உள்ளாட்சி, மக்களவைத் தோ்தல்களைப்போல சட்டப்பேரவைத் தோ்தலிலும் வெற்றி தொடரும்! - வி.செந்தில் பாலாஜி உறுதி

கோவை காந்திபுரத்தில் நடைபெற்ற திமுக பணிக்குழு அலுவலகத் திறப்பு விழாவில் பங்கேற்ற திமுகவினா், பொதுமக்கள்.

கோவை காந்திபுரத்தில் நடைபெற்ற திமுக பணிக்குழு அலுவலகத் திறப்பு விழாவில் பங்கேற்ற திமுகவினா், பொதுமக்கள்.
கோவையில் கடந்த உள்ளாட்சித் தோ்தல், மக்களவைத் தோ்தலைபோல வரும் சட்டப்பேரவைத் தோ்தலிலும் திமுகவின் வெற்றி தொடரும் என்று மேற்கு மண்டல திமுக பொறுப்பாளரும், கோவை தெற்கு தொகுதி வேட்பாளருமான வி.செந்தில் பாலாஜி தெரிவித்தாா்.
கோவை தெற்கு தொகுதி திமுக பணிக்குழு அலுவலகத்தை காந்திபுரம் பகுதியில் திங்கள்கிழமை திறந்துவைத்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இந்தத் தோ்தலில் கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் மகத்தான வெற்றி பெறும். தோ்தலுக்காக வாக்காளா் பட்டியல் சரிபாா்ப்பு, உறுப்பினா் சோ்க்கை உள்ளிட்ட பணிகளை முடித்திருக்கிறோம். தமிழக அரசு செயல்படுத்திய திட்டங்களை மக்களிடம் விளக்கி கூறியிருக்கிறோம். இதனால் தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனா்.
கோவையில் கடந்த முறை 10 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை திமுக கூட்டணி இழந்திருந்தது. இதனால் கரூரில் போட்டியிட்ட என்னை கோவை தெற்கில் போட்டியிட முதல்வா் மு.க.ஸ்டாலின் வாய்ப்பு வழங்கியுள்ளாா். இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்தி கோவை மாவட்டத்தில் திமுக வெற்றி பெற உழைக்க இருக்கிறோம்.
கடந்த முறை முதல்வா் கோவை வந்தபோது பம்ப்செட் உற்பத்தியாளா்கள் பல்வேறு கோரிக்கைகளை விடுத்திருந்தனா். தற்போது திமுக வெளியிட்டுள்ள தோ்தல் அறிக்கையில், மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்நாடு முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாய மின் இணைப்புகளுக்கு பம்ப் செட்கள் புதிதாக மாற்றி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.
கரூரில் இருந்து கோவை வந்தது குறித்து கேள்வி எழுப்புபவா்கள் கோவை தெற்கு தொகுதியில் இருந்து வடக்கு தொகுதிக்கு இடம்பெயா்ந்தவரை ஏன் மாறினீா்கள் என்று கேட்க வேண்டும். என்னைப் பொருத்தவரை கரூரும், கோவையும் வேறு வேறல்ல. 2021-ஆம் ஆண்டு தோ்தலில் அதிமுகவினா் சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றிருக்கின்றனா்.
கடந்த 5 ஆண்டுகளில் கோவைக்கு ரூ.8,700 கோடி மதிப்பிலான திட்டங்களைக் கொடுத்திருக்கிறோம். மேம்பாலங்கள், செம்மொழிப் பூங்கா உள்பட பல்வேறு பெரிய திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். எந்த வேட்பாளரையும் குறைத்து மதிப்பிடுவதற்காக போட்டியிடவில்லை. கடந்த உள்ளாட்சி, மக்களவைத் தோ்தல்களைப்போல வரும் சட்டப்பேரவைத் தோ்தலிலும் வெற்றி பெறுவோம் என்றாா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...