கேரளாவில் நீங்கள் எந்த ஊருக்குச் சென்றாலும் அங்கு குலுக்கி சர்பத் ஃபேமஸ். புலம் பெயர்ந்து வாழும் மலையாளிகள் தாங்கள் வாழும் பகுதிகளில் இந்தக் குலுக்கியை வீட்டிலேயே தயாரித்து அருந்த மறப்பதில்லை. குலுக்கி ஒரு வகையில் காக்டெய்ல் பானம். இதைக் குலுக்கி தயாரிப்பதற்கென்று தனியாக மூடியிட்ட டம்ளர்கள் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களில் கிடைக்கின்றன. பிளாஸ்டிக், எவர்சில்வர், அலுமினியம் மற்றும் செம்பில் கிடைக்கலாம். இந்த மூடியிட்ட டம்ளரை வாங்கிச் சென்று தான் குலுக்கி தயாரிக்க வேண்டுமென்பதில்லை. குலுக்கி கலக்கவிருக்கும் உயரமான டம்ளரின் வாய்ப்பகுதியில் மிகச்சரியாக ஃபிக்ஸ் ஆகும் படியான மற்றொரு டம்ளரால் அதை இறுக்கமாக மூடியும் குலுக்கலாம். குலுக்கியில் ஸ்பெஷல் அதை அதி விரைவாகக் குலுக்கும் ஸ்டைலும் சேர்மானங்கள் மிக்ஸ் ஆகும் பதமும் தான்.