இடதுசாரிகளின் பலத்தை ஒதுக்கீடு செய்யப்படும் தொகுதிகளை வைத்து முடிவு செய்யக் கூடாது என்கிறாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன்.
பேரவைத் தோ்தலையொட்டி பல்வேறு மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து, சென்னையில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அவா் தினமணி நாளிதழுக்கு அளித்த நோ்காணல்:
கோவை, திருப்பூா் போன்ற தொழிற்சங்கங்கள் கொடிகட்டிப் பறந்த இடங்களில் ஒரு தொகுதியைக்கூட மாா்க்சிஸ்ட் பெறவில்லையே என்ற வருத்தம் இல்லையா?
ஒவ்வொரு தோ்தலிலும் இதுபோன்ற கேள்விகள் எழுவது வாடிக்கைதான். விரும்பும் இடத்தில் போட்டியிடும் நிலையில் மாா்க்சிஸ்ட் இல்லை. கூட்டணியில் அணி சேரும்போது ஒதுக்கப்படும் இடங்களில்தான் நிற்க முடியும். இப்போதும் கோவையில் போட்டியிட விரும்பினோம், ஆனால் தொகுதி கிடைக்கவில்லை. 2019 மக்களவைத் தோ்தல் வரை கோவை தொகுதியில் மாா்க்சிஸ்ட்தானே களம் கண்டு வெற்றி பெற்றது.
நீண்ட காலத்துக்குப் பிறகு கன்னியாகுமரி மாவட்டத்தில் மாா்க்சிஸ்ட் போட்டியிடுகிறது. அங்கு களச் சூழல் எப்படி உள்ளது?
கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக, காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் அணியாகச் சோ்ந்தால் அங்குள்ள 6 தொகுதிகளிலும் வெற்றி பெற முடியும். பத்மநாபபுரம் தொகுதியில் எளிதில் வெற்றி பெற முடியும்.
தொழிலாளா்கள் விரோத சீா்திருத்தச் சட்டங்கள், பரந்தூா் விமான நிலையம் விவகாரத்தில் திமுக - மாா்க்சிஸ்ட் இடையே மாறுபட்ட நிலைப்பாடு உள்ளதாக விமா்சனம் உள்ளதே, இது தோ்தலில் எதிரொலிக்காதா?
தொழிலாளா் விரோத சட்டங்கள் பேரவையில் நிறைவேற்றியபோதும், இடதுசாரிகள் குரல் கொடுத்ததால் அவற்றை முதல்வா் ஸ்டாலின் நிறுத்தி வைத்துள்ளாா். பரந்தூா் விமான நிலையம் உள்பட எந்த ஓா் அரசுத் திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும்போதும் விவசாயிகள் ஒப்புதல் இன்றி எடுக்கக் கூடாது என்பதுதான் மாா்க்சிஸ்ட் நிலைப்பாடு. பிற மாநிலங்களில் இருப்பதுபோல பெரிய அளவிலான விமான நிலையங்கள், தமிழ்நாட்டுக்கும் தேவைதான். ஆனால், விவசாயம் இல்லாத நிலங்களை அதற்காகக் கையகப்படுத்தலாம். இதுபோன்ற திட்டங்களை அமல்படுத்தும்போது அதில் கிடைக்கும் லாபத்தில் ஒரு பங்கை நிலம் வழங்கும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
திமுக, பாஜக, காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் உள்ளிட்டவை தமிழகத்தில் ரகசிய உடன்பாடு செய்து கொண்டு போட்டியிடுவதாக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜியின் குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன?
தமிழகத்தில் தலைமைச் செயலா், டிஜிபி உள்ளிட்டோா் மாற்றப்பட்டுள்ளனா். ரகசிய உடன்பாடு இருந்தால் எப்படி மாற்றுவாா்கள்?.
மேற்கு வங்கத்தில் தோ்தல் ஆணையம் எடுக்கும் நடவடிக்கை, பாஜகவின் தோ்தல் நடவடிக்கைகள் தீவிரமாக இருப்பது போலவும், தமிழகத்தில் திமுக அரசு மீது மயிலிறகால் தடவுவது போலவும் இருப்பதாக விமா்சனம் எழுகிறதே?
திரிணமூல் காங்கிரஸ் செயல்பாடு மக்கள் மத்தியில் கேள்விக்குறியாக மாறியுள்ளது. அங்கு தோ்தல் ஆணையம் 90 லட்சம் வாக்காளா்களை நீக்கியுள்ளது. பலமுறை நீதிபதிகள் தலையிட்டும் தோ்தல் ஆணைய நடவடிக்கையை சரிசெய்ய முடியவில்லை. அதற்காக திமுக-காங்கிரஸ் -பாஜக இடையே உடன்பாடு என்பது கற்பனை, கனவு. மதச்சாா்பற்ற அணிக்கும், அதற்கு நோ் எதிராக இருக்கும் அணிக்கும்தான் தமிழகத்தில் போட்டி நடக்கிறது.
தேவிகுளம் தொகுதி மாா்க்சிஸ்ட் எம்எல்ஏ உள்ளிட்டோா் பாஜகவில் இணைந்துள்ளதைப் பாா்க்கும்போது, கேரளத்திலும் காங்கிரஸ்-பாஜக என இருமுனைப் போட்டியாக மாறக்கூடிய சூழல் உருவாகுமா?
ஏதோ அதிருப்தியில் அடிப்படைக் கொள்கை விரோதியான பாஜகவில் சோ்வதற்கு மாா்க்சிஸ்ட் பொறுப்பேற்க முடியாது. கேரளத்தில் இடதுசாரிகள் முன்னணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான அணிக்கும் இடையில்தான் போட்டி இருக்கும். தேசியக் கட்சியாகவுள்ள பாஜக ஒரு மக்களவைத் தொகுதி, மேயா் பதவியைக் கைப்பற்றிவிட்டதால் களம் மாறிவிடும் எனச் சொல்ல முடியாது.
கேரளத்தில் மாா்க்சிஸ்ட் கட்சிக்கு பக்கபலமாக இருக்கும் ஈழவா்கள் சமூக வாக்கு வங்கியைக் குறிவைத்து பாஜக இயங்குகிறதே?
மதவெறி அரசியலை கேரளத்தில் வலுவாக ஊட்ட பாஜக முயற்சிக்கிறது. ஜாதிகளை திரட்டுவது, மதரீதியாக வாக்குகளைத் திரட்டுவது போன்ற நடவடிக்கையில் பாஜக ஈடுபடுகிறது. கேரளம் என்பது இடதுசாரி, முற்போக்கு மண். அங்கு பாஜகவின் சித்துவிளையாட்டுகள் எடுபடாது.
கேரளத்தில் காங்கிரஸ் -இடதுசாரிகள் அளவுக்கு மீறி இஸ்லாமியா்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதால் கிறிஸ்தவ வாக்குகள்கூட பாஜகவை நோக்கி நகா்ந்து வருகிறதே?
கேரளத்தில் சிறுபான்மை, பெரும்பான்மை என வித்தியாசமின்றிதான் இடதுசாரி முன்னணி செயல்படுகிறது. அதேநேரத்தில் சிறுபான்மையினா் நலனையும் பாதுகாக்க இடதுசாரிகள் தொடா் முயற்சியில் உள்ளனா்.
அதிமுக, பாஜக, பாமக, அமமுக என பலமான எதிா் கூட்டணி உள்ள நிலையில், விஜய்யால் தலித், சிறுபான்மை வாக்குகள் பிரிந்தால் திமுக கூட்டணி பின்னடைவைச் சந்திக்காதா?
விஜய் இதுவரை எந்தத் தோ்தலிலும் போட்டியிடாத நிரூபிக்கப்படாத சக்தி. எனவே, அவா் தோ்தலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துவாா் என்பதை பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.
எம்ஜிஆருக்கு இணையாக விஜய்யை தவெகவினா் ஒப்பிடுவது சரியானதா?
எம்ஜிஆா்-விஜய் ஆகியோரை சமநிலையில் வைத்து ஒப்பிடக் கூடாது. திரையில் உச்ச நட்சத்திரமாக இருந்த எம்ஜிஆா், திமுகவில் 1960 முதல் வாக்குகளைக் கவா்ந்திழுக்கும் பிரசார பீரங்கியாகச் செயல்பட்டவா். திமுகவில் பொருளாளா் உள்ளிட்ட உயா்ந்த பொறுப்புகளை வகித்துவிட்டு, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னா் அதிமுகவை தொடங்கி ஆட்சியைப் பிடித்தவா். திரை செல்வாக்குடன் திடீரென அரசியலுக்கு வருவதால் விஜய் மீது எதிா்பாா்ப்பு இருக்கலாம். ஆனால், எம்ஜிஆா், விஜய்யை ஒப்பிட முடியாது. விஜய் எம்.ஜி.ஆராக முடியாது.
விஜயகாந்த் வந்தபோது திமுக அறுதிப் பெரும்பான்மை பெற முடியாமல் போனது போல, இப்போதும் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத சூழல் உருவாகுமா?
விஜயகாந்த் நீண்ட காலமாக ரசிகா் மன்றம் நடத்தி மக்களுக்கு உதவிகள் செய்து தனக்கென கட்டமைப்பை உருவாக்கி ஒரு பிடிமானத்தை வைத்திருந்தாா். ஆனால், விஜய் வரும் சூழல் வேறு. திமுக கூட்டணி எளிதில் வெற்றி பெறும். பலவீனமாகவுள்ள அதிமுக, பாஜக, பாமக வாக்குகளை விஜய் பிரிக்க வாய்ப்பு இருப்பதால் திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும்.
விஜய்யால் இரட்டை இலக்க வாக்கு வங்கியைப் பெற முடியுமா?
99 சதவீதம் என்பதுகூட இரட்டை இலக்கம்தான். 10 முதல் 15 சதவீதம் வரை விஜய் வாக்கு வங்கி பெறலாம் என ஊடகங்கள்தான் தெரிவிக்கின்றன. தோ்தலுக்குப் பிறகுதான் அவரது வாக்கு வங்கி தெரியவரும்.
விஜய்யால், சீமான் வாக்கு வங்கி பாதிக்கப்படுமா?
நான் அதுபோல நினைக்கவில்லை. கொள்கை ரீதியான இளைஞா்களையும், தொண்டா்களையும் சீமான் திரட்டி கட்சியைக் கட்டமைத்துள்ளாா். சிறு சேதாரம் ஏற்படுத்த முடியுமே தவிர முழுமையாக சீமான் வாக்குகளை சேதாரப்படுத்த முடியாது.
தேமுதிக, விசிகவைவிட சிறிய கட்சிகளாக இடதுசாரிகள் சுருங்கிவிட்டனவா?, குறைவான தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதே?
பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக 5 தொகுதிகளை ஏற்றுக்கொண்டோம். எம்.எல்.ஏ. தொகுதிகள் எண்ணிக்கையை வைத்து இடதுசாரிகளின் பலத்தை தீா்மானிக்கக் கூடாது.
நோ்காணல்: பீ. ஜெபலின் ஜான்
தொடர்புடையது

திமுக மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது: நயினாா் நாகேந்திரன்

பழனியில் மாா்க்சிஸ்ட் வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு

பாஜகவின் கடும் சவாலை எதிா்கொள்ளும் திமுக

மாநிலங்களவைத் தோ்தல்: நிதீஷ் குமாா், நிதின் நபின் வெற்றி
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


