சலவையாளர்களின் தேய்ந்து போன ரேகைகள்: இப்படி ஒரு பிரச்னையா?

சலவையாளர்களின் தேய்ந்து போன ரேகைகளால் இப்படி ஒரு பிரச்னையா?
சலவையாளர்களின் தேய்ந்து போன ரேகைகள்: இப்படி ஒரு பிரச்னையா?

திருச்சி மாவட்டம் கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் அழகிரிபுரம் பகுதிகளில், கொதிக்கும் வெயிலில், முழங்கால் வரை ஆற்றுநீரில் நின்றவாறு துணிகளை துவைத்துக்கொண்டிருக்கிறார்கள் சலவைத் தொழிலாளர்கள்.

துணிகளுக்கு சோப்பு போட்டு துவைத்து அலசி அருகிலிருக்கும் பக்கெட்டில் போட்டுவிட்டு அடுத்த துணியை எடுக்கிறார் தொழிலாளி கணேசன். இவரைப் போலவே, ஏராளமான சலவைத் தொழிலாளர்கள் நேரம் காலத்தையெல்லாம் பொருட்படுத்தாமல், கடமையே கண்ணாக வேலை செய்துகொண்டிருக்கிறார்கள்.

சலவையாளர்களின் தேய்ந்து போன ரேகைகள்: இப்படி ஒரு பிரச்னையா?
அரச பரம்பரை - சாமானியர் இடையே போட்டி: இது மைசூரு-குடகு தேர்தல் களம்

இவர்களது வேலை துணிகளை துவைப்பது. இதன் மூலம் கிடைக்கும் சொற்ப பணத்தைக் கொண்டு வாழ்வாதாரத்தைப் பூர்த்தி செய்துகொள்வது. ஆனால், அங்குதான் ஒரு சிக்கல். இவர்கள் அரிசியும் பருப்பும் வாங்க நியாயவிலைக் கடைகளுக்குச் சென்றால், அங்கு இவர்களது தேய்ந்து போன கைவிரல் ரேகை பதிவாகாமல் அடம்பிடிக்கிறது.

தொடர்ந்து ரசாயனம் கலந்த சோப்புகளுடனே இவர்கள் வேலை செய்வதால், கைவிரல் ரேகைகள் தேய்ந்து காணாமல் போய்விடுகின்றன. அதனால் அவர்களது சந்திக்கும் சிக்கல்கள் கூடுகின்றன.

அழகிரிபுரத்தில் கிட்டத்தட்ட 300 சலவைத் தொழிலாளர் குடும்பங்கள் உள்ளன. அனைவருக்கும் இதுஒன்றுதான் வாழ்வாதாரம். இவர்களது குடும்பத்திலேயே சிலர் பட்டப்படிப்பு முடித்தாலும் வேலை கிடைப்பதிலும், வேலை கிடைத்தாலும் அது குடும்பத் தேவைக்குப் போதாததாலும் மீண்டும் பெற்றோருடன் இப்பணிக்கே திரும்பும் நிலையும் ஏற்படுகிறதாம்.

தினமும் ரசாயனத்துடனும் அழுக்குத் தண்ணீரிலும் வேலை செய்து தேய்ந்துபோன இதே விரலைக் கொண்டுதான் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தலில், தங்களது தலையெழுத்து மாறும் என்ற நம்பிக்கையோடு அவர்கள் வாக்களிக்கவிருக்கிறார்கள்.

புதிய அரசு உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று அவர்களிடம் கேட்டபோது, கொள்ளிடம் ஆற்றில் விடப்படும் கழிவுநீர்தான் எங்களது 23 ஆண்டுகால பிரச்னை. எங்களுக்கு ஏற்படும் பல நோய்களுக்கும் அது காரணமாக இருக்கிறது. அதனை திருச்சி மாநகராட்சி தடுத்து நிறுத்த வேண்டும் என்கிறார்கள் ஒருமித்த குரலில். இதுவும் இவர்களது பிரச்னை மட்டுமல்ல, நம் மாநிலத்தின் பிரச்னைதான்.

கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு, வேலை செய்ய முடியாத நாள்களில் எங்களுக்கு அரசியல் கட்சிகள் உணவு கொடுக்கிறார்கள். தலைவர்களின் பிறந்தநாள்களில் சலவைப் பெட்டி கொடுக்கிறார்கள் என்கிறார் சலவைத் தொழிலாளி ஒருவர். மேலும், அரசு, ஒவ்வொரு ஆண்டும் சலவைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு இலவசமாக சலவைப் பெட்டி கொடுப்பதை திட்டமாகக் கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள்.

அதையெல்லாம் தாண்டி, நாட்டின் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கும் வேலைவாய்ப்புகளைப் பற்றியும் அவர்கள் பேசுகிறார்கள். நாட்டில் வேலை வாய்ப்புகளை மத்தியில் அமையும் அரசு ஏற்படுத்த வேண்டும், என்னுடைய இரண்டு மகன்களும் பட்டதாரிகள்தான். ஆனால், ஒருவர் ரூ.7 ஆயிரத்துக்கு ஒரு கல்லூரியில் வேலை செய்கிறார், மற்றொருவர் என்னுடன் துணிகளைத் துவைக்கும் வேலை செய்கிறார். எங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பத் தயார். ஆனால், எங்கே அவர்களுக்கான வேலை வாய்ப்பு. வேலை வாய்ப்பு இல்லாமல் படித்து என்ன செய்வது என்கிறார்கள் அனைவருமே.

கடைசியாக அவர்களது பிரச்னைக்கு வந்துவிட்டார்கள்.. நியாயவிலைக் கடைகளுக்குச் செல்லும்போது கைவிரல் ரேகை பதியாது. அதனால், எப்போது என் பிள்ளைகளுக்கு பள்ளி விடுமுறையோ அப்போது மகளையோ மகனையோ கூட்டிக்கொண்டுதான் செல்ல வேண்டும். எனவே, அரசு இதற்கு ஒரு நல்ல மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்கிறார்கள்.

இத்தனை காலமும் வெறும் வாக்குகளாகவே பார்க்கப்பட்ட இவர்களது கோரிக்கைகளையும் அரசியல் தலைவர்கள் செவிகொடுக்கத்தான் வேண்டும். கருப்பு மை வைக்கும் அந்த விரல்களின் பின்னால் தேய்ந்துபோன கைரேகைகள் மக்கலாக தெரிவதை நினைத்துப் பார்க்கத்தான் வேண்டும் என்பதே அவர்களது இதுவரை அலசப்படாத கோரிகையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com