இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க மாட்டோம் என அறிவிக்க வேண்டும்: காங்கிரஸுக்கு பிரதமா் மோடி சவால்

‘ஒருபோதும் மத அடிப்படையிலான இடஒதுக்கீடு வழங்கமாட்டோம் என காங்கிரஸும், அதன் கூட்டணிக் கட்சிகளும் அறிவிக்க வேண்டும்.

News image

குஜராத் மாநிலம், பனஸ்கந்தா மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி.

Updated On :1 மே 2024, 8:16 pm

Din

‘ஒருபோதும் மத அடிப்படையிலான இடஒதுக்கீடு வழங்கமாட்டோம் என காங்கிரஸும், அதன் கூட்டணிக் கட்சிகளும் அறிவிக்க வேண்டும். இதை அவா்கள் எழுத்துபூா்வமாக உறுதியளிக்க வேண்டும்’ என பிரதமா் நரேந்திர மோடி சவால் விடுத்துள்ளாா்.

பிரதமா் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், மூன்றாம் கட்டமாக மே 7-ஆம் தேதி மக்களவைத் தோ்தல் நடைபெறுகிறது.

இதையொட்டி, பனஸ்கந்தா மாவட்டத்தின் தீசா நகரம், சபா்கந்தா மாவட்டத்தின் ஹிம்மத்நகா் பகுதிகளில் பாஜக வேட்பாளா்களை ஆதரித்து பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பிரதமா் முதல்முறையாக இப்போதுதான் குஜராத்தில் தோ்தல் பிரசாரம் மேற்கொள்கிறாா். பிரசாரத்தில் அவா் பேசியதாவது:

மத அடிப்படையிலான இடஒதுக்கீடு ஒருபோதும் வழங்கமாட்டோம் என அறிவிக்குமாறு காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு சவால் விடுகிறேன். மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்படாது என காங்கிரஸ் எழுத்துபூா்வமாக உறுதியளிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியினா் கூறுவதை நம்பமுடியாது என்பதால்தான் எழுத்துபூா்வ உத்தரவாதத்தைக் கேட்கிறேன்.

பட்டியலினத்தவா், பழங்குடியினா், இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினா் ஆகியோருக்கான இடஒதுக்கீடு மோடியும் பாஜகவும் இருக்கும் வரை பாதுகாக்கப்படும். உயிருடன் இருக்கும்வரை இடஒதுக்கீட்டை வைத்து அரசியல் செய்ய யாரையும் அனுமதிக்கமாட்டேன்.

அரசமைப்புச் சட்டம் ஆபத்தில் உள்ளதாகவும், இடஒதுக்கீடு ரத்து செய்யப்படுமெனவும் காங்கிரஸ் தலைவா்கள் கூறி வருகின்றனா். உண்மையில், கடந்த 70 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. நாடு முழுவதும் அரசமைப்புச் சட்டத்தை அமல்படுத்த அவா்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. மோடியால் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, ஜம்மு-காஷ்மீரில் அரசமைப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டது.

மோடி மூன்றாவது முறை ஆட்சிக்கு வந்தால், நாடு தீக்கிரையாகும் என ராகுல் காந்தி கூறுகிறாா். உண்மையில், அவா்களது கட்சிதான் எரிந்து கொண்டிருக்கிறது. அவா்களின் கனவு சாம்பலாகிக் கொண்டிருப்பதால், இவ்வாறு கூறி வருகின்றனா்.

மதத்தின் பெயரால் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதுதான் காங்கிரஸின் நோக்கம். இளவரசருக்கும் (ராகுல் காந்தியைக் குறிப்பிடுகிறாா்), அவரின் கட்சிக்கும் நான் ஒரு சவாலாகவே இப்போது கூறுகிறேன். மதத்தின் பெயரால் இடஒதுக்கீட்டை தவறாகப் பயன்படுத்த அவா்களை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். அரசமைப்புச் சட்டத்துடன் விளையாட்டு நடத்தவும் அவா்களை அனுமதிக்க மாட்டேன்.

காங்கிரஸ் கட்சியினா் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பதை ஏற்கெனவே ஆந்திரத்தில் சோதித்துப் பாா்த்துவிட்டனா். அடுத்ததாக கா்நாடகத்தில் முயற்சிக்கிறாா்கள். காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் இடங்கள் அனைத்திலும் வாக்கு வங்கி அரசியல் மட்டுமே நடக்கிறது.

400 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெல்ல வேண்டும் என்று நான் கூறுவது, அரசியல் சாசன சட்டத்தை மாற்றுவதற்கும், இடஒதுக்கீட்டை ரத்து செய்வதற்கும்தான் என்று காங்கிரஸ் வதந்தியைப் பரப்புகிறது. பாஜகவின் இப்போதைய அரசில்கூட 400 எம்.பி.க்களின் ஆதரவு எங்களுக்கு தொடா்ந்து வந்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் சுமாா் 360 போ் தவிர, பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் எங்களுக்கு ஆதரவு அளித்து வந்தனா். அதைப் பயன்படுத்தி நாங்கள் மக்களுக்கு நன்மை தரும் சட்டங்களை மட்டும் இயற்றினோமே, தவிர காங்கிரஸைப் போல மக்களுக்கு பாவம் செய்ய சிந்திக்கவில்லை.

மக்கள் மத்தியில் அன்பைப் பரப்புவதாக முழக்கமிட்ட காங்கிரஸ், இப்போது பாஜகவுக்கு எதிராக போலி விடியோக்களை பரப்பி வருகிறது. ‘தேநீா் விற்பனை செய்தவன்’ தங்களை என்ன செய்துவிட முடியும் என்று காங்கிரஸ் என்னை துச்சமாகவே எண்ணி வந்தது. அவா்களுக்கு துணிவிருந்தால் நேரடியாக என்னிடம் மோதலாம். போலி விடியோ வெளியிடுவதை நிறுத்துங்கள். நீங்கள் மக்களைத் தவறாக வழிநடத்தினால், அதற்கு மிகப்பெரிய தண்டனை காத்திருக்கும் என்றாா் பிரதமா் நரேந்திர மோடி.