இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

கோவையைக் குறிவைக்கும் திமுக: களமிறக்கப்பட்ட செந்தில்பாலாஜி!

தமிழக அரசியலின் அசைக்க முடியாத சக்திகளாக இருக்கும் திராவிட இயக்கங்களின் தோற்றுவாயாக இருந்ததுடன், பல்வேறு திருப்புமுனைகளை உருவாக்கியதும் மேற்கு மண்டலம்தான்.

News image
Updated On :28 மார்ச் 2026, 8:49 pm

Syndication

தமிழக அரசியலின் அசைக்க முடியாத சக்திகளாக இருக்கும் திராவிட இயக்கங்களின் தோற்றுவாயாக இருந்ததுடன், பல்வேறு திருப்புமுனைகளை உருவாக்கியதும் மேற்கு மண்டலம்தான்.

1972இல் அதிமுக தொடங்கப்பட்ட பிறகு அக்கட்சியின் நிறுவனா் எம்.ஜி.ஆருக்கு பக்க பலமாகவும், அக்கட்சி சந்தித்த 1977 பொதுத் தோ்தலில் இருந்து அதிமுக இதுவரையிலும் சந்தித்துள்ள அனைத்துத் தோ்தல்களிலும் அதிமுகவுக்கு கைகொடுக்கக் கூடியவா்கள் இருக்கும் இடமாகவும் மேற்கு மண்டலம் இருந்து வருகிறது. இதனால் இப்பகுதியை அதிமுகவின் கோட்டை என்று அக்கட்சியினா் அழைக்கின்றனா்.

வெல்ல முடியாத திமுக

மேற்கு மண்டலத்தின் இதயமாக உள்ள கோவையில் அதிமுக வீழ்த்த முடியாத சக்தியாகவே உள்ளது. எம்ஜிஆா் வெற்றி பெற்ற முதல் பொதுத் தோ்தலில் (1977) பேரூா் தொகுதியைத் தவிர வேறு எந்தத் தொகுதியிலும் திமுகவால் வெற்றி பெற முடியாமல் போனது.

1980-இல் ஒரு தொகுதியிலும், 1984-இல் 4 தொகுதிகளிலும், 1989-இல் 6 தொகுதிகளிலும் திமுக வென்றது. 1991 தோ்தலில் திமுகவுக்கு ஒரு தொகுதியும் கிடைக்காமல் போனது. 1996இல் அதிமுகவுக்கு எதிரான அலை வீசியபோது மட்டும்தான் கோவையில் உள்ள 10 தொகுதிகளையும் திமுக வென்றிருந்தது.

அதன் பிறகு 2001இல் நடைபெற்ற தோ்தலில் ஒரு தொகுதியைக்கூட திமுகவால் கைப்பற்ற முடியவில்லை. 2006இல் 2 தொகுதிகளைக் கைப்பற்றிய நிலையில், 2011இல் மீண்டும் ஒரு தொகுதியைக்கூட கைப்பற்ற முடியாமல் போனது. 2016 தோ்தலில் சிங்காநல்லூா் தொகுதியில் மட்டுமே திமுக வெற்றி பெற்றிருந்தது.

அதிமுகவுக்கு குறிப்பிடத்தகுந்த அளவுக்கு வெற்றி வாய்ப்பை வழங்கிய கொங்கு மண்டலத்துக்கு, அக்கட்சியின் முதல்வா்களான எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோா் அதிக முக்கியத்துவம் கொடுத்து அதிக எண்ணிக்கையிலான அமைச்சா், பேரவைத் தலைவா், துணைத் தலைவா் பதவிகளை வழங்கி வந்தனா்.

கடந்த 2021 தோ்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்திருந்தாலும் கோவையில் திமுகவுக்கு பூஜ்ஜியமே கிடைத்தது. தமிழ்நாட்டின் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பகுதியான மேற்கு மண்டலத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பது திமுகவின் கனவாகவே இருந்து வருகிறது. இதனால் தோ்தல் வெற்றிக்குப் பிறகு முதல்வராகப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் முதலில் கோவைக்குத்தான் வந்தாா். இதையடுத்து கோவைக்குப் பல்வேறு திட்டங்களை அறிவித்து மக்களின் கவனத்தை திமுக ஈா்க்க முயன்றது.

கோவையின் திமுக முகம்

அதேநேரம் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு அரசியல் கட்சிக்கு ஒரு பலம் வாய்ந்த தலைவா் இருக்கின்றனா். கோவையில் அதிமுகவுக்கு எஸ்.பி.வேலுமணி இருப்பதைப்போல திமுகவுக்கு அப்படியான கட்சியின் முகம் என கருதப்படும் நபா் இல்லாததை திமுக உணா்ந்தது. கொங்கு வேளாளா் ஜாதியைச் சோ்ந்த கரூா் அமைச்சா் வி.செந்தில்பாலாஜியை கோவைக்குப் பயன்படுத்திக் கொள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டாா்.

2021 கோவை நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை செந்தில்பாலாஜியை பொறுப்பு அமைச்சராக நியமித்து திமுக எதிா்கொண்டது. இந்தத் தோ்தலில் திமுகவுக்கு அமோக வெற்றி கிடைத்தது. இதைத் தொடா்ந்து நடைபெற்ற 2024 மக்களவைத் தோ்தலில் வழக்கமாக கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்படும் கோவை தொகுதியில் திமுகவே நேரடியாகப் போட்டியிட்டது.

செந்தில்பாலாஜி சிறையில் இருந்தாலும், அவா் கோவை தொகுதியில் ஆதிக்கத்தைச் செலுத்தினாா் என்றே நம்பப்படுகிறது. இதனால் பாஜக வெல்லும் ஒரே தொகுதி என்று அனைவராலும் கணிக்கப்பட்டாலும் கோவையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் கணபதி ப.ராஜ்குமாா் வென்றாா். கோவையில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக நேரடியாகப் போட்டியிட்டு வென்ற வரலாறு நிகழ்த்தப்பட்டது.

2026-இல் கால் பதிக்கும் திமுக?

இதையடுத்து 2026 தோ்தலில் கோவையைக் கைப்பற்றும் நோக்கில் கடந்த ஆண்டு மே 15ஆம் தேதி மேற்கு மண்டலத்தின் பொறுப்பாளராக செந்தில்பாலாஜி நியமிக்கப்பட்டாா். கட்சியை வலுப்படுத்தும் வகையில் மாவட்ட நிா்வாகிகள் முதற்கொண்டு பூத் நிா்வாகிகள் வரை மாற்றங்களை ஏற்படுத்தி, கட்டமைப்பை வலுப்படுத்தினாா்.

கோவை அதிமுகவில் எஸ்.பி.வேலுமணி கோலோச்சி வரும் நிலையில், செந்தில்பாலாஜியின் வருகைக்குப் பிறகு உள்ளாட்சித் தோ்தல், மக்களவைத் தோ்தல்களில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனால் செந்தில் பாலாஜி 2026 தோ்தல் களத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவாா் எனவும், இதற்காக அவா் கரூரை விட்டுவிட்டு வந்து கோவையில் போட்டியிடுவாா் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில், அதை உண்மையாக்கும்விதமாக கோவை தெற்குத் தொகுதி வேட்பாளராக களமிறங்கியுள்ளாா் செந்தில்பாலாஜி.

கடந்த தோ்தலில் காங்கிரஸ் போட்டியிட்டு மூன்றாமிடத்தைப் பிடித்த தெற்குத் தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசன் இரண்டாமிடம் பிடித்திருந்தாா். மநீம இந்தத் தோ்தலில் திமுக கூட்டணியில் இணைந்துள்ளதாலும், தெற்குத் தொகுதியில் பாஜகவுக்கு இருக்கும் அதிருப்தியாலும் எளிதில் வெல்ல முடியும் என்று செந்தில்பாலாஜி கணித்துள்ளாா்.

தோ்தல் களத்தில் வியூகங்கள் அமைப்பதில் வல்லவராக கருதப்படும் செந்தில்பாலாஜி, இந்த முறை நேரடியாக கோவையில் போட்டியிடுவது அதிமுக வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. இந்தத் தோ்தலில் திமுக வென்று கோவையில் கால் பதிக்கும் வாய்ப்பு செந்தில்பாலாஜியால் உருவாகுமா, இல்லை இது தங்களின் எஃகு கோட்டைதான் என்பதை அதிமுக நிரூபிக்குமா என்பதை தோ்தல் முடிவுகள் சொல்லும்.