பக்கவாதம் ஆபத்தானதா? அறிகுறிகள் என்னென்ன? - நம்பிக்கையும் உண்மையும்!

பக்கவாதம் குறித்த தவறான நம்பிக்கைகளுக்கு பதில் அளிக்கிறார் டாக்டர் பிரவீன் குப்தா.
stroke
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

பக்கவாதம் ஆபத்தானதா? அனைவருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள்தான் ஏற்படுமா? அறிகுறிகளை எளிதாகக் கண்டறிய முடியுமா?

பக்கவாதம் குறித்த தவறான நம்பிக்கைகளுக்கு பதில் அளிக்கிறார் குருகிராம் ஃபோர்டிஸ் நினைவு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் நரம்பியல் துறை தலைமை மருத்துவர் டாக்டர் பிரவீன் குப்தா.

பக்கவாதம் ஆபத்தானது

பக்கவாதம் தீவிர மருத்துவ அவசர நிலை என்ற போதிலும், அது எப்போதும் ஆபத்தானது அல்ல. எந்த வகை பக்கவாதம், எவ்வளவு விரைவாக சிகிச்சை அளிக்கப்படுகிறது, பாதிக்கப்பட்ட மூளைப் பகுதி ஆகியவற்றைப் பொருத்தது. ரத்தம் உறைதலை சரிசெய்யும் 'த்ரோம்போலிசிஸ்', ரத்த நாளங்களில் இருந்து ரத்தக் கட்டியை அகற்றும் 'மெக்கானிக்கல் த்ரோம்பெக்டோமி' ஆகிய நவீன சிகிச்சைகளை, பக்கவாதம் ஏற்பட்ட சில மணி நேரத்திற்குள் மேற்கொண்டால் நோயாளிகளைக் காப்பாற்ற முடியும்.

பக்கவாதம் எளிதில் கண்டறியலாம்

பேச்சில் உளறல், குழப்பம், உணர்வு குறைதல் போன்ற அறிகுறிகள் படிப்படியாக ஏற்படும். ஆனால், இந்த அறிகுறிகளை மக்கள் தீவிரமாக எடுத்துக்கொள்வதில்லை.

சில வகை பக்கவாதத்தினால் தலைச்சுற்றல், குமட்டல் அல்லது மங்கலான பார்வை போன்ற அறிகுறிகள் காணப்படும். பெரும்பாலானோருக்கு இந்த அறிகுறிகள் பக்கவாதம் என்று தெரிவதில்லை.

எனவே, முகம் மாறுதல், கை செயலிழத்தல், பேச்சு தடைபடுதல், சரியாய் நேரத்தில் மருத்துவமனைக்குச் செல்லுதல் ஆகியவற்றைப் பின்பற்ற வேண்டும்.

பக்கவாத அறிகுறிகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்கும்

நோயாளியின் வயது, பாலினம், அவரது உடல்ரீதியான பிரச்னைகள் மற்றும் பக்கவாதத்தில் மூளையின் பாதிக்கப்பட்டுள்ள பகுதி ஆகியவற்றைப் பொருத்து பக்கவாத அறிகுறிகள் மாறுபடும். குறிப்பாக பெண்களுக்கு, ஆண்களைவிட அறிகுறிகள் குறைவாகவே இருக்கும். சோர்வு, குமட்டல் பெண்களிடையே காணப்படும் அறிகுறிகள். இது சாதாரணமானது என்று அவர்கள் தீவிரமாக எடுத்துக்கொள்வதில்லை.

அதுவே வயதானவர்களுக்கு குழப்பம், கவனச் சிதறல் ஏற்பட்டால் அது பக்கவாதத்தின் அறிகுறிகளாக இருக்கலாம்.

இளம் வயதினர் உணர்ச்சிகள் குறைதல் அல்லது உணர்வின்மை, பார்வைக் கோளாறுகள் போன்ற அறிகுறிகளை எதிர்கொள்ளலாம்.

அறிகுறிகள் தானாகவே சரியாகிவிட்டால், அது பக்கவாதம் அல்ல

பக்கவாத அறிகுறிகள் சில நிமிடங்களுக்குள் தானாகவே சரியாகிவிட்டால் தற்காலிக பக்கவாதம் அல்லது 'மினி-ஸ்ட்ரோக்' என்று அழைக்கப்படுகிறது. இது பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும் தீவிரமான பக்கவாதம் ஏற்படுவதற்கான அறிகுறியாக இருக்கலாம். அவர்களுக்கு சில நாள்கள் அல்லது சில வாரங்களில் தீவிரமாக பக்கவாதம் ஏற்படலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அவ்வாறு லேசான பக்கவாதம் ஏற்பட்டவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com