போராடி பெற்ற வாக்காளர் அட்டை: இலங்கை அகதிகள் முகாமிலிருந்து முதல் வாக்காளர்

போராடி பெற்ற வாக்காளர் அட்டையுடன் இலங்கை அகதிகள் முகாமிலிருந்து முதல் வாக்காளர் வாக்களிக்கவிருக்கிறார்.
போராடி பெற்ற வாக்காளர் அட்டை: இலங்கை அகதிகள் முகாமிலிருந்து முதல் வாக்காளர்
Published on
Updated on
2 min read

திருச்சி: நான் வரும் மக்களவைத் தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்கவிருக்கிறேன், அதன் மூலம் நான் இந்தியன் என்பதை உறுதி செய்யப்போகிறேன். பல ஆண்டுகாலமாக இது என் கனவாகவே இருந்தது, இப்போதுதான் நான் இங்கு வாழ்கிறேன் என்பதை உணர்கிறேன் என்கிறார் நளினி கிருபாகரன் (38).

திருச்சி மாவட்டம் கோட்டப்பட்டு பகுதியில் அமைந்துள்ள இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு முகாமில் தங்கியிருக்கும் நளினி கிருபாகரன், கடந்த 1986ஆம் ஆண்டு ராமேஸ்வரத்தில் உள்ள மண்டபம் பகுதியில் உள்ள இலங்கை மக்கள் மறுவாழ்வு முகாமில்தான் பிறந்தார்.

ஒரு நாட்டின் குடிமக்கள் என்ற அடையாளம் இல்லாமல், அகதிகள் முகாமில் வாழ்ந்து வந்த நளினியின் சட்டப்போராட்டம், கடந்த 2021ஆம் ஆண்டு மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், இந்திய பாஸ்போர்ட் வழங்க மறுத்தபோது தொடங்கியது. அதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தை அவர் நாடினார்.

போராடி பெற்ற வாக்காளர் அட்டை: இலங்கை அகதிகள் முகாமிலிருந்து முதல் வாக்காளர்
அரச பரம்பரை - சாமானியர் இடையே போட்டி: இது மைசூரு-குடகு தேர்தல் களம்

மண்டபம் பகுதியில் அவர் பிறந்ததற்கான பிறப்புச் சான்றிதழ் வைத்திருப்பதால், நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கடந்த 2022ஆம் ஆண்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதாவது, இந்திய குடியுரிமைச் சட்டம் 1995-ன்படி, 1950 ஜனவரி 26 முதல் 1987ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் பிறக்கும் எவர் ஒருவரும் இந்திய குடிமகனாவார் என்று பிரிவு 3 வரையறுக்கிறது.

அவருக்கு பாஸ்போர்ட் கிடைத்த பிறகும், மாவட்ட ஆட்சியரின் சிறப்பு அனுமதியின்பேரில், இந்த முகாமிலேயே தனது குடும்பத்துடன் தங்கியிருந்தார். தற்போது திருச்சியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் பெயர்களையும் நான் நன்கு அறிந்திருக்கிறேன் என்கிறார் நளினி.

இந்த வாரத் தொடக்கத்தில் நளினிக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைத்துள்ளது. இந்த உரிமை, தன்னுடன் முகாமில் தங்கியிருக்கும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார்.

என் கனவு இன்று நனவாகியிருக்கிறது. பல ஆண்டுகாலமாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் அமைக்கப்பட்டிருக்கும் முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கை தமிழ் மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கு எனது வாக்கினை செலுத்துவேன் என்கிறார்.

எனது சட்டப்போராட்டம் நின்றுவிடவில்லை. இப்போது, இந்தியாவில் பிறந்த எனது இரண்டு பிள்ளைகளுக்கும் இந்திய குடியுரிமை பெறுவதற்காக போராடிக்கொண்டிருக்கிறேன் என்கிறார்.

இதுபோலவே தங்களுக்கும் இந்திய குடியுரிமை வேண்டும் என்று இங்கே பிறந்தவர்களும், 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்பவர்களும் போராடி வருகிறார்கள். தமிழக அரசு வழங்கும் பல திட்டங்கள் தற்போது எங்களுக்கும் கிடைக்கிறது. அதுபோல வாக்களிக்கும் உரிமையும் கிடைத்தால் இங்கே வாழ்கிறோம் என்பதை உணர்வோம். இது, பல ஆண்டுகாலமாக புறக்கணிக்கப்பட்ட எங்களுக்கு நீதி வழங்குவதாகவும் அமையும் என்கிறார்கள் ஒருமித்த குரலில்.

இது குறித்து மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி பேராசிரியர் ஒருவர் பேசுகையில், தமிழகத்தில் 58,457 அகதிகள் வாழ்கிறார்கள். புதிதாக அமையும் அரசுக்கு, இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதற்கு உறுதிவேண்டும் என்கிறார்.

நளினிக்கு பாஸ்போர்ட் மற்றும் வாக்காளர் அட்டை பெற உதவிய வழக்குரைஞர் ரோமியோ ராய், மற்ற அனைத்து அகதிகளுக்கும் இந்த உரிமை பெற்றுத்தர தொடர்ந்து போராடி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com