

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தலைநகரமாகவும், 4 தேசிய நெடுஞ்சாலைகள் சந்திக்கும் பகுதியாகவும் கிருஷ்ணகிரி தொகுதி உள்ளது. இந்தத் தொகுதி மக்களின் பிரதான தொழில் விவசாயம். கிருஷ்ணகிரி அணை இந்தத் தொகுதியில் உள்ளதால், இரண்டு போக நெல் சாகுபடி செய்கின்றனர். மா, முல்லை, நெல், தென்னை போன்ற பயிர்கள் பரவலாக சாகுபடி செய்யப்படுகின்றன.
கிருஷ்ணகிரி அணை, அவதானப்பட்டி சிறுவர் பூங்கா மற்றும் படகு இல்லம், காட்டுவீர ஆஞ்சநேயர் கோயில், தூய பாத்திமா அன்னை ஆலயம் போன்ற சுற்றுலா மையங்கள் உள்ளன. காவேரிப்பட்டணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல சிறு தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றின் மூலம் பல்லாயிரம் பேர் வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர்.
கிருஷ்ணகிரி சட்டப்பேரவைத் தொகுதியில் கிருஷ்ணகிரி நகராட்சி, காவேரிப்பட்டணம் பேரூராட்சி, 40 ஊராட்சிகள் உள்ளன. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், தீயணைப்பு நிலையம், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை போன்றவை கிருஷ்ணகிரியில் அமைந்துள்ளன.
வாக்காளர்கள் விவரம்:
ஆண்கள்: 1,27,387
பெண்கள்: 1,31,503
மூன்றாம் பாலினத்தவர்: 35
மொத்தம்: 2,58,925
சமூக நிலவரம்:
இந்தத் தொகுதியில் பெரும்பான்மையாக வன்னியர் சமுகத்தைத் சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், ஆதிதிராவிடர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளனர். இவர்களே இந்த சட்டப்பேரவை தொகுதி உறுப்பினரை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், உருது போன்ற மொழிகளை மக்கள் பேசுகின்றனர்.
கடந்த தேர்தல் வரலாறு:
கிருஷ்ணகிரி சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத்தேர்தல்களுடன் சேர்த்து இதுவரை 15 தேர்தல்கள் நடந்துள்ளன. இதில், 1951-இல் நடந்த தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி கவுண்டர் வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து நடந்த தேர்தல்களில் அதிமுக 6 முறையும், திமுக 6 முறையும், காங்கிரஸ் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2011 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த கே.பி.முனுசாமியும், 2016 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவைச் சேர்ந்த டி.செங்குட்டுவனும் வெற்றி பெற்றனர்.
1951: டி.கிருஷ்ணமூர்த்தி கவுண்டர் (சுயேச்சை)
1957: சு.நாகராஜ மணியகாரர் (காங்கிரஸ்)
1962: ஸ்ரீராமுலு (திமுக)
1967: பி.எம்.எம்.கவுண்டர் (காங்கிரஸ்)
1971: சி.மணியப்பன் (திமுக)
1977: கே.ஆர்.சின்னராசு (அதிமுக)
1980: கே.ஆர்.சின்னராசு (அதிமுக)
1984 : கே.ஆர்.சின்னராசு (அதிமுக)
1989: காஞ்சனா (திமுக)
1991: கே.முனி வெங்கடப்பன் (அதிமுக)
1996: காஞ்சனா கமலநாதன் (திமுக)
2001: வி.கோவிந்தராசு (அதிமுக)
2006: டி.செங்குட்டுவன் (திமுக)
2011: கே.பி.முனுசாமி (அதிமுக)
2016: டி. செங்குட்டுவன் (திமுக)
நிறைவேறிய திட்டங்கள்:
கிருஷ்ணகிரி அணையின் பிரதான மதகு சேதம் அடைந்த நிலையில், அனைத்து பிரதான மதகுகளையும் புதுப்பித்தது, கிருஷ்ணகிரியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அறிவிப்பு, எண்ணேகொல் திட்டப் பணிகளைத் தொடங்கியது ஆகியவை இந்த அரசின் சாதனைகளாக உள்ளன.
நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்:
சத்துணவுடன் கூடிய மாம்பழச் சாறு வழங்கப்படும் என கடந்த தேர்தலின் போது, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தது இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. தென்பெண்ணை ஆற்று உபரிநீரை ஏரிகளில் நிரப்புவது, கிருஷ்ணகிரி அருகே பெங்களூரு சாலையில் அமைந்துள்ள சுங்க வசூல் மையத்தை இடமாற்றம் செய்வது, கிருஷ்ணகிரி நகரில் புதைகுழி சாக்கடை திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவது, கிருஷ்ணகிரி வழியாக ரயில் பாதை அமைப்பது, கிருஷ்ணகிரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை திட்டம் குறித்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளன.
வேளாண்மைக் கல்லூரி, சட்டக் கல்லூரி ஆகியவை இல்லாதது இந்த மாவட்ட மக்களின் தொடர் ஏக்கமாக உள்ளது.
கிருஷ்ணகிரி தொகுதியைப் பொருத்தவரை கூட்டணி பலமே வெற்றியைத் தீர்மானிக்கும். அந்த வகையில் அதிமுக கூட்டணிக்கும் திமுக கூட்டணிக்கும் பலத்த போட்டி காணப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.