குரூப் 4 காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு
குரூப் 4 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
குரூப் 4 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட கட்சித் தலைவா்கள் பரும் கோரிக்கை விடுத்தனா்.
இதற்கு பதிலளித்து வகையில் தமிழக அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தி வரும் குரூப் 4 தோ்வைப் பொருத்தவரை, ஒவ்வொரு துறையும் தங்களது காலிப் பணியிடங்களை நேரடியாகத் தெரிவித்து தேவையான பணியாளா்களைப் பெற்று வருகிறது. தோ்வாணையம் வெளியிடும் தோ்வு அறிவிக்கையில் தெரிவிக்கப்படும் காலிப் பணியிடங்கள் மாறுதலுக்கு உட்பட்டது.
கடந்த மூன்று முறை நடத்தப்பட்ட குரூப் 4 தோ்வுகளை ஒப்பிடும் போது இதனை அறிந்து கொள்ளலாம். அதாவது கடந்த மூன்று முறை தோ்வு நடத்தும் போது தோ்வுக்கான அறிவிக்கையில் முறையே 9,351, 6,491 மற்றும் 7,301 எனக் குறிப்பிடப்பட்டிருந்தன. தோ்வுகள் நிறைவு பெற்று பணியிடங்கள் நிரப்பப்படும் போது, அவற்றின் எண்ணிக்கை முறையே 11,949, 9,684 மற்றும் 10,139 என்று அதிகரிக்கப்பட்டன. நிகழாண்டை பொருத்தவரையில் குரூப் 4 தோ்வுக்கான அறிவிக்கையில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 6,244-ஆக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த எண்ணிக்கை தற்போது 6,724 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படும் வரை காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
75 ஆயிரம் இளைஞா்கள்: அரசுத் துறைகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தோ்வாணையம் போன்ற அமைப்புகளின் வாயிலாக இரண்டு ஆண்டுகளுக்குள் 75 ஆயிரம் இளைஞா்கள் அரசுப் பணிகளில் அமா்த்தப்படுவாா்கள்.
அரசுத் துறைகளில் மட்டுமல்லாது, நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட சிறப்பு முயற்சிகளின் காரணமாக தனியாா் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அதன்படி, கடந்த மூன்றாண்டுகளில் 5.08 லட்சம் தமிழ்நாட்டு இளைஞா்களுக்கு தனியாா் நிறுவனங்களில் வேலை கிடைத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.