அந்தியூர்: வெற்றியை நிர்ணயிக்கும் சாதி வாக்குகள்

அந்தியூர் தொகுதியில் அதிமுக, திமுக வாக்குகள் சமபலத்தில் உள்ளன. பாமகவின் வன்னியர் வாக்குகள் அதிமுகவுக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன.
அந்தியூர் பத்ரகாளியம்மன் கோயில்
அந்தியூர் பத்ரகாளியம்மன் கோயில்
Published on
Updated on
2 min read

ஈரோடு மாவட்டத்தில் மலைகள், சமவெளிகள், கிராமப்புறங்களை அதிகம் கொண்டது அந்தியூர் தொகுதி. இத்தொகுதியில் 30 சதவீத இடங்கள் மலைப்பகுதிகளாக உள்ளன. அந்தியூர் பத்ரகாளியம்மன் கோயில், குருநாதசாமி கோயில்கள் புகழ்பெற்றவை. குருநாதசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு 4 நாள்கள் நடைபெறும் கால்நடைச் சந்தை தென்மாநில அளவில் புகழ்பெற்றது. 

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

கோபிசெட்டிபாளையம் வட்டம் (பகுதி)- புஞ்சைதுறைம்பாளையம், கொண்டையம்பாளையம், கணக்கம்பாளையம், பெருமுகை, சவுண்டப்பூர், அம்மாபாளையம், மேவாணி, பெருந்தலையூர், கூகலூர், புதுக்கரை, நஞ்சை புளியம்பட்டி, பொலவக்காளிபாளையம், கடுக்கம்பாளையம், சந்திராபுரம் கிராமங்கள்.

பேரூராட்சிகள்: வாணிப்புதூர், கூகலூர், பி.மேட்டுப்பாளையம்.

அந்தியூர் வட்டம் (பகுதி) - பர்கூர், கொமராயனூர், புதூர், சென்னம்பட்டி, எண்ணமங்கலம், சங்கராபாளையம், அந்தியூர், நகலூர், குப்பாண்டாம்பாளையம், பிரம்மதேசம், பச்சாம்பாளையம், கெட்டிசமுத்திரம், மாத்தூர், வெள்ளித்திருப்பூர், வேம்பத்தி, மூங்கில்பட்டி, கீழ்வானி, கூத்தம்பூண்டி கிராமங்கள்

பேரூராட்சிகள்: அந்தியூர் மற்றும் அத்தாணி.

வாக்காளர் விவரம்

ஆண்கள் -1,07,712
பெண்கள் -1,11,215
திருநங்கைகள் - 18
மொத்தம் -2,18,945

தொழில், சமூக நிலவரம்

அந்தியூர் தொகுதியில் ஏரிகள், நீர்நிலைகள் உள்ளதால், விவசாயமே முக்கியத் தொழிலாக உள்ளது. மிகவும் பின்தங்கிய தொகுதியான இப்பகுதியிலிருந்து படித்த இளைஞர்கள், பெண்கள் வேலைக்காக திருப்பூர், பெருந்துறை சிப்காட் உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு செல்லும் நிலையே உள்ளது.

ஒருசில பகுதிகளில் விசைத்தறி, கைத்தறித் தொழிலும் நடைபெறுகிறது. பரவலாக செங்கல் உற்பத்தித் தொழிலும் நடைபெறுகிறது. இத்தொகுதியில், சோளகர், லிங்காயத்து, மலையாளிகள் மலைப் பகுதியிலும், சமவெளிகளில் கொங்கு வேளாள கவுண்டர்கள், வன்னியர்கள், தாழ்த்தப்பட்டவர்களின் வாக்குகள் அதிகம் உள்ளன. செட்டியார், முதலியார் வாக்குகளும் கணிசமான அளவில் உள்ளது.

கடந்த தேர்தல்கள்

இதுவரை 13 தேர்தல்களை சந்தித்துள்ள அந்தியூர் தொகுதியில் அதிகபட்சமாக 7 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது. திமுக 4 முறை வெற்றி பெற்றுள்ளது. பாமக, காங்கிரஸ் தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன. தனித் தொகுதியாக இருந்த இத்தொகுதி கடந்த 2011 ஆம் ஆண்டு பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டது. இதையடுத்து, நடைபெற்ற இரு தேர்தல்களிலும் தொடர்ந்து அதிமுகவே வென்றுள்ளது.

1962 பெருமாள்ராசு - காங்கிரஸ்
1967 ஈ.எம்.நடராசன் - திமுக
1971 ம.நடராசன் - திமுக
1977 ப.குருசாமி - அதிமுக
1980 ச.குருசாமி - அதிமுக
1984 ப.மாதையன் - அதிமுக
1989 வி.பெரியசாமி - அதிமுக (ஜெ)
1991 வி.பெரியசாமி - அதிமுக
1996 ப.செல்வராசு - திமுக
2001 இரா.கிருட்டிணன் - பாமக
2006 எஸ்.குருசாமி - திமுக
2011 எஸ்.எஸ்.ரமணீதரன் - அதிமுக
2016 கே.ஆர்.ராஜகிருஷ்ணன் - அதிமுக

கடந்த 2016 தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகள்

கே.ஆர்.ராஜாகிருஷ்ணன் (அதிமுக) -71,575
ஏ.ஜி.வெங்கடாசலம் (திமுக) -66,263
வாக்கு வித்தியாசம் -5,312

கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட பணிகள்

குடிநீர் பிரச்னையைத் தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டுள்ளன. கிராமப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அந்தியூர் - அம்மாபேட்டை சாலை விரிவாக்கம், பர்கூர் மலைப்பாதை விரிவாக்கப் பணிகள் நடைபெற்றுள்ளன. புதிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.

தீர்க்கப்படாத பிரச்னைகள்

பரவலாகக் காணப்படும் குடிநீர் பிரச்னை, தொகுதி மக்களுக்கு நிலையான வேலைவாய்ப்பை வழங்கும்படியான தொழில் நிறுவனங்கள் இல்லாததால் இளைஞர்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். புதிய வேலைவாய்ப்பை உருவாக்கும் தொழில் நிறுவனங்கள் தொடங்கப்படவில்லை. அந்தியூர் பேரூராட்சி பகுதிகளில் 10 நாள்களுக்கு ஒருமுறையே சுழற்சி முறையில் குடிநீர் வழங்கப்படுகிறது. நீர்பாசனத் திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை.

மக்களின் எதிர்பார்ப்பு

புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, வேலைவாய்ப்பு அதிகரிக்கப்பட வேண்டும். அந்தியூரில் அரசு கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்பட வேண்டும். மணியாச்சி பள்ளம், வேதபாறை பாசனத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். அந்தியூர் பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும்.

சாதி வாக்குகள் பலம்

அந்தியூர் தொகுதியில் அதிமுக, திமுக வாக்குகள் சமபலத்தில் உள்ளன. பாமகவின் வன்னியர் வாக்குகள் அதிமுகவுக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன. முதலியார், செட்டியார், தலித் வாக்குகள் கணிசமாக உள்ளன. கிராமங்கள் நிறைந்த தொகுதியாக உள்ளதால் கவுண்டர், வன்னியர் இனத்தைச் சேர்ந்தவரே வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மலைவாழ் மக்களின் வாக்குகள் வெற்றியைத் தீர்மானிப்பவையாக உள்ளன.

போட்டியிட வாய்ப்புள்ள கட்சிகள்

அதிமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ கே.ஆர்.ராஜாகிருஷ்ணன், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் என்.ஆர்.கோவிந்தராஜர், முன்னாள் எம்எல்ஏ எஸ்.எஸ்.ரமணீதரன், முன்னாள் ஒன்றியச் செயலர் கே.பி.எஸ்.ராஜா, சிந்து ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். இத்தொகுதியில் போட்டியிட பாஜகவும் ஆர்வம் காட்டி வருகிறது.

திமுக கூட்டணியைப் பொருத்தவரை கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வாய்ப்பை நழுவவிட்ட ஏ.ஜி.வெங்கடாசலத்துக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது. திமுக மாவட்டச் செயலர் என்.நல்லசிவமும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com