சூலூர்: மூன்று முறையும் அதிமுக வெற்றி பெற்ற தொகுதி
தேர்தல் நடைபெற்றுள்ள மூன்று முறையும் அதிமுக அணியே வெற்றி பெற்றிருப்பதால் சூலூர் தொகுதியை தன்வசமே வைத்துக் கொள்ள அதிமுக விரும்புகிறது.


ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில் பல்லடம் சட்டமன்ற தொகுதியில் ஒரு பகுதியாக இருந்த சூலூர், திருப்பூர் தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்ட பிறகு கடந்த 2011ஆம் ஆண்டில் தொகுதி மறு சீரமைப்பின்போது புதிய தொகுதியாக உருவானது.
நொய்யல் நதிக் கரையோரம் 13 ஆம் நூற்றாண்டில் சீரமைக்கப்பட்ட இரண்டு குளங்கள் சூழ்ந்து, பசுமை போர்த்திய வேளாண் நிலங்களோடு காட்சி தரும் சூலூர், சுமார் 2,500 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. வேளாண்மையும், விசைத்தறித் தொழிலும் சூலூர் சுற்று வட்டார மக்களின் வாழ்வாதாரமாக இருந்து வருகின்றன.
தொகுதியில் இடம் பெற்றுள்ள பகுதிகள்
சூலூர் சட்டப்பேரவை தொகுதியில் கருமத்தம்பட்டி, இருகூர், கண்ணம்பாளையம், பள்ளபாளையம், சூலூர், சாமளாபுரம் மோப்பிரிபாளையம் பேரூராட்சிகள் உள்ளன.
மேலும், கணியூர், அரசூர், முத்துக்கவுண்டன்புதூர், பட்டணம், நீலம்பூர், சின்னியம்பாளையம், கரவளி மாதப்பூர், அப்பநாயக்கன்பட்டி, போகம்பட்டி, இடையபாளையம், ஜே கிருஷ்ணாபுரம், ஜல்லிப்பட்டி, காடாம்பாடி, காடுவெட்டிபாளையம், கலங்கல், கள்ளப்பாளையம், கம்மாளப்பட்டி, காங்கேயம்பாளையம், கிட்டாம்பாளையம், குமாரபாளையம், மலைபாளையம், மயிலம்பட்டி, பச்சாபாளையம், பதுவம்பள்ளி பாப்பம்பட்டி பீடம்பள்ளி பூரண்டாம்பாளையம், ராசிபாளையம், செலக்கரசல், செம்மாண்டம்பாளையம், செஞ்சேரி, அய்யம்பாளையம், செஞ்சேரிபுதூர் தாளக்கரை, வதம்பச்சேரி, வடவள்ளி, வடவேடம்பட்டி, வாரப்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளும் உள்ளன.
வாக்காளர் விவரம்
ஆண்கள் - 1,54,197
பெண்கள் - 1,61,102,
மூன்றாம் பாலினத்தவர் - 26
மொத்தம் - 3,153,25.
தொழில், சமூக நிலவரம்
வேளாண்மை, பஞ்சாலைகள், உற்பத்தித் துறை சார்ந்த தொழிற்சாலைகள், விசைத்தறி ஆகியவை இந்தத் தொகுதி மக்களின் முக்கியத் தொழில்கள். இத்தொகுதியில் பஞ்சாலைகள் அதிக அளவில் உள்ளன. இந்தத் தொகுதியில் பிரபல வெளி நாட்டு நிறுவனமான சுஸ்லான் காற்றாலை நிறுவனம், அல்ஸ்டாம் மெட்ரோ ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன.
சூலூர் வானூர்தி படைத் தளம், வானூர்தி பழுது பார்க்கும் தளங்கள் இந்தத் தொகுதியில் உள்ளன. கோவை மாநகரின் புறநகரில் உள்ள சூலூர் தொகுதியில் உள்நாட்டுத் தொழில் முனைவோர் அதிக அளவில் பல தொழிற்சாலைகளை துவங்கி வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். சூலூர் தொகுதியில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பலரும் பணி நிமித்தமாக குடியேறி வருவது இங்கு மக்கள் தொகை பெருக்கத்துக்கு முக்கியக் காரணமாக உள்ளது.
சூலூர், கண்ணம்பாளையம், கருமத்தம்பட்டி, சோமனூர், சாமளாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விசைத்தறி தொழிலில் பல ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர். தொகுதியில் மக்கள் தொகை அடிப்படையில் கொங்கு வேளாள கவுண்டர் இனத்தவர் பெரும்பான்மையினராக உள்ளனர். அடுத்தபடியாக தாழ்த்தப்பட்டோர், தேவர், நாயுடு சமுதாயத்தினர் வசிக்கின்றனர்.
கடந்த தேர்தல்கள்
இந்தத் தொகுதியில் நடைபெற்ற முதல் தேர்தலில் (2011) அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் தினகரன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக கூட்டணியின் கொங்குநாடு மக்கள் கட்சி வேட்பாளர் ஈஸ்வரனை 29,532 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
2016 தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த ஆர்.கனகராஜ் வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட கனகராஜ் 1,00,977வாக்குகளைப் பெற்றார். எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வி.எம்சி. மனோகரன் 64,346 வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தார். வாக்கு வித்தியாசம் 36,631. கனகராஜ் எம்எல்ஏ மறைவை அடுத்து 2019 மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
இதில், அதிமுக சார்பில் வி.பி.கந்தசாமி 1,00,078 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி 90,669 வாக்குகளையே பெற்றார். அதிமுக வேட்பாளர் வி.பி.கந்தசாமி 10,133 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட பணிகள்
கடந்த 5 ஆண்டுகளில் இரண்டு அதிமுக எம்எல்ஏக்கள் பதவி வகித்துள்ள இந்தத் தொகுதியில், சூலூருக்கு புதிய நீதிமன்ற கட்டடம், புதிய பேருந்து நிலைய கட்டடம், புதிய வட்டாட்சியர் அலுவலகம், தீயணைப்பு, மீட்புப் படை அலுவலகம் போன்ற கட்டுமானப் பணிகள் நடைபெற்றுள்ளன. சூலூர் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனையாக வளர்ச்சியடைந்துள்ளது. சூலூர் தொகுதியில் மட்டும் 4 மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
ராவத்தூர், பட்டணம்புதூர் ஆகிய இடங்களில் நொய்யல் ஆற்றில் புதிய மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. நிலத்தடி நீர் தொட்டிகள், மேல் நிலை நீர்த் தொட்டிகள், கிராமப்புற சாலைகள், இணைப்பு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தொடரும் மக்கள் பிரச்னைகள்
திருச்சி சாலையில் பாப்பம்பட்டி பிரிவில் இருந்து சிந்தாமணிபுதூர் வரை விரிவாக்கப் பணிகளை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். பஞ்சாலைகள் நலிவடைந்து வருவதால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதேபோல் விசைத்தறி தொழிலை பாதுகாக்க விசைத்தறி உரிமையாளர்கள் கடன் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி வருகின்றனர். அரசு அறிவித்துள்ள பயிர்க் கடன் தள்ளுபடி முழுமையாக விவசாயிகளை சென்றடையவில்லை என்று குறை கூறப்படுகிறது.
போட்டியிட வாய்ப்புள்ள கட்சிகள்
தேர்தல் நடைபெற்றுள்ள மூன்று முறையும் அதிமுக அணியே வெற்றி பெற்றிருப்பதால் சூலூர் தொகுதியை தன்வசமே வைத்துக் கொள்ள அதிமுக விரும்புகிறது. தற்போதைய எம்எல்ஏ வி.பி.கந்தசாமி மீண்டும் சீட் கேட்டிருக்கிறார்.
அத்துடன் கோவை மாநகராட்சியின் முன்னாள் மேயரான செ.ம.வேலுசாமியும் இந்தத் தொகுதிக்கு குறி வைத்திருக்கிறார். அவருடன், அதிமுகவின் தெற்கு ஒன்றிய செயலர் குமரவேல், வடக்கு ஒன்றிய செயலர் கந்தவேல், ஒன்றியக் குழுத் தலைவர் பாலசுந்தரம் ஆகியோரும் வாய்ப்பு கேட்டுள்ளனர்.
அதிமுக கூட்டணியில் தேமுதிக ஏற்கெனவே வெற்றி பெற்றிருப்பதாலும், இந்தத் தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற வாய்ப்பு இருப்பதாலும், தேமுதிக சூலூர் தொகுதியை கேட்டு வருவதாக கூறப்படுகிறது. முன்னாள் எம்எல்ஏவான பனப்பட்டி தினகரன் தேமுதிக சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருக்கிறார்.
அதிமுகவின் மற்றொரு கூட்டணி கட்சியான பாஜகவும் இந்தத் தொகுதியை கேட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்கட்சியின் விவசாயிகள் பிரிவு மாநிலத் தலைவர் ஜி.கே.நாகராஜ், மாநில துணைத் தலைவர் கனகசபாபதி, ஜெகந்நாதன், மோகன் மந்திராசலம் ஆகியோரும் இந்தத் தொகுதிக்கு குறி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
எதிரணியில் திமுக சார்பில் ஒன்றிய பொறுப்பாளர் தளபதி முருகேசன், கண்ணம்பாளையம் நகர பொறுப்பாளர் சண்முகம், இளைஞரணி நிர்வாகி சுரேஷ் ஆகியோர் தங்கள் கட்சித் தலைமையிடம் சீட் கேட்டிருக்கின்றனர். அதேநேரம் திமுக கூட்டணியில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியும் சூலூர் தொகுதிக்கு போட்டி போடுகிறது.
கடந்த தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றிருந்தாலும் வாக்கு வித்தியாசம் தேர்தலுக்கு தேர்தல் குறைந்து கொண்டே வந்திருப்பதால் திமுக கூட்டணி சார்பில் இந்த தொகுதியில் நன்கு அறிமுகமான வேட்பாளர் நிறுத்தப்பட்டாலோ, தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள கவுண்டர் இன வாக்கு வங்கியைக் கொண்டிருக்கும் கொமதேக போட்டியிட்டாலோ இந்த முறை போட்டி கடுமையாக இருக்கும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...