பக்கவாதம்! முக்கிய அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்!
பக்கவாதம் என்பது யாருக்கு வேண்டுமானாலும் வரக் கூடும் என்பதால் முக்கிய அறிகுறிகளை அலட்சியம் செய்ய வேண்டாம் என்கின்றன மருத்துவ வட்டாரங்கள்...

பக்கவாதம் - பிரதி படம் - file photo
தொற்றா நோய்களில் மிகத் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தி ஒருவரது வாழ்முறையையே முடக்கிவிடுவது பக்கவாதம். ஆரோக்கியமாக, இயல்பாக இருக்கும் ஒருவரை முடக்கி, உடலின் இயக்கத்தைப் பாதிக்கும் தீவிரம்தான் அந்த நோயின் உச்சபட்ச அபாயம்.
மனிதனின் மூளையில் 9000 கோடி நியூரான் செல்கள் உள்ளன. இந்த நியூரான் செல்கள்தான் உடலின் இயக்கத்துக்கு ஆணிவோ். மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும்போது நியூரான் செல்களின் எண்ணிக்கை குறைகிறது. அப்போது கை, கால் செயலிழப்பு, தலைச்சுற்றல், பேச்சில் குளறல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, ஒரு பக்கம் கை, கால்கள் இயங்காமல் காலம் முழுக்க வாழ்ந்து மடிந்த காலம் மாறிவிட்டது. இப்போது நவீன மருத்துவத்தால், பக்கவாதம் பாதித்த ஒருவர், அந்த பொன்னான நேரத்துக்குள் மருத்துவமனைக்கு வந்துவிட்டால், சிறப்பான சிகிச்சைகள் மூலம் பக்கவாதத்தையே குணப்படுத்திவிடும் சாத்தியங்கள் வந்துவிட்டன.
பக்கவாதம் வந்த பிறகு, பொன்னான நேரம் முக்கியம். பக்கவாதம் திடீரென நேரிட்டாலும் முன்கூட்டியே அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றன. ஒரு மாத காலத்துக்கு முன்பே சில அறிகுறிகள் தென்பட்டதாக நோயாளிகளும் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், அவை தீவிரமானவை இல்லை என்பதால் பலரும் அதனை கவனிக்கத் தவறி விடுகிறார்கள்.
நோய் வந்த பிறகு சிகிச்சை பெறுவதைவிட, நோய் வருவதற்கு முன்பே தற்காத்துக் கொள்வது சாலச் சிறந்தது.
அறிகுறிகளை வைத்து பக்கவாதத்தைத் தடுக்கலாம்.
முக்கிய அறிகுறிகள்
முகம் கோணுவது அல்லது உடலின் ஒரு பக்கம் திடீர் பலவீனம்
பேசுவது, புரிந்துகொள்வதில் சிக்கல்
ஒரு கண்ணில் பார்வைக் குறைபாடு
நிற்பது மற்றும் நடப்பதில் ஒரு தடுமாற்றம்
இவைதான் முக்கிய அறிகுறிகள்
பக்கவாதம் ஏற்பட்டுக் குணமடைந்துவரும் பலரும் ஒரு மாத காலத்துக்கு முன்பே தங்களது உடல் இயக்கத்தில் சில அறிகுறிகள் இருந்ததாகக் கூறியிருக்கிறார்கள். அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் அமையும்.
அந்த அறிகுறிகள்...
கடுமையான தலைவலி
விவரிக்க முடியாத கடுமையான தலைவலி, குறிப்பாக வழக்கமான தலைவலி போல அல்லாமல் தீவிரமாக இருப்பது.
தலைவலி மருந்துகளுக்கு சரியாகாமல் நீண்ட நேரம் நீடிப்பது
சிலருக்குத் தலைவலியுடன் பார்வைக் கோளாறு அல்லது வாந்தியெடுக்கும் உணர்வும் இருப்பது.
பார்வையில் மாறுபாடு
மங்கலான அல்லது இரட்டைக் காட்சிகள் தோன்றுதல்
ஒன்று அல்லது இரண்டு கண்களில் திடீரென பார்வை இழப்பு
ஒரு பொருளை உற்றுப் பார்ப்பதில் சிரமம்
பலவீனம்
உடலின் ஒரு பகுதி அல்லது முகத்தில் உணர்வின்மை
திடீரென உடலில் ஒரு சோர்வு - மூளைக்கு ரத்தம் செல்வதில் ஏற்படும் தடையை இது வெளிப்படுத்துவது போல பலவீனம், உணர்வின்மை திடீரென தோன்றி மறையும்.
பேசுவதில் சிக்கல்
ஒரு வாக்கியத்தைத் தொடங்கிப் பேசி முடிப்பதில் சிக்கல்.
திக்குவது அல்லது பேச்சு தடைப்படுதல்
அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகளை நினைவுபடுத்துவதில் சிக்கல்
தடுமாற்றம்
நிற்கும்போது விழுந்துவிடுவது போல தடுமாற்றம்
நேராக நடக்க முடியாமல் தளர்வு.
திடீரென கீழே விழுவது, எதிரே இருக்கும் பொருள்கள் மீது மோதுவது
நினைவாற்றல் பாதிப்பு
சாதாரண வார்த்தைகள் நினைவுக்கு வராமல் தவிப்பது
நபர்களின் பெயர்களை நினைவுகூர முடியாமல் போவது
சாதாரண பேச்சுவார்த்தைகளில் ஈடுபட முடியாமல் இருப்பது
மனநிலை மாற்றம்
திடீரென கோபம், மன அழுத்தம் ஏற்படுவது
எளிய வேலைகளில்கூட ஈடுபாடு இல்லாமல் போவது
தலைச் சுற்றல்
போதிய தூக்கம், ஓய்வு கிடைத்தும் களைப்பாக உணர்தல்.
உற்சாகமின்மை, வேலைகளை செய்ய ஆர்வமின்றி காணப்படுதல்
இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக நரம்பியல் மருத்துவர் அல்லது பக்கவாதத்துக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையை உடனடியாக அணுகுங்கள். ரத்த பரிசோதனை, ஸ்கேன் போன்றவை செய்யப்பட்டு, பக்கவாதம் ஏற்படுவதற்கான சாத்தியம் இருந்தால் உடனடியாக அதற்குரிய சிகிச்சையை மேற்கொள்வது அவசியம்.
தற்காலிக பக்கவாதம்
பக்கவாத அறிகுறிகள் சில நிமிடங்களுக்குள் தானாகவே சரியாகிவிட்டால் தற்காலிக பக்கவாதம் அல்லது 'மினி-ஸ்ட்ரோக்' என்கிறார்கள். இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும் தீவிரமான பக்கவாதம் ஏற்படுவதற்கான அறிகுறியாகவும் இருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
எனவே, தற்காலிக பக்கவாதம் நேரிட்டாலும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.
அக்டோபர் 29 - உலக பக்கவாத விழிப்புணர்வு நாள்
Summary
Anyone can have a stroke! Do not ignore the key warning signs!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

