
4.10.1976: காமராஜ் இல்லத்தை அரசு வாங்கி நினைவகமாக ஆக்கும் - கவர்னர் அறிவிப்பு
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

4.10.1976 - Dinamani
சென்னை, அக். 2 - சென்னை தியாகராயநகர் திருமலைப்பிள்ளை ரோடில் அமரர் காமராஜ் வாழ்ந்த இல்லத்தைத் தமிழக அரசு வாங்கி, அந்த இல்லத்தை காமராஜ் ஞாபகார்த்தமாக -நினைவகமாக - அமைக்க முடிவு செய்துள்ளது என்று தமிழக கவர்னர் மோகன்லால் சுகாதியா பலத்த மகிழ்ச்சி ஆரவாரத்திற்கிடையே இன்றிரவு கடற்கரை பொதுக் கூட்டத்தில் அறிவித்தார்.
கடற்கரையில் சென்னை வானொலி நிலையத்திற்கெதிரே அமைக்கப்பட்டுள்ள அமரர் காமராஜ் சிலையை இன்றிரவு மத்திய அமைச்சர் டி.ஏ.பை தலைமையில் கவர்னர் சுகாதியா திறந்து வைத்தார். அனைத்துக் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்ட இந்த விழாவில், அவர் ஒரு மின்சாரப் பொத்தானை அழுத்த, "காமராஜ் புகழ் வாழ்க" என்ற ஒளிவிளக்கு மின்ன, சிலை திறக்கப்பட்டது. தன்னுடைய ஒன்பதாண்டு ஆட்சிக் காலத்தில் ஏழை, எளிய மக்களுக்குக் கல்விக் கண் கொடுத்த காமராஜ் என்று பெயர்பெற்ற அந்த அமரர் ஒரு ஏழைச் சிறுவனையும் ஒரு சிறுமியையும் வழிநடத்திச் செல்வது போல சிலை அமைக்கப்பட்டுள்ளது.
அனைவரையும் வரவேற்று சிலை அமைப்புக் குழுத் தலைவர் வே. தி. திருமாறன் பேசினார். கடற்கரை சாலையில் அமரர் காமராஜுக்குச் சிலை அமைக்க அனுமதி அளித்ததற்காக புதிய நிர்வாகத்துக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் நெடுமாறன் பேசுகையில், இந்திய திருநாட்டின் தேசியத் தலைவர், தியாகத் தலைவர் காமராஜ் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டதனாலேயே அனைத்துக் கட்சித் தலைவர்களும் இந்த விழாவில் பங்கு கொள்கின்றனர் என்றார். ...
சலால் நீர் மின்சாரத் திட்டம்: இந்தியா-பாக் இடையே இன்று பேச்சு
புதுடில்லி, அக். 3 - காஷ்மீரில் செனாப் நதி மீது சலால் நீர் மின்சாரத் திட்டத்தை மேற்கொள்வது சம்பந்தமாக இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நாளை டில்லியில் துவங்குகிறது. இரு தரப்பினரும் இத்திட்டம் பற்றிய கருத்து வேறுபாடுகளைக் களைய உறுதி கொண்டுள்ளனர்.
இந்திய வெளிவிவகாரக் காரியதரிசி ஜே. எஸ். மேத்தா தலைமையிலான இந்தியக் குழுவுடன் பேச்சு நடத்துவதற்காக பாகிஸ்தான் வெளி விவகாரக் காரியதரிசி ஆகாஷாஹி தலைமையிலான ஐவர் குழு இன்று டில்லி வந்து சேர்ந்தது. இத்திட்டம் குறித்து உடன்பாடு காண்பது சாத்தியமே என்று நம்புவதாக ஆகாஷாஹி நிருபர்களிடம் பேசுகையில் கூறினார்.
Summary
4.10.1976: Government to acquire Kamaraj's residence and convert it into a memorial – Governor's announcement.

1.10.1976: காமன்வெல்த் நிதி மந்திரிகள் மகாநாடு - பணக்கார, ஏழை நாடுகள் வேற்றுமை அதிகரிப்பு பற்றி கவலை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



