சிங்காநல்லூர்: விட்ட தொகுதியை மீட்குமா அதிமுக?

கடந்த முறை கோவை மாவட்டத்தில் அதிமுக தோல்வி அடைந்த ஒரே தொகுதி என்பதால் சிங்காநல்லூரை இந்த முறை கைப்பற்றியே தீர வேண்டும் என்ற ஆவலில் அதிமுக உள்ளது. 
சிங்காநல்லூர்: விட்ட தொகுதியை மீட்குமா அதிமுக?

கோவை மாநகரின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது சிங்காநல்லூர் தொகுதி. அதிகளவில் தொழிற்சாலைகளும், தொழிலாளர்களும் நிறைந்த பகுதி. பஞ்சாலைகளே சிங்காநல்லூர் பகுதியின் அடையளமாக உள்ளன.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

கோயம்புத்தூர் (மாநகராட்சி) வார்டு எண் 1 முதல் 20 வரை

வாக்காளர் விவரம்

ஆண்கள் - 1,60,790
பெண்கள் -1,62,799
மூன்றாம் பாலினத்தவர் - 25
மொத்தம் - 3,23,614

தொழில், சமூக நிலவரம்

கிரைண்டர், மிக்சி தயாரிப்பு தொழில் நிறுவனங்கள், மோட்டார், பவுண்டரி, பம்ப்செட் உதிரிபாகங்கள் தயாரிக்கும் சிறு, குறு தொழிற்கூடங்கள் நிறைந்த தொகுதி. அத்துடன் பல பெரிய பஞ்சாலைகள் இந்தத் தொகுதியில் உள்ளன. மேலும் பிரபலமான பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள் நிறைந்த தொகுதி. இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தனியார் மருத்துவக் கல்லூரிகள் அமைந்துள்ளன. நாயக்கர், கவுண்டர், தேவாங்கர், குரும்பர் ஆகிய சமூக மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியாக இத்தொகுதி உள்ளது.

கடந்த தேர்தல்கள்

1967 முதல் தேர்தலை சந்திக்கும் இத்தொகுதியில் 4 முறை திமுக வென்றுள்ளது. 3 அதிமுகவும், தலா 2 முறை பிரஜா சோசலிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும், ஜனதா கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

1967  பி. வேலுச்சாமி பிரஜா - சோசலிஸ்ட் கட்சி
1971  ஏ.சுப்ரமணியன் பிரஜா - சோசலிஸ்ட் கட்சி
1977  ஆர்.வெங்குடுசாமி என்ற வெங்குடு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
1980  ஏ. டி.குலசேகர் - திமுக
1984  ஆர்.செங்காளியப்பன் - ஜனதா கட்சி
1989  இரா.மோகன் - திமுக
1991  பி.கோவிந்தராசு  - அதிமுக
1996 என்.பழனிசாமி - திமுக
2001 கே.சி.கருணாகரன் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
2006 ஆர்.சின்னசாமி - அதிமுக
2011 ஆர்.சின்னசாமி - அதிமுக
2016  நா.கார்த்திக் - திமுக

2016 தேர்தல்

கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் 9 தொகுதிகளில் அதிமுக வென்றபோதும், சிங்காநல்லூரில் மட்டும் திமுக வேட்பாளர் நா.கார்த்திக், அதிமுக வேட்பாளர் சிங்கை முத்துவை 5,180 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றியை ருசித்தார்.

கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட பணிகள்

சிங்காநல்லூர் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ. 4 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பில் ஸ்மார்ட் வகுப்பறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. 56 ஆவது வார்டு அண்ணா நகரில் ரூ. 11 லட்சத்தில் தார்சாலை, ஆவாரம்பாளையத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம், 59 ஆவது வார்டு இந்திரா நகர், மகேஷ் நகர், 38 ஆவது வார்டு சி.எம்.சி.காலனி, 60 ஆவது வார்டு மாரியம்மன் கோயில் வீதி பகுதிகளில் ரூ.10 லட்சம் மதிப்பிலும், 61 ஆவது வார்டு காந்தி நகர் மற்றும் திருவள்ளுவர் நகரில் ரூ.5 லட்சத்தில் ஆழ்துளைக் கிணறு மற்றும் பகிர்மானக் குழாய் அமைத்தல், சிங்காநல்லூர் பகுதிகளில் ரூ.40 லட்சம் மதிப்பில் சூரிய ஒளி சக்தி தெருவிளக்குகள், 59 ஆவது வார்டு, நீலிக்கோணம்பாளையத்தில் ரூ.7 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் பூங்கா, பீளமேடு, கிருஷ்ணராயபுரம், உப்பிலிபாளையம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், உடையாம்பாளையம் மாநகராட்சிப் பள்ளிகளுக்கு ரூ.4 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பில் உபகரணங்கள் உள்ளிட்ட ரூ.12 கோடியே 57 லட்சத்து 47 ஆயிரத்து 800 மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றுள்ளன. 

தொடரும் மக்கள் பிரச்னைகள்

சிங்காநல்லூர் எஸ்.ஐ.ஹெச்.எஸ். காலனியில் கடந்த 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ரயில்வே உயர்மட்டப் பாலம் அமைக்கும் பணியானது, 8 ஆண்டுகளுக்கு மேலாக முடிவடையாமல் கிடப்பில் உள்ளது. சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு வீடுகளில் பெரும்பாலான வீடுகள் சிதிலமடைந்து இடியும் நிலையில் உள்ளன. சிதிலமடைந்த வீடுகளை இடித்து விட்டு இங்கு குடியிருப்பவர்களுக்கு,  இதே இடத்தில் மீண்டும் அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும் என்பது குடியிருப்புவாசிகளின் நிறைவேற்றப்படாத கோரிக்கையாகவே தொடருகிறது.

சிங்காநல்லூர் தொகுதியில் குண்டும் குழியுமான சாலைகளும், குடிநீர்த் தட்டுப்பாடும் முக்கியமான பிரச்னைகளாக உள்ளன. சிங்காநல்லூர் குளம், படகுத்துறை பல லட்ச ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இங்குள்ள படகுத் துறையை சீரமைத்து பொழுதுபோக்கு அம்சமாக மாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள், மக்கள் பலரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
போட்டியிட வாய்ப்புள்ள கட்சிகள்

திமுகவின் தற்போதைய எம்எல்ஏவான நா.கார்த்திக், கோவை மாநகராட்சியின் துணை மேயராகப் பதவி வகித்தவர். இவர் தனது தொகுதிக்குள்பட்ட பகுதிகள் மட்டுமின்றி மாநகரில் நிறைவேற்றப்படாத திட்டங்கள், அடிப்படை வசதிகள், நீண்டகாலமாக கிடப்பில் உள்ள பணிகள் உள்ளிட்ட மக்கள் பிரச்னைக்காக தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகிறார். குறிப்பாக, மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர் ஒப்பந்த உரிமையை பிரான்ஸ்  நாட்டைச் சேர்ந்த சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதைக் கண்டித்தும், அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால், கோவையில் அனைத்துத் தரப்பினருக்கும் அறிமுகமானவராக இருக்கிறார். இதனால் இந்தத் தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் அவரே போட்டியிட இருக்கிறார்.

கடந்த முறை கோவை மாவட்டத்தில் அதிமுக தோல்வி அடைந்த ஒரே தொகுதி என்பதால் சிங்காநல்லூரை இந்த முறை கைப்பற்றியே தீர வேண்டும் என்ற ஆவலில் அதிமுக உள்ளது. இந்த முறை சிங்காநல்லூரில் அதிமுக சார்பில் போட்டியிட எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்டச் செயலர் கே.ஆர்.ஜெயராம், கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த சிங்கை முத்து, தொழில்நுட்பப் பிரிவு மண்டலச் செயலர் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோரிடையே போட்டி நிலவுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com