புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

22.7.1976: பாங்கில் பல கோடி கொள்ளை: 5 மைல் நீள சுரங்கப்பாதை வெட்டி உள்ளே புகுந்தனர்

அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

News image

22.7.1976 - Dinamani

Updated On :22 ஜூலை 2026, 7:00 am IST

நைஸ் (பிரான்ஸ்) ஜூலை. 21- பிரான்ஸ் நாட்டில் நைஸ் நகரில் உள்ள ஒரு பாங்கில் 5 கோடி பிராங்குகள் (சுமார் ஏழரை கோடி ரூபாய்) மதிப்புள்ள ரொக்கம், தங்கம், நகைகள் கொள்ளை போய்விட்டன.

பூமிக்கு அடியிலேயே சுமார் 5 மைல் தூரத்திற்கு சுரங்கப் பாதை தோண்டிக் கொண்டு வந்து, திருடர்கள் இந்த பாங்கிற்குள் புகுந்து கொள்ளை அடித்துள்ளனர். உலக சரித்திரத்திலேயே மிகப்பெரியபாங்கு கொள்ளை இதுதான் என்று கூறப்படுகிறது.

இது பற்றி போலீஸார் தெரிவித்ததாவது:-

இந்தப் பாங்கு, பிரான்சு அரசுக்குச் சொந்தமானதாகும். நைஸ் நகரத்தின் மையப் பகுதியில் இது இருக்கிறது.

இந்தப் பாங்கு மிகவும் கட்டுக்காவல் நிறைந்தது. பாங்கின் உட்புறத்தில் ஒரு தனி காப்பறையில் 200 பெட்டகங்கள் உள்ளன. அந்தப் பெட்டகங்கள் ஒவ்வொன்றும் தனி நபர்களுக்குச் சொந்தமானவை; அவை பத்திரமாகப் பூட்டப்பட்டிருந்தன. ஆனால் சென்ற சனி, ஞாயிறு இரு தினங்களிலும், வார இறுதி நாட்களாகையால், பாங்கில் காவலர்கள் யாருமே இல்லை. இந்தப் பாங்கிற்குள் வெள்ளிக்கிழமை இரவிலேயே திருடர்கள் நுழைந்ததாகக் கருதப்படுகிறது. அவர்கள் மொத்தம் 12 பேர் இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

சுரங்கப் பாதை

அவர்கள் முதலில் பாதாள சாக்கடை மூலமாக இந்தப் பாங்கின் அடித்தளத்தை அடைந்துள்ளனர். பின்னர் அந்தப் பாங்கின் காப்பு அறைக்குக் கீழே வந்து முடியும் வகையில், அந்தப் பாங்கின் அஸ்திவாரத்தை நோக்கி, ஒரு சுரங்கப்பாதை வெட்டியிருந்தனர்; அந்த சுரங்கப் பாதையின் இரு புறச் சுவர்களிலும் அழகாக சிமெண்ட் பூசிமெழுகி இருந்தனர்.

பாங்கு காப்பறையின் அடித்தளத் தரையை உடைத்துக் கொண்டு அவர்கள் மேலே வந்தனர்; வந்த உடனே தங்கள் வெற்றியைக் கொண்டாடுவதற்காகவே, அவர்கள் கையோடுகொண்டு வந்த மதுப்புட்டிகளை உடைத்துக் குடித்திருக்கின்றனர். பெண்களின் கவர்ச்சிப்படங்களை அந்த அறையின் சுவர்களில் ஒட்டி இருக்கின்றனர்.

பின்பு "வெல்டிங்' கருவிகளைப் பயன்படுத்தி அந்த அறையிலிருந்த 200 காப்புப் பெட்டகங்களையும் திறந்திருக்கின்றனர். அந்தப் பெட்டிகளை சுத்தமாகக் காலி செய்தனர். தேவையற்றதெனக் கருதிய ஒருசில நகைகளை மட்டும் அங்கேயே போட்டுவிட்டனர்.

தாங்கள் வெளியேறுவதற்கு முன்பாக, அந்த அறையை உட்புறத்திலிருந்து "வெல்டிங்" செய்துவிட்டு அவர்கள் வந்த வழியே திரும்பி இருக்கின்றனர்.

திங்கட்கிழமை காலையில் பாங்கு அதிகாரிகள் அந்த அறையைத் திறக்க முயன்ற போது முடியவில்லை; பின்னர் உடைத்துத் திறந்து பார்க்கையில் உள்ளே எல்லாம் காலியாக இருந்தன. சில கருவிகள், காலி ஒயின் புட்டிகள், ஒரு ஜோடி கையுறைகள், சில உதிரி நகைகள் ஆகியவை மட்டுமே அங்கு கிடந்தன. ஒரு பெரிய வெள்ளிக் கிண்ணத்தையும் திருடர்கள் அங்கேயே விட்டு விட்டுச் சென்றிருந்தனர். ஆனால் அதை அவர்கள் தங்கள் சிறுநீர் கழிவறையாகப் பயன்படுத்தி இருந்தனர்.

இதெல்லாவற்றையும் விட பெரிய ஆச்சரியம் என்னவெனில், அவர்கள் சுரங்கப் பாதை தோண்டிய போது. வெட்டி எடுத்த மண் எல்லாம் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. டன்டன்னாக அவர்கள் மண்வெட்டி இருக்க வேண்டும். ஆனால் ஒரு துளி மண்கூட அங்கு காணப்படவில்லை. ...

செவ்வாயில் உயிர் வாழ்வதற்கு உரிய “நைட்ரஜன்” உள்ளது - முதல் தகவல்கள் ஆய்வில் இருந்து கண்டுபிடிப்பு

பாஸடேனா (யு.எஸ்.) ஜூலை 21- செவ்வாயில் இறங்கிய நெ.1 வைக்கிங் விஞ்ஞான ஆராய்ச்சியைத் தொடங்கியது.

செவ்வாய் காற்று மண்டலத்தில் நைட்ரஜன், ஆர்கன் வாயுக்கள் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு உயிர்கள் வாழமுடியமென்ற அதிக நம்பிக்கையை விஞ்ஞானிகளுக்கு உண்டாக்கும் அளவுக்கு நிறைய நைட்ரஜன், ஆர்கன் வாயு இருப்பதாகக் காணப்படுகிறது.

சென்ற காலத்திலோ அல்லது வருங்காலத்திலோ உயிர் வாழ்வன இருப்பதற்கான அத்தாட்சி கிடைக்கவில்லையாயினும், மிகவும் அதிகமாகவும், இன்னும் அதிக உயிர் வளர்க்கும் தன்மை வாய்ந்ததுமான மூட்டமான சூழ்நிலை இருந்திருக்க வேண்டுமென்று கருதப்படுகிறது.

செவ்வாய் கிரகத்திலுள்ள ஆறுகளில் ஒரு காலத்தில் தண்ணீர் ஓடியிருக்க வேண்டுமென்று வைக்கிங் விண்கலம் வந்த போதே கண்டு பிடிக்கப்பட்டது.

நைட்ரஜன் கண்டு பிடிக்கப்பட்டிருப்பதானது. உயிர் வாழ்வன இருப்பதற்கு வேண்டிய அத்யாவசிய அம்சங்கள் எல்லாம் இருந்திருக்கக் கூடும் என்று தெரிவதாக திட்ட விஞ்ஞானி டாக்டர் ஸோபன் கூறினார்.

செவ்வாய்க் காற்று மண்டலத்தில் 3 சதவிகிதம் நைட்ரஜன் இருக்கக் கூடுமென்று அனுப்பிய வைக்கிங் பதிவுத் தகவல்களை ஆராய்ந்த டாக்டர் ஆல்பிரெட் நியர் கூறினார். பூமியின் நைட்ரஜன் இருப்பு 78 சதவிகிதம்.

செவ்வாயின் தரை மட்டத்தில் எரிமலைக் குழம்புப் படிவங்கள், பாஸால்ட் படிவங்கள் இருப்பதாக முதல் படங்களை ஆராய்ந்தததில் தெரிய வருகிறது.

Summary

July 22, 1976: Multi-crore bank heist; thieves broke in after digging a five-mile-long tunnel.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.