ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

தொகுதிக்கு செய்தது என்ன? ராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ. ஐட்ரீம் ஆர். மூர்த்தி

News image
Updated On :25 மார்ச் 2026, 10:35 pm

தினமணி செய்திச் சேவை

ராயபுரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ஐட்ரீம் ஆர்.மூர்த்தி கடந்த 5 ஆண்டுகளில் செய்துள்ள சாதனைகள் குறித்து தினமணி செய்தியாளரின் கேள்விகளுக்கு அளித்த பதில்கள்:

ராயபுரம் தொகுதியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்ட பணிகள்?

சென்னையின் பழைமையான பகுதிகளில் ஒன்றான ராயபுரம் தொகுதியில் அடிப்படை மற்றும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு கடந்த 5 ஆண்டுகளில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தங்கச்சாலையில் உள்ள தொழிற்பயிற்சி மையம் திறன் மேம்பாட்டு மையமாகத் தரம் உயர்த்தப்பட்டது. வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் செட்டித்தோட்டம், எம்.எஸ்.நகர், ராம்தாஸ் நகர் ஆகிய இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள், வால்டாக்ஸ் சாலை, கல்லறை சாலை ஆகிய இடங்களில் திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆர்.எஸ்.ஆர்.எம். மகப்பேறு மருத்துவமனை உள்ளிட்டவற்றில் மட்டும் சுமார் ரூ. 500 கோடி செலவில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அரசுப் பள்ளிகளுக்கு சுமார் ரூ. 25 கோடி செலவில் கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. கிழக்கு கல்லறை சாலையில் ரூ.10 கோடி செலவில் சமூக நீதி மாணவர் விடுதி அமைக்கப்பட்டுள்ளது. எஸ்.என். செட்டி தெருவில் 600 மாணவிகள் தங்கும் விடுதிக்கான கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.

நீண்ட காலம் நிலுவையில் இருந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதா?

தங்கச்சாலை அருகே முக்கோண ரயில்வே பாதைகளுக்கு இடையே தீவு போல் இருந்து வந்த போஜராஜ நகர் மக்கள் கடந்து செல்ல சுரங்கப் பாதை அமைக்க வேண்டும் என்ற 50 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரிந்த மாடுகளை ஒரே இடத்தில் பராமரிக்கும் வகையில் தங்கச்சாலையில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் கால்நடை பராமரிப்பு மையம் புதிதாக அமைக்கப்பட்டது. மூலக்கொத்தளம் மயானம் சீரமைக்கப்பட்டு மின்சார தகன மேடை, எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது.

கழிவு நீர் அகற்றல், குடிநீர் வழங்கல், மழை நீர் வடிகால் குறித்த திட்டங்கள் என்ன?

பழைமையான பகுதி என்பதால் குறுகிய விட்டத்தில் குழாய்கள் பதிக்கப்பட்டிருந்ததால் எங்கு பார்த்தாலும் கழிவுநீர் வெளியேறி சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது. இப்பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் சுமார் 6 கி.மீ. நீளத்திற்கு பெரிய விட்டத்தில் புதிய குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. மேலும், புதிய குடிநீர்க் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டதால் லாரிகள் மூலம் குடிநீர் வழங்குவது வெகுவாகக் குறைக்கப்பட்டது. முக்கிய வணிகப் பகுதியான எம்.சி.சாலைக்கு அருகிலேயே சுமார் 2 லட்சம் லிட்டர் வரை மழைநீரைத் தேக்கி வைக்கவும், இதைவிட அதிகமான மழைநீரை கடலுக்குக் கொண்டுசெல்ல கால்வாயும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. மழைக் காலங்களில் மின் கசிவு ஆபத்தைத் தவிர்க்க சுமார் 750 மின்சார பெட்டிகள் சுமார் 2 அடி உயரத்துக்கு தூண் அமைக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இத்திட்டங்கள் மூலம் எவ்வித கனமழை பெய்தாலும் ராயபும் பகுதி பாதிக்காது.

செயல்பாட்டுக்கு வராத முக்கியத் திட்டங்கள் குறித்து....

ராயபுரம் மேம்பாலம் முதல் காசிமேடு மயானம் வரை சுமார் 3 கி.மீ. நீளத்துக்கு மேம்பாலம் அமைத்தல், 150 ஆண்டுகளுக்கும் மேலான ராயபுரம் ரயில் நிலையத்தை சென்னையின் நான்காவது பயணிகள் முனையமாக மாற்றுவது, இரண்டு இடங்களில் தலா ஒரு ஏக்கர் பரப்பளவில் கிரிக்கெட், கபடி, கால்பாந்து, கூடைப்பந்து, இறகுப் பந்து உள்ளிட்ட அனைத்து விளையாட்டு வீரர்கள் திறன் பெறும் வகையில் நவீன பயிற்சி மையம் அமைக்கும் திட்டம், அனைத்து தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள பழைமையான குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்களை நீக்கிவிட்டு, புதிதாக பெரிய விட்டத்திலான குழாய்களை அமைக்கும் திட்டம் வடிவமைக்கப்பட்டும் செயல்படுத்த போதிய கால அவகாசம் இல்லாமல் போய்விட்டது.

நேர்காணல்: முகவை க.சிவகுமார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.