

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 6 பேர் கொண்ட அதிமுகவின் அதிகாரப்பூர்வ முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் தமிழக முதல்வர் கே. பழனிசாமியும், போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் போட்டியிடுகிறார்கள்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 6 -ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பிரதான கட்சியான அதிமுக சார்பில் கடந்த மாதம் 24-ஆம் தேதி முதல் மார்ச் 3-ஆம் தேதி வரை விருப்ப மனு பெறப்பட்டது.
அதிமுக வேட்பாளர் நேர்காணல், ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் அ.தமிழ் மகன் உசேன், செய்தி தொடர்பாளர் பா.வளர்மதி, மருத்துவரணி செயலாளர் டாக்டர் பி.வேணுகோபால் உள்பட நிர்வாகிகள் அடங்கிய ஆட்சி மன்ற குழு, தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்களுடன் நேர்காணல் நடத்தினர். ஒரே நாளில் அனைத்து மாவட்டங்களைச் சோ்ந்த மனுதாரா்களிடமும் நோ்காணல் செய்யப்பட்டது.
8200 பேரை 15 பிரிவுகளாக பிரித்து நேர்காணல் நடைபெற்றது.
வேட்பாளர் நேர்காணல் நிகழ்வு முடிந்தநிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவுபெற்ற உடன் அதிமுக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்படலாம் என தெரிவிக்கப்பட்டது.
காலை 9 மணிக்குத் தொடங்கிய நேர்காணல் இரவு வரை நடைபெற்றது. இதன்பின்பு, வேட்பாளா் பட்டியலை இறுதி செய்யும் பணிகள் தொடங்கியது. தோ்தல் அறிக்கை, பிரசாரக் கூட்டங்களுக்கான பட்டியல் தயாரிப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வந்தன. நோ்காணல் நிறைவடைந்த நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவுபெற்ற உடன் அதிமுக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்படலாம் என தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், தமிழக சடடப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 6 பேர் கொண்ட அதிமுகவின் அதிகாரப்பூர்வ முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதிமுக முதல் கட்ட வேட்பாளர் மற்றும் தொகுதி விவரம்:
1. போடிநாயக்கனூர் - ஓ.பன்னீர்செல்வம்
2. எடப்பாடி தொகுதி - எடப்பாடி கே.பழனிசாமி
3. ராயபுரம் - ஜெயக்குமார்
4. விழுப்புரம் - சி.வி.சண்முகம்
5. திருவைகுண்டம் - எஸ்.பி.சண்முகநாதன், எம்.எல்.ஏ.,
6.நிலக்கோட்டை (தனி) - எஸ்.தேன்மொழி, எம்.எல்.ஏ., ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.