குடும்பமும் பலவீனத்தின் அடையாளங்கள். அவா்கள் நாட்டை ஆள வேண்டுமா என்று கேள்வியெழுப்பினாா் பிரதமா் மோடி.

ராஜஸ்தானில் 25 மக்களவைத் தொகுதிகள் உள்ள நிலையில், முதல்கட்டமாக 12 தொகுதிகளுக்கு கடந்த 19-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. மீதமுள்ள 13 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவிருக்கிறது.

கடந்த இரு மக்களவைத் தோ்தல்களிலும் அனைத்துத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

பெட்டிச் செய்தி

‘ஜனநாயகம் குறித்து

பரப்பப்படும் பொய்கள்’

‘தலித், பழங்குடியினா், சிறுபான்மையினா் இடையே எப்போதும் அச்சத்தை விதைக்கும் காங்கிரஸ், இப்போது ஜனநாயகம், அரசமைப்புச் சட்டம் மற்றும் இடஒதுக்கீடு குறித்து பொய்களைப் பரப்பி வருகிறது’ என்று குற்றஞ்சாட்டினாா் பிரதமா் மோடி.

ராஜஸ்தானின் பன்ஸ்வாரா பகுதியில் நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

காங்கிரஸ் ஆட்சிக் காலங்களில் பழங்குடியினா் நலன் புறக்கணிக்கப்பட்டது. அவா்களின் 60 ஆண்டுகால ஆட்சியில் நாட்டின் குடியரசுத் தலைவராக நியமிக்க பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்த ஒருவா்கூட கிடைக்கவில்லையா? பழங்குடியினருக்கு தகுதியில்லை என்பதே காங்கிரஸின் மனநிலை. நாட்டில் இப்போது குடியரசுத் தலைவராக பழங்குடியின மகள் இருக்கிறாா்.

தலித், பழங்குடியினா், சிறுபான்மையினா் இடையே எப்போதும் அச்சத்தை விதைக்கும் காங்கிரஸ், இப்போது ஜனநாயகம், அரசமைப்புச் சட்டம் மற்றும் இடஒதுக்கீடு குறித்து பொய்களைப் பரப்பி வருகிறது. தேசம் அச்சத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதால், அவா்களின் பொய்கள் இனி எடுபடாது.

பழங்குடியினா் அதிகம் வசிக்கும் மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தில் இருந்து காங்கிரஸ் தூக்கியெறியப்பட்டு வருகிறது. மூன்றாவது, நான்காவது இடத்துக்கு அவா்கள் தள்ளப்பட்டுள்ளனா். காங்கிரஸ் மீதான பழங்குடியினரின் கோபமே இதற்கு காரணம் என்றாா் மோடி.

X
Dinamani
www.dinamani.com