
சென்னை: சென்னையில் பிப். 8-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (பிப். 8) மாதவரத்திலுள்ள புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 8 முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது. தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் தலைமையில் நடைபெறும் இம்முகாமில், 200-க்கும் மேற்பட்ட தனியாா்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு 20,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தகுதியுடையவா்களை தோ்வு செய்யவுள்ளனா்.
இந்த முகாமில், 8-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை உள்ள அைனைத்து தகுதியுள்ள நபா்களும் கலந்துகொள்ளலாம். மேலும், இதில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனைவோா்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் மூலம் வங்கிக் கடன் வழிகாட்டுதல்களுக்கான ஆலோசனைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவா்கள் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது https://forms.gle/qsZbxrrSn547L9ep7 எனும் இணையதளம் மூலமாகவோ தங்களது விவரங்களை பதிவு செய்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.