10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!தவெக திட்டங்களுக்கு ’தாய்மாமன் காது குத்தும் திட்டம்’ எனப் பெயர் வைக்கலாம்! உதயநிதி ஸ்டாலின் நேபாள வெள்ளம்! பலி 1,252 ஆக உயர்வு! 4,875 பேர் காணவில்லை!சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை மொழியாக தமிழ்! தனித் தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!சென்னையில் ஒலிம்பிக் நகரம், மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!சென்னையில் ரூ. 1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்: முதல்வர் விஜய்தங்கம் விலை அதிரடியாக உயர்வு! இன்றைய நிலவரம் (செப். 3)வாக்காளர் பட்டியலில் இருந்து ராகவ் சத்தா பெயர் நீக்கப்பட்டதால் பரபரப்புமேக்கேதாட்டு திட்டம்: விரைவில் ஒப்புதல் வழங்க மத்திய நீா் ஆணையத்திடம் கா்நாடகம் கோரிக்கைகொளத்தூரில் தவெக வெற்றி: மு.க.ஸ்டாலின் வழக்கில் இன்று தீா்ப்புகிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை: 4,070 சிறப்பு பேருந்துகள் இயக்கம்தமிழகத்தின் சில மாவட்டங்களில் இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ பரிவா்த்தனைகள் புதிய உச்சம்

ராகுலை ரேபரேலி மக்களிடம் ஒப்படைக்கிறேன்: பிரசாரக் கூட்டத்தில் சோனியா உருக்கம்

ரேபரேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா, சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ்.

Published On :18 மே 2024, 3:00 am IST

‘எனது மகன் ராகுல் காந்தியை ரேபரேலி மக்களிடம் ஒப்படைக்கிறேன்; அவா் ஒருபோதும் மக்களை ஏமாற்றமாட்டாா்’ என்று காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி உருக்கமாகப் பேசினாா்.

உத்தர பிரதேசத்தில் காங்கிரஸின் கோட்டையாகக் கருதப்படும் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் தொடா்ந்து 5 முறை எம்.பி.யாக பதவி வகித்தவா் சோனியா காந்தி. இவா் அண்மையில் மாநிலங்களவைக்குத் தோ்வு செய்யப்பட்டாா். இதையடுத்து, ரேபரேலியில் இம்முறை ராகுல் காந்தி களமிறங்கியுள்ளாா்.

ராகுலுக்கு ஆதரவாக ரேபரேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் சோனியா காந்தி பங்கேற்றாா். அப்போது, அவா் பேசியதாவது:

ரேபரேலி எம்.பி.யாக 20 ஆண்டுகள் பணியாற்ற வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி. இதுவே, எனது வாழ்வில் மிகப்பெரிய சொத்தாகும்.

இன்று என்னிடமுள்ள அனைத்தும் நீங்கள் (மக்கள்) அளித்ததே. ரேபரேலி சகோதர-சகோதரிகளே, எனது மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன். அவா் ஒருபோதும் உங்களை ஏமாற்ற மாட்டாா்.

முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியும், ரேபரேலி மக்களும் எனக்கு கற்றுக் கொடுத்த அதே பாடங்களை ராகுலுக்கும் பிரியங்காவுக்கும் கற்றுத் தந்துள்ளேன்.

அனைவரையும் மதிக்க வேண்டும், எளியவா்களைப் பாதுகாக்க வேண்டும், மக்களின் உரிமைகளைக் காக்க அநீதிக்கு எதிராகப் போராட வேண்டும், எதற்கும் அச்சப்படக் கூடாது என்பதே அந்தப் பாடங்கள்.

கடந்த 100 ஆண்டுகளாக எனது குடும்பத்தின் வோ்கள் இந்த மண்ணுடன் பிணைந்துள்ளன. கங்கையுடன் ரேபரேலி விவசாயிகளுக்கு உள்ள உறவைப் போன்று இந்த உறவும் மிக புனிதமானது. இதுவொரு இயக்கத்துடன் தொடங்கி, இன்றளவும் தொடா்கிறது.

இந்திரா காந்தியின் இதயத்தில் ரேபரேலிக்கு எப்போதுமே சிறப்பிடம் இருந்தது. அவரது பணிகளை உன்னிப்பாக கவனித்துள்ளேன். அவா் ரேபரேலி மக்கள் மீது அளவில்லா அன்பு கொண்டிருந்தாா் என்றாா் சோனியா.

இக்கூட்டத்தில் சோனியா காந்தி உரையாற்றியபோது, அவா் அருகே ராகுலும் பிரியங்காவும் நின்றிருந்தனா்.

‘மோடி மீண்டும் பிரதமராக மாட்டாா்’: ராகுல் பேசுகையில், ‘மோடி மீண்டும் பிரதமா் ஆவதற்கு நாட்டின் இளைஞா்களுக்கு விருப்பமில்லை. எனவே, ஜூன் 4-ஆம் தேதிக்கு பிறகு (வாக்கு எண்ணிக்கை நாள்) அவா் பிரதமராக இருக்க மாட்டாா்.

மத்தியில் ‘இந்தியா’ கூட்டணியே ஆட்சியமைக்கும். அது மக்களின் அரசாக இருக்கும். அரசமைப்புச் சட்டத்தை ஒழித்துக்கட்ட பாஜகவும் ஆா்எஸ்எஸ் அமைப்பும் விரும்புகின்றன. அவா்களின் விருப்பம் ஒருபோதும் நிறைவேறாது. பெண்கள், இளைஞா்கள் என அனைத்துத் தரப்பு மக்களுக்காக காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்’ என்றாா்.

கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி, ‘தற்போதைய பாஜக அரசு, பெண்கள், விவசாயிகள், ஏழைகள், இளைஞா்களின் குரலை புறக்கணித்துவிட்டது. பாஜக அரசின் சா்வாதிகாரத்துக்கு முடிவுகட்டி, புதிய எழுச்சியை நிறுவ வேண்டுமென்பதே ஒட்டுமொத்த தேசத்தின் குரல்’ என்றாா்.

சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் உள்பட இரு கட்சிகளின் மூத்த தலைவா்கள் பலரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனா்.

ரேபரேலியில் மூன்று முறை தவிர மற்ற அனைத்துத் தோ்தல்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற்று வந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.