ரே பரேலி அல்ல, ராகுல் பரேலி!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் ரே பரேலி தொகுதி பற்றி...
ரே பரேலி பிரசாரக் கூட்டத்தில் சோனியா காந்தியுடன் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி...
ரே பரேலி பிரசாரக் கூட்டத்தில் சோனியா காந்தியுடன் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி...ஏ.என்.ஐ.
Published on
Updated on
2 min read

பகல் 12.45 மணி. ரே பரேலி தொகுதியில் சௌதா என்ற இடத்தில் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வதேராவின் தெருமுனை பிரசாரக் கூட்டம் ஏற்கெனவே மிகவும் தாமதமாகிக் கொண்டிருக்கிறது. என்றாலும் கொளுத்தும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் பொறுமையாக பிரியங்கா காந்தியின் வருகைக்காகக் காத்திருக்கின்றனர்.

‘ரே பரேலிக்காக ராகுல்’ என்று எழுதப்பட்ட பிரியங்காவின் கார், மக்கள்  கூட்டத்துக்குள் நுழைகிறது. பெரும் முழக்கங்கள் எழுப்பப்படுகின்றன. மேடையேறிப் பேசுகிறார் பிரியங்கா காந்தி. கடந்த பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்து ரே பரேலி தொகுதியை நேரு குடும்பம் எவ்வாறு பேணி வந்திருக்கிறது என்று தொடங்கி, வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் என மேலும் பல்வேறு பிரச்சினைகளில் மோடி அரசு தோற்றுப் போன விஷயங்களை எல்லாம் பட்டியலிட்டுப் பேசுகிறார் பிரயங்கா.

ரே பரேலி பிரசாரக் கூட்டத்தில் சோனியா காந்தியுடன் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி...
ராகுலை ரேபரேலி மக்களிடம் ஒப்படைக்கிறேன்: பிரசாரக் கூட்டத்தில் சோனியா உருக்கம்

ஹிந்து மதக் காவலர்கள் என்று பாரதிய ஜனதா கட்சி கூறிக்கொண்டபோதிலும் உத்தரப் பிரதேசத்தில் மாநில அரசு நடத்தும் கோசாலைகள் தொடர்ந்து பரிதாபகரமான நிலையில்தான் இருக்கின்றன என்று குற்றம் சாட்டினார் பிரியங்கா.

இந்திரா காந்தி, ராகுல் காந்தி காலத்திலிருந்து இந்தத் தொகுதிக்கும் இந்திரா காந்தி குடும்பத்துக்கும் இடையேயுள்ள வலுவான பிணைப்பைச் சுட்டிக்காட்டிய பிரியங்கா காந்தி, தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அதே பாரம்பரியத்தை ராகுல் காந்தியும் தொடருவார் என்று குறிப்பிட்டார்.

இலவச அரிசித் திட்டம் தொடர்பான ஆவணங்களில் தங்கள் புகைப்படங்களை ஒட்டிக்கொள்வதன் மூலம் ஆதாயம் தேட மோடி அரசு முயற்சி செய்கிறது என்று குற்றம் சாட்டிய அவர், ஆனால், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான் உணவு உரிமைச் சட்டத்தைக் கொண்டுவந்தது என்றார்.

ரே பரேலி பிரசாரக் கூட்டத்தில் சோனியா காந்தியுடன் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி...
ரே பரேலி பிரசாரத்தில் காந்திகள்!

உத்தரப் பிரதேசத்தில் தொடர்ந்து தேர்வுகளின்போது கேள்வித் தாள்கள் கசிவது பற்றிக் குறிப்பிட்ட பிரியங்கா, இதைத் தடுத்து நிறுத்த கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படும் என்று கூறியபோது கூட்டத்தில் பலத்த வரவேற்பு இருந்தது.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், கல்விக்கு ஜிஎஸ்டி விலக்கு, ராணுவத்துக்கு ஆளெடுக்கும் அக்னிவீர் திட்டம் ரத்து செய்யப்படும் என்ற அவர், சிறு தொழில்முனைவோருக்காக ரூ. 5 ஆயிரம் கோடி நிதி உருவாக்கப்படும் என்றார்.

வழக்கமான கூட்டங்களைத் தவிர்த்து, ஒரு நாளில் குறைந்தது இதுபோன்று ஆறு இடங்களிலேனும் மக்களிடையே பிரசாரம் செய்தார் பிரியங்கா காந்தி.

ராஜஸ்தானிலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் முன் தொடர்ந்து, நான்கு முறை இந்தத் தொகுதியின் எம்.பி.யாக இருந்த சோனியா காந்தியின் இடத்தில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டதிலிருந்து தொகுதியில் பிரசாரத்தை மேலும் முடுக்கிவிட்டார் பிரியங்கா காந்தி.

எதிர்த்துப் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் தினேஷ் பிரதாப் சிங்கைவிட குறைந்தபட்சம் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு எவ்வித விட்டுக்கொடுப்புமின்றிப் பணியாற்றுகிறார்கள் காங்கிரஸ் தொண்டர்கள்.

தினேஷ் சிங்கிற்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியில் நிலவும் அதிருப்தியையும் காங்கிரஸ் கவனத்தில் கொண்டிருக்கிறது. தினேஷ் சிங்கை வேட்பாளராக அறிவித்ததில் ரே பரேலி எம்எல்ஏ அதிதி சிங், முக்கியமான பிராமணர் தலைவர் மனோஜ் பாண்டே உள்பட பாரதிய ஜனதா தலைவர்கள், தொண்டர்கள் பலருக்கும் உடன்பாடில்லை.

1951 முதல் காங்கிரஸ் கோட்டையாகத் திகழ்கிறது ரே பரேலி. இந்திரா காந்தி மூன்று முறை இங்கிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 1952, 1957 தேர்தல்களில் இந்திரா காந்தியின் கணவர் பெரோஸ் காந்தி இங்கிருந்து வெற்றி பெற்றார். 2004-ல் முதல் முறையாக சோனியா காந்தி போட்டியிட்டு, 2.49 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்றார். 2009-ல் 3.72 லட்சம், 2014-ல் 3.52 லட்சம், 2019-ல் 1,67,178 வாக்குகள் வித்தியாசங்களில்தான் சோனியா காந்தி வெற்றி பெற்றுவந்திருக்கிறார்.

1962, 1999 தேர்தல்களில் மட்டும் இந்திரா காந்தி குடும்பத்தினர் யாரும் இங்கே போட்டியிடவில்லை.

இந்திரா காந்தியின் குடும்பத்தினரைத் தேர்ந்தெடுத்து வருவதால் சிறப்புப் பெற்றவை ரே பரேலியும் அமேதியும் என்று குறிப்பிடுகிறார் காங்கிரஸ் தொண்டர் ராம் லால். இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் எந்தத் தொகுதியை வைத்துக்கொள்வார் என்ற கேள்விக்குப் பதிலளித்த தீனு சிங், வயநாட்டை ராகுல் தெரிவு செய்தால் யாருக்கும் எவ்வித சங்கடமும் இல்லை என்றார்.

இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்று வயநாடு தொகுதியை ராகுல் காந்தி வைத்துக் கொண்டால், ரே பரேலி தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிட்டு வெற்றி பெறுவார். இது காந்தி குடும்பத்தின் செல்வாக்கு மிக்க தொகுதி. காந்தி குடும்பத்தைச் சேர்ந்த யார் இருந்தாலும் மகிழ்ச்சிதான் என்கிறார் தீனுசிங்.

ரே பரேலி பிரசாரக் கூட்டத்தில் சோனியா காந்தியுடன் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி...
25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி!

இந்தத் தொகுதிக்கு மிகவும் நெருக்கமானவர் பிரியங்கா காந்தி. அவரை அவருடைய குழந்தைப் பருவத்திலிருந்து நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். வயநாட்டை ராகுல் காந்தி வைத்துக்கொண்டால் அவருடைய முடிவை மக்களைப் போலவே தொண்டர்களும் முழு மனதாக வரவேற்போம் என்கிறார் சமாஜவாதி கட்சித் தொண்டரான சிவபால் யாதவ்.

கணிசமான அளவில் இந்தத் தொகுதியில் இருக்கும் சமாஜவாதி கட்சியினரும் உற்சாகமாக இருக்கின்றனர். 2022 சட்டப்பேரவைத் தேர்தலில் ரே பரேலி தொகுதியின் கீழ் வரும் 5 தொகுதிகளில் 4-ல் சமாஜவாதி கட்சி வென்றிருக்கிறது. நாங்கள் முழுவீச்சில் காங்கிரஸையும் ராகுல் காந்தியையும் ஆதரிக்கிறோம் என்கிறார் பிரியங்கா காந்தியின் கூட்டத்துக்கு வந்திருந்த கட்சித் தலைவர் ஒருவர்.

பாரம்பரியமாக காங்கிரஸ் வெற்றி பெற்று வரும் தொகுதி இது. இந்த முறையும் வெற்றி பெறும், ராகுல் காந்தி வெற்றியின் வாக்கு வித்தியாசம் எவ்வளவு என்பதுதான் தெரிய வேண்டியது என்ற மனநிலையே தொகுதி முழுவதும் பரவலாக நிலவுகிறது.

உத்தரப் பிரதேசத்தில் வரும் திங்கள்கிழமை ஐந்தாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ள 14 தொகுதிகளில் ரே பரேலி, அமேதியும் இடம் பெற்றிருக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com