92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

நான்குனேரி தொகுதியைப் பெறுவதில் அதிமுக-அமமுக இடையே கடும் போட்டி

நான்குனேரி தொகுதியைப் பெறுவதில் அதிமுக-அமமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது...

News image

கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 10:53 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நான்குனேரிபேரவைத் தொகுதியைப் பெறுவதில் அதிமுக அமமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இங்கு 1952 முதல் 2021 வரை நடைபெற்ற (2019 இடைத்தேர்தல் உள்பட) மொத்தம் 17 தேர்தல்களில் காங்கிரஸ் - 7, அதிமுக - 5, திமுக -2 முறையும், ஜனதா கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், சமக ஆகியவை தலா ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன. வரும் தேர்தலில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக இங்குபோட்டியிடலாம் எனப் பரவலாக பேசப்படுகிறது.

மறவர் வாக்குகள் கணிசமாக இருப்பதால் இத்தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் டிடிவி தினகரனின் அமமுக வலியுறுத்தி வருகிறது. அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டால் திருநெல்வேலி மாநகர் மாவட்டச் செயலரான நான்குனேரியைச் சேர்ந்த ஆர். இசக்கிமுத்து போட்டியிடுவார் எனக் கூறப்படுகிறது.

இத்தொகுதியை எப்படியேனும் பெற்றுவிட வேண்டும் எனக் கருதிய அவர், கடந்த மாதம் கட்சியின் பொதுச்செயலர் டிடிவி தினகரனை அழைத்து, நான்குனேரியில் மிகப்பெரிய பொதுக்கூட்டத்தை நடத்தியது அனைத்துக் கட்சியினரின் கவனத்தையும் ஈர்த்தது.

இதேபோல, அதிமுக சார்பில் 2019 இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்ற ரெட்டியார்பட்டி நாராயணனும் இத்தொகுதியைப் பெற்றுவிடும் முனைப்புடன் உள்ளார். நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த இவர், அனைத்துத்தரப்பினரின் நன்மதிப்பையும் பெற்றவர். 2019 இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி ஆர். மனோகரனை தோற்கடித்தவர் என்ற பெருமை அவருக்கு உண்டு.

2021 பேரவைத் தேர்தலில் இங்கு போட்டியிட்டு தோல்வியடைந்த அதிமுக திருநெவேலி மாநகர் மாவட்டச் செயலர் தச்சை என். கணேசராஜாவும் இங்கு போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார்.

2021 தேர்தலில் அமமுக சார்பில் போடயிட்ட பரமசிவ ஐயப்பன், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வீரபாண்டி ஆகியோர் வாக்குகளை கணிசமாக அளவு பெற்றிருந்ததால், காங்கிரஸ் வேட்பாளர் ஆர். மனோகரன் எளிதாக வெற்றி பெற முடிந்தது. அமமுக, நாதக வேட்பாளர்கள் வாக்குகள் கணிசமாக பிரித்ததே கணேசராஜாவின் தோல்விக்கு காரணமாகிவிட்டது.

தற்போது அதிமுக கூட்டணியில் அமமுக உள்ளதால், அதிமுக சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன், தச்சை என். கணேசராஜா ஆகிய இருவரில் ஒருவருக்கு இத்தொகுதி வழங்கப்படலாம் என அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

அதேநேரம், டிடிவி தினகரன் இத்தொகுதியை இசக்கிமுத்துக்கு பெற்றுத் தந்துவிடுவார் என அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இங்கு களமிறங்குவது அதிமுகவா அமமுகவா என்பது ஓரிரு நாளில் தெரிந்துவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.