
7.10.1976: காஷ்மீர்: பாகிஸ்தான் நிலையை ஐ.நா.வில் இந்தியா நிராகரித்தது
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

7.10.1976 - Dinamani
நியூயார்க், அக். 6 - ஜம்மு - காஷ்மீர் சம்பந்தமாக பாகிஸ்தானின் வாதத்தை இன்று ஐ.நா. பொதுச்சபையில் இந்தியா திட்டவட்டமாக நிராகரித்தது.
ஐ.நா.வில் இந்தியாவின் உதவி நிரந்தரப் பிரதிநிதியான எஸ். எம். ஹாஷ்மி பதிலளிக்க உள்ள உரிமையைப் பயன்படுத்தி பேசினார். "ஜம்மு-காஷ்மீர் தகராறு என்று சொல்லப்படுவதற்கு மக்களின் சுய நிர்ணய உரிமை அடிப்படையில் இறுதி தீர்வு காண வேண்டும் என்று பாகிஸ்தானின் பிரதிநிதி கூறினார். பாகிஸ்தானின் நிலையை இந்தியா ஒப்புக் கொள்ளவில்லை" என்று அவர் கூறினார்.
"இந்தியாவின் ஒரு இணைந்த பகுதி ஜம்மு-காஷ்மீர். ஜம்மு-காஷ்மீர் மக்கள் இந்தியாவின் பிரஜைகள். இந்தியாவின் எந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களும் சுய நிர்ணய உரிமையைப் பயன்படுத்தி தங்களது தலைவிதியை முடிவு செய்யும் பிரச்னையே இருக்க முடியாது. ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. அதன் அந்தஸ்து சம்பந்தமாக சட்டத் தகராறு எதுவும் இல்லை. எனினும் ஜம்மு-காஷ்மிரில் இந்தியாவின் ஒரு பகுதி பாகிஸ்தானின் கட்டாய ஆக்கிரமிப்பின் கீழ் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த உண்மைதான் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே இந்தப் பிரச்னையை ஏற்படுத்தியிருக்கிறது" என்று அவர் கூறினார்.
தாய்லாந்தில் வலதுசாரி ராணுவம் ஆட்சியைப் பிடித்தது - பிரதமர் சேனி பிரமோஜ் அரசு ஒரே நாளில் கவிழ்ந்தது
பாங்காக், அக். 6 - தாய்லாந்தில், பிரதமர் சேனி பிரமோஜ் தலைமையிலான அரசு, பதவியேற்ற ஒரே நாளில் இன்று கவிழ்ந்தது. அவரது அமைச்சரவையில் பாதுகாப்பு மந்திரியாக இருந்த சங்காட் சாலவையூ ஆட்சியைக் கைப்பற்றினார்; நாட்டில் ராணுவ சட்டம் பிரகடனம் செய்யப்பட்டது.
கம்யூனிஸ்டுகளின் பிடியில் தாய்லாந்து சிக்காமல் இருப்பதற்காக இந்த நடவடிக்கையை எடுப்பதாக அவர் அறிவித்தார்.
தாய்லாந்தின் பார்லிமெண்ட், அரசியல் சாசனம் யாவும் கலைக்கப்படுவதாக அவர் அறிவித்தார். தாய்லாந்தில் உள்ள 56 அரசியல் கட்சிகளும் கலைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
நாட்டில் ராணுவ சட்டம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. பத்திரிகைகளுக்கு தணிக்கை முறை அமல் செய்யப்பட்டது. 5 பேருக்கு மேல் ஓரிடத்தில் கூடிப்பேசக் கூடாதென தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டை நிர்வாகம் செய்வதற்காக நிர்வாக சீர்திருத்த கவுன்சில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாரத்தை கைப்பற்றிய, 60 வயதான சங்காட் சாலவையூதான் இந்தக் கவுன்சிலின் தலைவர். இன்று பதலியிலிருந்து கவிழ்க்கப்பட்ட பிரதமர் சேனி பிரமோஜ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக புதிய நிர்வாகம் அறிவித்தது. ...
Summary
7.10.1976: Kashmir: India rejected Pakistan's position at the UN.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




