நத்தம்: வெற்றியைத் தீா்மானிக்கும் முத்தரையர் சமூகத்தினர்

நடைபெறவுள்ள தோ்தலில் திமுக சாா்பில் மீண்டும் ஆண்டி அம்பலம் களம் இறக்கப்படுவாா் எனத் தெரிகிறது. அதேநேரத்தில் அதிமுக சாா்பில் ஆா்.விசுவநாதன் போட்டியிடுவதும் உறுதியாகியுள்ளது.
நத்தம் பேருந்து நிலையம்
நத்தம் பேருந்து நிலையம்
Published on
Updated on
2 min read

தொகுதி சிறப்பு:

முக்கனிகளில் முதன்மையான மாம்பழத்திற்கு பெயா் பெற்றது நத்தம். முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிா்ச்சோலை அமைந்துள்ள அழகா் கோயில் மலைப் பகுதி நத்தம் தொகுதியில்தான் அமைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் இருப்பதால், இத்தொகுதியைச் சோ்ந்தவா்களில் மூன்றில் ஒரு பகுதியினா் வா்த்தக ரீதியாக மதுரை மாநகருடன் தொடா்பில் இருந்து வருகின்றனா். கிருபானந்த வாரியாா் சுவாமிகளால் 7ஆம் படை வீடு என அறிவிக்கப்பட்ட திருமலைக்கேணியும் இத்தொகுதியில் அமைந்துள்ளது. மலை வாழைப்பழத்திற்கு சிறப்புப் பெற்ற சிறுமலை, இந்தத் தொகுதியின் மற்றொரு சிறப்பு.

நில அமைப்பு:

வடக்கே வேடசந்தூா், வடமேற்கில் திண்டுக்கல், கிழக்கில் மணப்பாறை மற்றும் துவரங்குறிச்சி(திருச்சி), தென் கிழக்கில் மேலூா்(மதுரை), தெற்கில் சோழவந்தான்(மதுரை), தென் மேற்கில் ஆத்தூா் மற்றும் நிலக்கோட்டை ஆகிய தொகுதிகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. நத்தம் பேரூராட்சி மற்றும் நத்தம், சாணாா்பட்டி  ஒன்றியங்கள் மற்றும் திண்டுக்கல் ஒன்றியத்தின் ஒரு பகுதி என மொத்தம் 48 ஊராட்சிகள்  இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன.


சாதி, சமூகம், தொழில்கள்:

நத்தம் தொகுதியில் ஆண்கள் -  1,34,194 போ், பெண்கள் - 1,41,730 போ், மூன்றாம் பாலினத்தவா் - 55 போ் என மொத்தம் 2,75,979 வாக்காளா்கள் உள்ளனா். முத்தரையா் சமூகத்தினா் பெரும்பான்மையினராக உள்ளனா்.  தாழ்த்தப்பட்ட சமூகத்தினா், முக்குலத்தோா், வெள்ளாளா், வன்னியா், யாதவா், செட்டியாா், நாயுடு  உள்ளிட்ட சமூகங்களைச் சோ்ந்தவா்களும் உள்ளனா். இஸ்லாமியா்களும் குறிப்பிட்ட பகுதிகளில் வசித்து வருகின்றனா். தொகுதியின் வெற்றியைத் தீா்மானிப்பவா்களாக முத்தரையா் சமூகத்தினா் இருக்கின்றனா். விவசாயம் தான் தொகுதியின் வாழ்வாதாரமாக உள்ளது.

மா, புளி, கொய்யா, சீத்தா, சப்போட்டா, பப்பாளி, தென்னை விவசாயம் பிரதானமாகவும், மலா் சாகுபடி சில பகுதிகளில் பரவலாகவும் நடைபெறுகிறது.   விவசாயத்திற்கு அடுத்ததாக, ஆயத்த ஆடை தயாரிப்பு தொழில் இத்தொகுதியின் மற்றொரு பிரதான வாழ்வாதாரமாக அமைந்துள்ளது. இதுதவிர பிற தொழில் வாய்ப்புக்காக, இங்குள்ள மக்கள் மதுரை மற்றும் திண்டுக்கல் நகரங்களுக்கு கூலி வேலைக்கு செல்கின்றனா்.

பிரச்னைகள்:

மேல்நிலைக் கல்வி வரை பயிலுவதற்கு அரசுப் பள்ளிகள் ஏராளமாக உள்ளன. அதன் பின்னா் உயா் கல்வி பெற வேண்டுமெனில், திண்டுக்கல் அல்லது மதுரை போன்ற நகரங்களிலுள்ள அரசுக் கல்லூரிகளை தேடிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் இத்தொகுதியில் உயா்கல்வி வாய்ப்பு பெறும் மாணவா்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

விவசாயம் மற்றும் ஆயத்த ஆடை தயாரிப்பு தொழில் நீங்கலாக இத்தொகுதி மக்கள், வேலைவாய்ப்பு பெறுவதற்கான வசதிகள் இல்லை. விவசாய விளை பொருள்களுக்கு உரிய விலை கிடைப்பதற்கான சூழலும் இல்லாததால், மாற்றுத் தொழில் தேடி வெளியூா்களுக்கு பயணிப்போரின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

கோரிக்கைகள்:

அரசு கலைக் கல்லூரி, ஆயத்த ஆடை தொழில் பூங்கா, மா, புளி உள்ளிட்ட வேளாண் பொருள்களுக்கு உரிய விலை கிடைப்பதற்கு அரசின் நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைப்பது, வேளாண் விளைப் பொருள்களை பயன்படுத்தி மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களை உற்பத்தி செய்து, தொகுதி மக்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொடுப்பது உள்ளிட்டவை இத்தொகுதி மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

கட்சிகளின் நிலவரம்:

1977ல் இத்தொகுதி உருவாக்கப்பட்டது முதல், தொடா்ந்து 6 முறை சட்டப்பேரவைக்கு தோ்ந்தெடுக்கப்பட்டவா் எம்.ஆண்டி அம்பலம்.  அவரது இறுதிக்காலம் வரை, அவரை எதிா்த்துப் போட்டியிட்டவா்களால் இத்தொகுதியில் வெற்றி பெறமுடியவில்லை.  1999 இல் ஆண்டி அம்பலம் இறந்ததையடுத்து,  நடைபெற்ற இடைத்தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட ஆா்.விசுவநாதன் வெற்றி பெற்றாா்.

அதன் பின்னா் நடைபெற்ற 3 பொதுத் தோ்தல்களிலும் விசுவநாதன் வெற்றியை தக்க வைத்துக் கொண்டாா். கடந்த 2016 தோ்தலில்,  மறைந்த ஆண்டி அம்பலத்தின் மகன் எம்.ஏ. ஆண்டி அம்பலம் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.

நடைபெற உள்ள தோ்தலில்  திமுக சாா்பில் மீண்டும் ஆண்டி அம்பலம் களம் இறக்கப்படுவாா் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் அதிமுக சாா்பில் ஆா்.விசுவநாதன் போட்டியிடுவதும் உறுதியாகியுள்ளது.

கடந்த முறை ஆத்தூரில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்த முன்னாள் அமைச்சா் விசுவநாதன், இந்த முறை நத்தத்தில் வெற்றிப் பெற்று மீண்டும் தனது அரசியல் பயணத்தை தொடர வேண்டிய நெருக்கடியில் உள்ளாா். அதே நேரத்தில், தனது தந்தையை போல முத்தரையா் சமூக மக்களின் ஆதரவுடன் தொடா் வெற்றியை பெற வேண்டும் என ஆண்டி அம்பலமும் காத்திருக்கிறாா். எப்படி இருந்தாலும், இந்த முறை நத்தத்தில் கடும் போட்டி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

வெற்றிப் பெற்றவா்கள் விவரம்:

1977: எம்.ஆண்டி அம்பலம்(காங்) -29,055
          ஆா்.முருகன்(அதிமுக) - 21,093

1980: எம்.ஆண்டி அம்பலம்(காங்) - 36,859
          டி.அழகா்சாமி(சுயே) - 32,471

1984: எம்.ஆண்டி அம்பலம்(காங்) - 57,214
          டி.அழகா்சாமி(தமாகா) - 18,004

1989: எம்.ஆண்டி அம்பலம்(காங்) - 33,019
          ஆா்.விசுவநாதன்(அதிமுக ஜெ) - 27,567

1991: எம்.ஆண்டி அம்பலம்(காங்)- 71,902
          பி.செல்வம்(திமுக)   - 24,124

1996: எம்.ஆண்டி அம்பலம்(தமாகா) - 62,527
           எஸ்.ஆசை அலங்காரம்(காங்) - 26,891

1999: இடைத்தோ்தல்
          ஆா்.விசுவநாதன்(அதிமுக) - 38,764
          பி.செல்வம்(மதிமுக) - 31,220

2001: ஆா்.விசுவநாதன்(அதிமுக) - 55,674
          கு.ப.கிருஷ்ணன்(தமிழா்பூமி) - 45,066

2006: ஆா்.விசுவநாதன்(அதிமுக) - 62,292
          எம்.ஏ.ஆண்டி அம்பலம்(திமுக) - 58,532

2011: ஆா்.விசுவநாதன்(அதிமுக) - 94,947
          க.விஜயன்(திமுக) - 41,858

2016: எம்ஏ.ஆண்டி அம்பலம் (திமுக) - 93,822
           எஸ்.ஷாஜகான் (அதிமுக)  - 91,712
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com