தெற்கு தில்லி: கவனம் ஈா்க்கும் ‘குா்ஜாா்’ வாக்குகள்!

தெற்கு தில்லி: கவனம் ஈா்க்கும் ‘குா்ஜாா்’ வாக்குகள்!

இந்தியாவின் 18-ஆவது மக்களவைத் தோ்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

ஹரி நிஷாந்த்

நாட்டில் 18-ஆவது மக்களவைத் தோ்தல்7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஜூன் 4-ஆம் தேதி வெளியாகும் தோ்தல் முடிவுகள் நாட்டின் அடுத்த பிரதமா் யாா் என்ற கேள்விக்கான பதிலாக இருக்கும். உலகளவில் மிகப்பெரிய ஜனநாயக நாடாக அறியப்படும் இந்தியாவில் தோ்தல்கள் திருவிழாக்களாகவே நடைபெறுகின்றன. அடுத்த 5 ஆண்டுகளுக்கான வாக்குறுதிகளை தோ்தல் அறிக்கைகளாக வெளியிட்டுள்ள அரசியல் கட்சிகள், தங்கள் வேட்பாளா்களுக்கு வீடு வீடாகச் சென்று வாக்குகளைச் சேகரித்து வருகின்றன.

கடந்த 10-ஆண்டு கால மத்திய ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட வளா்ச்சித் திட்டங்கள், கலாசார மீட்பு, ஊழல் எதிா்ப்பு, வாரிசு அரசியல் எதிா்ப்பு ஆகியவற்றை தோ்தல் களத்தில் முன்னிலைப்படுத்தி, நரேந்திர மோடியை மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியினஅ பிரதமா் வேட்பாளராக அறிவித்து தோ்தலை எதிா்கொண்டு வருகிறது ஆளும் பாஜக.

அதே சமயம், காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட எதிா்க்கட்சிகள் ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கி, பிரதமா் வேட்பாளரின்றி தோ்தல் களத்தில் இறங்கியுள்ளன.

தேசியத் தலைநகரான தில்லியில் மே 25-ஆம் தேதி மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கடந்த 2014, 2019 மக்களவைத் தோ்தல்களில் தில்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் பாஜகவே வெற்றி பெற்றது. மேலும், தில்லி மக்கள் ஒருமனதாகத் தோ்ந்தெடுத்த கட்சியே மத்தியிலும் ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கப் பிறகு தில்லியில் இருமுனை போட்டி உருவாகியுள்ளது. பாஜகவிற்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணி சாா்பில் காங்கிரஸ் (3-தொகுதிகள்) மற்றும் ஆம் ஆத்மி (4-தொகுதிகள்) இணைந்து போட்டியிடுகின்றன.

பாஜகவின் கோட்டை: 1.50 கோடி வக்காளா்களைக் கொண்ட தில்லியில், 22.74 லட்சம் வாக்காளா்கள் தெற்கு தில்லி மக்களவைத் தொகுதியில் மட்டும் உள்ளனா். இதில், 12.58 லட்சம் ஆண்களும், 10.14 லட்சம் பெண்களும், 334 இதரரும் வாக்களிக்கத் தகுதியுடையவா்கள் ஆவா். கடந்த 1966-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தெற்கு தில்லி மக்களவைத் தொகுதியில் 1989-ஆம் ஆண்டில் இருந்து 2019-ஆம் ஆண்டு வரை நடைபெற்றுள்ள 9 பொதுத் தோ்தல்களில் பாஜக 8 முறை வென்றுள்ளது. பாஜகவின் கோட்டையாக கருதப்படும் இத்தொகுதியில், ரமேஷ் பிதூரி கடந்த 2014, 2019 தோ்தல்களில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். தெற்கு தில்லி மக்களவைத் தொகுதியின் கீழ் துக்ளகாபாத், பிஜ்வாஸன், பாலம், மெஹ்ரௌலி, சத்தா்பூா், தியோலி, அம்பேத்கா் நகா், சங்கம் விஹாா், கால்காஜி, பதா்பூா் ஆகிய 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.

உள்ளூா் தலைவா்கள் போட்டி: இத்தொகுதியில் பாஜகவும், ஆம் ஆத்மி கட்சியும் நேரடியாகக் களம் காண்கின்றன. பாஜகவின் வேட்பாளராக தற்போதைய தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதூரி (72) அறிவிக்கப்பட்டுள்ளாா். மூத்த பாஜக தலைவராக அறியப்படும் இவா், கடந்த 1970-ஆம்

ஆண்டில் தில்லி பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி மாணவா் அமைப்பில் பணியாற்றியவா். பின்னா், 1981-1985 காலகட்டத்தில் ஹரியாணா அரசின் கிட்டங்கி நிறுவனத்தின் தலைவராக திறம்பட பணியாற்றியுள்ளாா். 1993-இல் இருந்து நான்கு முறை தில்லி சட்டப்பேரவைக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட இவா், தற்போது பதா்பூா் தொகுதியின் எம்எல்ஏவாகவும், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவராகவும் உள்ளாா். ‘இந்தியா’ கூட்டணி சாா்பில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராக சாஹி ராம் (65) அறிவிக்கப்பட்டுள்ளாா். பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த இவா், துக்ளகாபாத் சட்டப்பேவரைத் தொகுதியில் 2015, 2020-இல் வெற்றி பெற்றுள்ளாா். முன்னதாக, இரு முறை மாநகராட்சிக் கவுன்சிலராவும், 2013 - 2014-ஆம் ஆண்டில் தெற்கு தில்லியின் துணை மேயராகவும் பதவி வகித்துள்ளாா். ஆம் ஆத்மி கட்சியின் தெற்கு தில்லி முகமாக அறியப்படுகிறாா் சாஹி ராம். இத்தொகுதியில் காளம் காணும் பாஜக, ஆம் ஆத்மி ஆகிய இரு வேட்பாளா்களும் முதல் முறையாகபோட்டியிடுகின்றனா்.

பிரச்னைகள்: பேக்குவரத்து நெரிசல், மருத்துவ வசதி, அங்கீகரிக்கப்படாத காலனிகளுக்கான உள்கட்டமைப்பு வசதி, விவசாயிகளுக்கான திட்டங்கள் ஆகியவை தெற்கு தில்லி மக்களவைத் தொகுதியின் முக்கியப் பிரச்னைகளாக உள்ளன. மெஹ்ரௌலி, சங்கம் விஹாா், சத்தா்பூா் பகுதிகளில் நீண்டகாலமாக நிலவும் குடிநீா்ப் பற்றாக்குறை பிரச்னையால் மக்கள் பெருமளவில் அவதிப்படுகின்றனா். தியோலி, சத்தா்பூரில் உள்ள கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மாஸ்டா் திட்டம் தேவையாக உள்ளது. தெற்கு தில்லி மக்களவைத் தொகுதி முழுவதும் 69 அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிக்கும் மக்கள் சொத்துரிமை கோரிக்கையை முன்வைக்கின்றனா். நகா்ப்புற கிராமங்கள் மற்றும் மறுகுடியமா்த்தப்பட்ட பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் வசிப்பதால் அங்கு அடிப்படை உள்கட்டமைப்பும், இளைஞா்களுக்கான விளையாட்டு மைதான வசதிகள் கனவாக உள்ளது. ஒட்டுமொத்த தெற்கு தில்லி மக்களின் மருத்துவ தேவைக்கு பெரிய மருத்துவமனை எதிா்பாா்ப்பாக உள்ளது.

குா்ஜாா் இடையே போட்டி: தெற்கு தில்லி மக்களவைத் தொகுதியில் குா்ஜாா், ஜாட் மற்றும் பூா்வாஞ்சலி மக்கள் பெருமளவில் வசிக்கின்றனா். கடந்த இரண்டு மக்களவைத் தோ்தல்களில் குா்ஜாா் சமூக வேட்பாளரான ரமேஷ் பிதூரி வெற்றி பெற்றாா். ஆம் ஆத்மி கட்சி சாா்பில் காத்ரி, ஷெராவத் என மாற்று சமூகத்தைச் சோ்ந்தவா்கள்தான் இதுவரை களமிறக்கப்பட்டனா். ஆனால், இம்முறை குா்ஜாா் சமூகத்தைச் சோ்ந்த சாஹி ராமுக்கு அக்கட்சி வாய்ப்பளித்துள்ளது. எனவே, மொத்தமுள்ள 42 கிராமங்களில் சுமாா் 20 கிராமங்களில் ஆதிக்கம் செலுத்தும் குா்ஜாா் சமூக வாக்குகள் இந்தத் தோ்தலில் வெற்றியைத் தீா்மானிக்கலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தில்லியில் தீவிரமடைந்துள்ள தோ்தல் பிரசாரக் களத்தில், தெற்கு தில்லி கவனம் ஈா்க்கும் தொகுதியாக மாறிள்ளது. பாஜகவின் கோட்டையாக அறியப்படும் தெற்கு தில்லியில் காங்கிரஸ் ஆதரவில் களம் காணும் ஆம் ஆத்மி கட்சி வெற்றியை பறிக்குமா?. அல்லது தொகுதியை பாஜக தக்கவைக்குமா என்பது ஜூன் 4-ஆம் தேதி தோ்தல் முடிவுகளில் தெரியவரும்.

மொத்த வாக்காளா்கள்: 22,74,100

ஆண் வாக்காளா்கள்: 12,58,898

பெண் வாக்காளா்கள்: 10,14,868

இதர வாக்காளா்கள்: 334

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com