மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மீண்டும் சமக? தீர்ப்பை மாற்றுவாரா நாட்டாமை?

பாஜகவில் சரத்குமார் பொறுப்பை எதிர்பார்ப்பது குறித்தும், ஆதரவாளர்கள் மீண்டும் கட்சியைத் தொடங்க கோரிக்கை வைத்துள்ளது குறித்தும்..

News image

சரத்குமார்

கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 11:58 am

எஸ். மணிவண்ணன்

சமத்துவ மக்கள் கட்சியை பாரதிய ஜனதாவில் இணைத்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் இதுவரை எந்தவித பொறுப்பும் வழங்கப்படவில்லை என்று ஆதங்கம் தெரிவித்துள்ளார் நடிகர் சரத்குமார். ஆனால், இது அதிருப்தி இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

சரத்குமாரின் கோரிக்கைக்கு ஏற்ப சரத்குமாருக்கோ அல்லது அவரின் ஆதரவாளர்களுக்கோ பாஜகவில் பொறுப்பு வழங்கப்படுமா? பொறுப்பு கொடுக்காமல் பாஜக தட்டிக்கழித்தால் சரத்குமாரின் நகர்வு என்னவாக இருக்கும்? சமக-வை மீண்டும் புதுப்பிப்பாரா? இம்முறை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனக் கூறிய பிறகும் பொறுப்பு ஏதுமின்றி பாஜகவுக்காக பிரசாரத்தில் ஈடுபடுவாரா? எனப் பல்வேறு கேள்விகள் எழலாம். இத்தகைய கேள்விகளை சரத்குமாரும் எதிர்கொண்டுதான் இருக்கிறார்.

காமராஜர், எம்.ஜி.ஆர்., அப்துல் கலாம் சிந்தனைகளை, வழிகாட்டல்களை முன்னெடுத்து 2007 ஆம் ஆண்டு மதுரையில் சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கிய சரத்குமார், 17 ஆண்டுகள் கழித்து 2024 மார்ச் மாதம் பாஜகவில் அதனை இணைத்தார்.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த தலைவராக இருக்க விரும்பாமல், அனைத்துத் தரப்பு மக்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதற்காக தனது கட்சிக்கு சமத்துவ மக்கள் கட்சி எனப் பெயரிட்டிருந்தார். கட்சி தொடங்கி 2011-ல் சந்தித்த முதல் தேர்தலிலேயே தென்காசி சட்டப்பேரவைத் தொகுதிகளில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதன் பிறகு 2016 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 2021-ல் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி வைத்து மூன்றாவது அணி அமைத்தும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

தொடர் தோல்விகள் ஒருவித சோர்வைக் கொடுத்திருக்குமோ என்னவோ? தொடர்ந்து தேசியவாதம் தொடர்பான கருத்துகளை முன்வைத்து வந்த சரத்குமார், நள்ளிரவில் தோன்றிய சிந்தனை எனக் கூறி, 2024 மார்ச் 12 ஆம் தேதி பாஜகவுடன் சமக-வை இணைத்தார். இது நடந்தது எல்லாம் அப்போது மாநில தலைவராக இருந்த அண்ணாமலை முன்னிலையில்தான்.

பாஜகவில் சமக இணைந்த பிறகு நடக்கும் தேர்தலில் பொறுப்புகள் வழங்கப்படும்; அந்தப் பொறுப்புகளை தனது ஆதரவாளர்களுக்கு கொடுத்துவிடலாம் என சரத்குமார் நினைத்திருக்கலாம். ஆனால், பிற்காலத்தில் அண்ணாமலையே பாஜக தலைமைப் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார் என்பதை சரத்குமார் அறிந்திருக்கமாட்டார்.

ஒரு வகையில் சரத்குமார் விருப்பப்பட்டு எடுத்துக்கொண்ட ஓய்வு என்றேகூட கட்சி இணைப்பைக் கூறலாம். ஏனெனில், ஒவ்வொரு தேர்தலின்போதும் மற்ற கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசுவது, கூட்டணி பேரங்களில் ஈடுபடுவது தனக்கு ஒருவித சோர்வை அளிப்பதாக சரத்குமார் அப்போதைய செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.

நாட்டை மேம்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையும், ஆளுமையும் தன்னைப் பெரிதாக ஈர்த்ததால், நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டுச் செல்ல மோடியுடன் இணைந்து பயணிப்பதே சிறந்தது என்பதால் பாஜகவில் இணைந்ததாகக் கூறியிருந்தார்.

இதன் பிறகு 2024-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் சரத்குமாரின் மனைவி ராதிகா சரத்குமார், பாஜக வேட்பாளாராக நிறுத்தப்பட்டபோதிலும், தேமுதிகவின் விஜய பிரபாகரனை விடக் குறைவான வாக்குகளையே பெற்று தோல்வி அடைந்தார்.

கடந்த இரு ஆண்டுகளாக பாஜகவில் செயல்பட்டு வரும் சரத்குமாருக்கு தேசிய செயற்குழு உறுப்பினர் என்ற பொறுப்பு மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. பாஜகவில் இப்பொறுப்பில் நாடு முழுவதும் 80 பேர் உள்ளனர். இதை விட முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பை வழங்க வேண்டும் என்பதே அப்போதிருந்தே சரத்குமார் ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்றே கூறலாம்.

சமீபத்தில் திருச்சியில் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் கூட சரத்குமாரின் படம், நுழைவாயில் பதாகையில் இடம்பெறவில்லை என்பது அவரின் ஆதரவாளர்களின் ஆதங்கமாக இருந்துள்ளது. (எடப்பாடி பழனிசாமியின் படமும் இடம்பெறவில்லை). ஜான் பாண்டியன், ஜெகன் மூர்த்தியின் படங்கள் இடம்பெற்றிருந்தபோதும் சரத்குமார் இல்லை என்பதே அவரின் ஆதரவாளர்களின் ஆதங்கமாக இருந்தது.

சமகவில் வழக்கமாக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று (மார்ச் 22) தனது ஆதரவாளர்களை சரத்குமார் சந்தித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் பாஜக தலைமைக்குத் தெரிந்தே இக்கூட்டம் நடந்துள்ளது. இக்கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதே தற்போது ஏற்பட்டுள்ள சலசலப்புக்கு காரணம் எனக் கூறலாம்.

அதாவது,பாஜகவில் இணைந்துள்ள சரத்குமாருக்கோ அல்லது ஆதரவாளர்களுக்கோ முக்கியப் பொறுப்பு வழங்கப்பட வேண்டும். மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்க வேண்டும் என்பதே இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள். இதனைச் செய்தியாளர் சந்திப்பின்போது உறுதி செய்தார் சரத்குமார்.

''30 ஆண்டுகளாக என்னுடன் பயணித்தவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். அவர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். எந்தவித பொறுப்பும் வழங்கப்படவில்லை என்ற ஆதங்கம் முன்பு இருந்தே இருந்தது. இப்போது பார்க்கும்போது கூட்டணியில் எத்தனை இடங்களில் நிற்கிறோம் என்பது உறுதி செய்யப்படவில்லை. பாஜகவில் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, அரவிந்த் மேனன், உள்ளிட்டோர் நம்பிக்கை அளித்துள்ளனர். யாரும் என் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், எங்கள் அனைவரின் ஆதங்கத்தையும் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். பொறுப்பு இன்றி கட்சியில் செயல்பட முடியாது. தேர்தலுக்கு முன்பு பொறுப்பு ஒதுக்குவது முக்கியம்'' எனக் கூறினார்.

அண்ணாமலையை நம்பி சரத்குமார் பாஜகவில் இணைந்ததாக அரசியல் பார்வையாளர்கள் விமர்சனத்தை முன்வைத்துவந்தனர். இது குறித்து விளக்கம் அளித்த சரத்குமார் ''நாங்கள் ஏமாற்றத்தில் இல்லை, அதிருப்தியில் இல்லை, ஆதங்கத்தில் மட்டுமே இருக்கிறோம்'' எனத் தெளிவுபடுத்தினார்.

''அண்ணாமலை கூறி பாஜகவில் நான் இணையவில்லை. பிரதமர் மோடியின் மீது கொண்ட பற்றினால் கவரப்பட்டு பாஜகவில் இணைந்தேன். குஜராத் முதல்வராக இருக்கும்போது அவரை நேரடியாக நேர்காணல் செய்தேன். அப்போதிலிருந்து அவரை பின்பற்றி வருகின்றேன். நான் தேசியவாதி. தேசிய நீரோட்டத்தில் செல்ல வேண்டும் என்பதற்காக நான் பாஜகவில் இணைந்தேன்'' எனக் குறிப்பிட்டார் சரத் குமார்.

''தமிழக பாஜகவில் உள்ள மாநில நிர்வாகிகள் 75 வயதைத் தொடுவதற்கு நிறைய காலம் இருக்கிறது. இருக்கும் வாய்ப்புகளை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்'' எனக் கூறினார். ( தனக்கு 71 வயது ஆகிவிட்டது என்பதை மறைமுகமாகக் கூறுகிறாறோ என்னவோ?)

வாழ்நாள் முழுக்க வேலை செய்துகொண்டிருந்தவனுக்கு திடீரென இனி வேலை இல்லை எனக் கூறினால் எப்படி இருக்கும்? அதுபோன்ற மனநிலையில் ஆதரவாளர்கள் இருப்பதாகவும் சரத்குமார் விளக்கினார்.

மீண்டும் சமக சாத்தியமா?

சமகவைத் தொடங்கி பணி செய்ய வேண்டும் என ஆதரவாளர்கள் கூறியதாக தனது செய்தியாளர் சந்திப்பின்போது சரத்குமார் குறிப்பிட்டார்.

ஆனால், தனக்கு மீண்டும் கட்சியை புதுப்பிக்கும் எண்ணம் இல்லை என்றும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தானோ, தனது மனைவியோ போட்டியிடப் போவதில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

கட்சி தொடங்கியதில் இருந்து தன்னுடன் பயணித்துவரும் நிர்வாகிகளில் சிலருக்கு பாஜகவில் பொறுப்பு வழங்க வேண்டும் என்பதே சரத்குமாரின் கோரிக்கையாகவும் உள்ளது.

தேர்தலுக்கு முன்பு பாஜக தரப்பில் பொறுப்புகள் ஏதும் ஒதுக்கப்படாமல், எதிர்மறையான முடிவு எடுக்கப்படாது என்பதில் சரத்குமார் உறுதியாகவே இருக்கிறார் என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.

ஏனெனில், பாஜகவில் இணைந்த இரு ஆண்டுகளில் (பொறுப்புகள் ஏதும் இல்லாதபோதும்) மகாராஷ்டிரம், கர்நாடக தேர்தல்களில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து சரத்குமார் பிரசாரம் மேற்கொண்டார். அவர் பிரசாரம் செய்த வேட்பாளர்கள் வெற்றியும் பெற்றுள்ளனர்.

இதுமட்டுமின்றி சரத்குமார் மத்திய பொறுப்புகளுக்குச் செல்லக்கூடிய தகுதி உடையவர் என மாநில பாஜக தலைவராக இருந்தபோது அண்ணாமலை கூறியுள்ளார். இவற்றையெல்லாம் வைத்தே, தங்கள் கோரிக்கையை பாஜக ஏற்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார் சரத்குமார்.

அதேவேளையில் கட்சியைத் தொடங்கி பணியாற்றுவோம் என்பதையும் நேரடியாகக் குறிப்பிடவில்லை.

''நாங்கள் எங்கள் கோரிக்கைகளை முன்வைக்கிறோம். அதில் சமக மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்ற ஆதரவாளர்களின் கோரிக்கையும் உள்ளது. இதனைக் கடிதமாக கொடுக்க இருக்கிறோம். பாஜகவில் இருப்பவர்களும் உடன் பயணிக்கின்றனர். கட்சியில் இருந்தபோதிருந்தே என்னுடன் பணியாற்றியவர்கள் சோர்ந்துவிடக் கூடாது. சிதறிவிடக் கூடாது. இதனை அவர்கள் பரிசீலனை செய்ய வேண்டும்'' என தனது நோக்கத்தைத் தெரிவித்துள்ளார்.

பாஜக தலைமையிடம் வழங்கியுள்ள அக்கடிதத்தில் தகுதியான ஆதரவாளர்கள் பட்டியலையும் சரத்குமார் வழங்கியுள்ளதாகத் தெரிகிறது.

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது குறித்து இன்னும் அறிவிப்பு வெளியிடப்படவில்லை. எனினும், பாஜக தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் அடங்கிய பட்டியலை அதிமுகவிடம் வழங்கியுள்ளது. இதில், சரத்குமார் ஆதரவாளர்களுக்கு எத்தனை தொகுதிகளை பாஜக ஒதுக்கும்? எதிர்காலம்தான் பதில் கூற வேண்டும்.

நட்சத்திர தகுதி உடைய வேட்பாளர் என்ற முறையில் சரத்குமாருக்கு பாஜக வாய்ப்பு வழங்கினாலும், அதற்கு சரத்குமார் முன்கூட்டியே மறுப்பு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நிற்காதது ஏன்? என்ற கேள்விக்கு பதில் அளித்த சரத்குமார், ''நான் எதைச் செய்தாலும் சிறப்பாகச் செய்ய வேண்டும் என நினைக்கிறேன். சட்டப்பேரவையில் 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட கேள்வி கேட்ட ஒரே நபர் நான். தற்போது மீண்டும் நான் தேர்வு செய்யப்பட்டால், ஆய்வு செய்து செயல்பட போதிய நேரம் இல்லை. மிகுந்த பொறுப்பு வாய்ந்த நபரை என்னால் பரிந்துரை செய்ய முடியும். பின்னால் இருந்து அவர்களை நான் ஊக்குவிக்கலாம். வழிகாட்டலாம். நான் மற்ற மாநிலங்களுக்குச் சென்று என் பணியை விரிவு செய்ய வேண்டும்'' எனப் பேசி தனக்கு பொறுப்புகள் வேண்டாம், தனது ஆதரவாளர்களுக்கு கட்டாயம் வேண்டும் என்பதை பதிவு செய்துள்ளார்.

கடந்த முறை 20 தொகுதிகளில் களமிறங்கிய பாஜக, இம்முறை 7 கூடுதலாகப் பெற்று 27 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் சரத்குமாரின் ஆதரவாளர்கள் இடம்பெறுவார்களா? அல்லது ஆதரவாளர்களின் கோரிக்கையின்படி புதிய சமக தொடங்கப்படுமா? பாஜக இடம் கொடுக்காதபட்சத்தில், சரத்குமாரும் குரல் எழுப்பாதபட்சத்தில் தொண்டர்கள் அதிருப்தி, சரத்குமார் இல்லாத சமகவுக்கு வழிவகுக்குமா? பதில் பாஜகவிடம்தான் உள்ளது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.