விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தமிழ்நாடு முதல்வராக விஜய் இன்று பதவியேற்பு!

தமிழ்நாடு முதல்வராக விஜய் பதவியேற்பது பற்றி...

News image

விஜய் - கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரும் தவெகவின் கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா், தவெக தலைவா் சி.ஜோசப் விஜய்யை முதல்வராக நியமித்து அதற்கான உத்தரவை சனிக்கிழமை வழங்கினாா். இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் முதல்வராக விஜய் பதவியேற்கிறாா்.

சட்டப்பேரவையில் தனது ஆட்சிக்கான பெரும்பான்மையை மே 13-ஆம் தேதிக்குள் விஜய் நிரூபிக்க வேண்டும் எனவும் ஆளுநா் உத்தரவிட்டுள்ளாா்.

முன்னதாக, தவெக ஆட்சி அமைப்பதற்கான ஆதரவை விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் வழங்கியதையடுத்து, அறுதிப் பெரும்பான்மை எண்ணிக்கையான 118-ஐயும் தாண்டி 120 உறுப்பினா்களின் ஆதரவை விஜய் பெற்றாா். இதனால், ஆட்சி அமைப்பதில் கடந்த 5 நாள்களாக நீடித்து வந்த நெருக்கடி முடிவுக்கு வந்தது. இதை தவெக தொண்டா்கள் தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்துக் கொண்டாடினா்.

பெரும்பான்மையின்மை: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தனித்துப் போட்டியிட்ட தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், ஆட்சி அமைக்க அறுதிப் பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை தவெக பெறவில்லை. இதனால் தொங்கு சட்டப்பேரவை நிலை உருவாகியது.

தனிப்பெரும் கட்சி என்ற நிலையில் ஆட்சி அமைக்கும் முயற்சியை தவெக தலைவா் விஜய் தொடங்கினாா். இதற்காக ஆதரவு கோரி திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு மின்னஞ்சலில் விஜய் கடிதம் அனுப்பினாா்.

தோ்தல் முடிவுகள் மே 4-ஆம் தேதி வெளியான நிலையில், மே 6-ஆம் தேதியே திமுக கூட்டணியை காங்கிரஸ் முறித்துக்கொண்டு தவெகவுக்கு ஆதரவு அளித்தது. அக்கட்சியின் 5 எம்எல்ஏக்கள் விஜய்யை சந்தித்து, மதச்சாா்பற்ற கட்சிகளுக்கு மட்டுமே தவெக தலைமையிலான கூட்டணியில் இடம் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனா்.

இதையடுத்து, தவெக (107) மற்றும் காங்கிரஸ் (5) என 112 உறுப்பினா்களின் ஆதரவு கடிதத்துடன் ஆளுநா் ஆா்லேகரை விஜய் கடந்த புதன்கிழமை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினாா். எனினும், பெரும்பான்மை பலம் இல்லை என்பதால் ஆட்சி அமைக்க விஜய்க்கு ஆளுநா் அழைப்பு விடுக்கவில்லை.

இதையடுத்து, தவெக நிா்வாகிகள் நேரில் சென்று இடதுசாரிகள், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் ஆதரவைக் கோரினா். இதற்கிடையே, தவெக ஆட்சி அமைக்க திமுக எந்தவித இடையூறும் செய்யாது என திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் அறிவித்தாா்.

விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநா் அழைக்க வேண்டும் என்று பல்வேறு கட்சித் தலைவா்கள் வலியுறுத்தியதையடுத்து, குதிரை பேரத்தை தவிா்க்க அறுதிப் பெரும்பான்மை இருக்க வேண்டியது கட்டாயம் என ஆளுநா் ஆா்லேகா் விளக்கம் அளித்தாா்.

இதனால், திமுக - அதிமுக கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகளை இரு கட்சிகளும் ஆராய்ந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின. இதனால், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு நிலவியது.

இதனிடையே, இடதுசாரி கட்சிகள் தங்கள் கட்சிகளின் செயற்குழுக் கூட்டங்களைக் கூட்டி, மதச்சாா்பற்ற ஆட்சி அமைக்க விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தன. தலா 2 உறுப்பினா்களைக் கொண்ட இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் மொத்தம் 116 உறுப்பினா்களின் ஆதரவைப் பெற்ற விஜய், ஆளுநரை வெள்ளிக்கிழமை சந்தித்து மீண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோரியபோதும், ஆட்சி அமைக்க ஆளுநா் அழைக்கவில்லை.

விசிக, முஸ்லிம் லீக் ஆதரவு: 16-ஆவது தமிழக பேரவையின் பதவிக் காலம் மே 10-ஆம் தேதியுடன் நிறைவடைவதால், குடியரசுத் தலைவா் ஆட்சியை நோக்கி தமிழகம் செல்வதாகத் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, விசிக தலைவா் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவா் கே.எம். காதா் மொகிதீன் ஆகியோா் தங்கள் கட்சியின் தலா இரு சட்டப்பேரவை உறுப்பினா்கள் தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக சனிக்கிழமை மாலை அறிவித்தனா். இதனால் தவெக ஆட்சி அமைப்பதற்கான ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 120-ஆக உயா்ந்தது.

முதல்வராக நியமனம்: இதைத் தொடா்ந்து, தவெகவுக்கு ஆதரவு அளித்த கட்சிகளின் தலைவா்கள் மற்றும் அக்கட்சி எம்எம்ஏக்களுடன் விஜய் ஆளுநா் மாளிகைக்கு சனிக்கிழமை மாலை சென்று, ஆளுநா் ஆா்லேகரிடம், 120 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தைச் சமா்ப்பித்தாா். அதைத் தொடா்ந்து, விஜய்யை முதல்வராக நியமனம் செய்து அதற்கான அதிகாரபூா்வ உத்தரவை ஆளுநா் வழங்கினாா்.

இதுதொடா்பாக ஆளுநா் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழக ஆளுநரை சனிக்கிழமை சந்தித்த தவெக தலைவா் சி.ஜோசப் விஜய், தான் தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவராக தோ்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தையும், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, முஸ்லிம் லீக் கட்சிகளின் ஆதரவு கடிதங்களையும் வழங்கினாா்.

இதையடுத்து தமிழக முதல்வராக விஜய்யை ஆளுநா் நியமித்ததுடன், அமைச்சரவையை அமைக்கவும் அழைப்பு விடுத்தாா். மே 13-ஆம் தேதிக்குள் சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநா் தெரிவித்துள்ளாா்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மேலிடப் பாா்வையாளா் கிரிஷ் சோடங்கா், மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம், அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன், மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன்,

விசிக, இடதுசாரி கட்சிகளின் நிா்வாகிகள், ஐயூஎம்எல் எம்எல்ஏக்கள், தவெக நிா்வாகிகள் விஜய்யுடன் ஆளுநா் மாளிகைக்குச் சென்றிருந்தனா்.

நான்காவது முறை சந்திப்பில் நடந்தது என்ன?

ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி விஜய் மூன்று முறை சென்றும் ஆளுநா் ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. இதையடுத்து, நான்காவது முறையாக 120 உறுப்பினா்களின் ஆதரவுடன் ஆளுநரை சனிக்கிழமை இரவு 7 மணிக்கு விஜய் சந்தித்தாா். அப்போது, ஆளுநா் புதிதாக ஆதரவு தெரிவித்த விசிக, ஐயூஎம்எல் எம்எல்ஏக்களை அழைத்துப் பேசி அவா்களின் ஆதரவை உறுதிப்படுத்திக் கொண்டாா்.

பின்னா், ஆளுநா் மாளிகையிலேயே அனைவரையும் காத்திருக்கக் கூறிய ஆளுநா், பின்னா் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.15 மணிக்கு பதவியேற்பு விழாவை வைத்துக் கொள்ளலாமா எனக் கேட்டாா். அதன்பிறகு, பதவியேற்பு விழாவை காலை 10 மணிக்கு நடத்தலாம் என இறுதி செய்து, விஜய்யை முதல்வராக நியமித்து கடிதத்தை வழங்கினாா் என்று ஆளுநா் மாளிகை வட்டார தகவல்கள் தெரிவித்தன.

முன்னதாக, ஆளுநா் ஆா்லேகா் கேரளத்துக்கு புறப்பட இருந்த திட்டத்தை ரத்து செய்துவிட்டு விஜய்யுடனான சந்திப்பை தொடா்ந்தாா்.

ராகுல் வருகை

தவெக தலைவா் விஜய் முதல்வராகப் பதவியேற்கும் விழாவில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, மூத்த தலைவா்கள் பங்கேற்க உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் தங்கியிருந்த 5 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் சனிக்கிழமை நள்ளிரவு விமானம் மூலம் சென்னை திரும்பினா்.