
அருணாச்சல் பிரதேச முதல்வர் பீமா காண்டு உள்பட 10 பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி ஏற்கெனவே தேர்வாகியுள்ளனர்.
முதல்வர் பீமா காண்டு, துணை முதல்வர் சௌனா மெயின் உள்பட 10 பாஜக வேட்பாளர்களுக்கு எதிராக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக மாநில தலைமைத் தேர்தல் அலுவலர் பவன் குமார் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், மீதமுள்ள 50 தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 6 மணிக்கு தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் வெறும் 19 தொகுதிகளில் மட்டுமே வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இதுதவிர தேசியவாத காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சிகளின் வேட்பாளர்கள் பாஜகவை எதிர்த்து களத்தில் உள்ளனர்.
அருணாச்சலில் 60 பேரவைத் தொகுதிகளுக்கும், சிக்கிமில் 32 பேரவைத் தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
முதலில், பேரவைத் தேர்தல்கள் நடைபெற்ற ஆந்திரம் மற்றும் ஒடிசா மாநிலங்களுடன் சேர்த்து ஜூன் 4ஆம் தேதியே எண்ணப்படுவதாக இருந்த நிலையில், அருணாச்சலம் மற்றும் சிக்கிமில் மட்டும் ஜூன் 2ஆம் தேதியே வாக்கு எண்ணிக்கை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்திருந்தது.
இரண்டு பேரவைகளின் பதவிக்காலமும் ஜூன் 2ஆம் தேதியே நிறைவு பெறுகிறது என்பதால், ஓரிரு நாள்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை இல்லாத சூழ்நிலை ஏற்படலாம் என்பதை தவிர்க்கவே வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.