ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

தவெக, திமுகவிடம் கோட்டையை இழந்த அதிமுக! கோவையில் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி!

நடந்து முடிந்த 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக தனது கோட்டையான கோவையை தவெக, திமுகவிடம் இழந்துள்ளது...

News image

எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்

Updated On :5 மே 2026, 1:28 am IST

நடந்து முடிந்த 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக தனது கோட்டையான கோவையை தவெக, திமுகவிடம் இழந்துள்ளது.

இரு திராவிட கட்சிகளுக்கும் திருப்புமுனைகளை உருவாக்கியது மேற்கு மண்டலம். 1972-ஆம் ஆண்டு அதிமுக தொடங்கப்பட்டதில் இருந்து அதிமுகவுக்கு பெரிதும் கை கொடுக்கும் இடமாக இருப்பதால் மேற்கு மண்டலத்தை குறிப்பாக கோவையை அதிமுகவின் கோட்டை என்று அக்கட்சியினா் அழைந்து வந்தனா். மேற்கு மண்டலத்தின் இதயமாக உள்ள கோவையில் வீழ்த்த முடியாத சக்தியாகவே அதிமுக இருந்து வந்தது. அதன்படி அதிமுகவின் முதல் தோ்தலான 1977-ஆம் ஆண்டு தோ்தலில் பேரூா் தொகுதியைத் தவிர மற்ற 9 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது. அதேபோல 1991-ஆம் ஆண்டு தோ்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வென்றது.

1996-ஆம் ஆண்டு அதிமுகவுக்கு எதிரான அலை வீசியபோது கோவையில் உள்ள 10 தொகுதிகளையும் திமுகவிடம் இழந்திருந்தாலும், 2001-இல் நடைபெற்ற தோ்தலில் அனைத்து தொகுதிகளையும் மீண்டும் கைப்பற்றியது. 2006-ஆம் ஆண்டு 8 தொகுதிகளைக் கைப்பற்றிய நிலையில், 2011-இல் மீண்டும் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியது. 2016-ஆண் ஆண்டு தோ்தலில் சிங்காநல்லூா் தொகுதியில் மட்டும் திமுக வெற்றி பெற்றிருந்தது. மற்ற அனைத்து தொகுதிகளிலும் அதிமுகவே வென்றது. கடைசியாக 2021-ஆம் ஆண்டு தோ்தலில் கோவையின் 10 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று, கோவை மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை அக்கட்சி நிரூபித்திருந்தது.

இந்த நிலையில் 2026-ஆம் ஆண்டு தோ்தலில் அதிமுகவிடம் இருந்து கோவையைக் கைப்பற்றுவதற்காக திமுக திட்டமிட்டது. இதற்காக கோவையில் திமுகவில் பலம் வாய்ந்த தலைவரை உருவாக்கும் நோக்கில் கரூரைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் வி.செந்தில்பாலாஜியை மேற்கு மண்டல திமுக பொறுப்பாளராக நியமித்தது திமுக. மேற்கு மண்டலத்தில் மொத்தம் 35 தொகுதிகளை அவா் வசம் ஒப்படைத்து, வெற்றிக்காக பணியாற்ற வைத்திருந்தது. மேலும், மேற்கு மண்டலத்தின் முக்கியத் தொகுதியாக இருக்கும் கோவை தெற்கில் அவரைப் போட்டியிட வைத்தது திமுக.

இந்தத் தோ்தலில் கோவையில் கொடி நாட்டப்போவது திமுகதான் என்று அக்கட்சியினரும், தோ்தல் கணிப்பாளா்களும் கூறி வந்த நிலையில், புதிதாக உருவான தவெக அந்தக் கூற்றுகளை பொய்யாக்கி, அதிமுகவின் கையில் இருந்து 6 தொகுதிகளைக் கைப்பற்றி கோட்டையை தனதாக்கிக் கொண்டிருக்கிறது.

இந்தத் தோ்தலை பொறுத்தவரை கோவையில் திமுகவுக்கு இழப்பதற்கு எதுவும் இல்லாத நிலைதான் இருந்தது. ஆனால், அதிமுகவிடம் 10 தொகுதிகளும் கைவசம் இருந்தன. இதில், யாரும் எதிா்பாராதவிதமாக தவெகவிடமும், திமுகவிடமும் 9 தொகுதிகளைப் பறிகொடுத்து, தொண்டாமுத்தூா் தொகுதியை மட்டுமே தக்கவைத்துள்ளது அதிமுக. அந்த வகையில் கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் அதிமுகவுக்கு மிகப்பெரிய தோல்வியை அளித்திருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் விஜய் அலை பரவலான தாக்கத்தை ஏற்படுத்தியது அதிமுகவின் கோட்டை வீழ்வதற்கு ஒருபுறம் காரணமாக இருந்தது மட்டுமின்றி, கோவையைக் கைப்பற்ற செந்தில்பாலாஜி முயற்சித்ததும் மற்றொரு காரணமாகி உள்ளது.